தேடுதல்

நோயுற்றோருடன் திருத்தந்தை நோயுற்றோருடன் திருத்தந்தை  (ANSA)

வாரம் ஓர் அலசல் – பிப்.11. நோயுற்றோர் உலக தினம்

திருஅவையின் உலக நோயாளர் தினமோ, விழிப்புணர்வு தினம் என்பதையும் தாண்டி, அவர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் தினமாக சிறப்பிக்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்புள்ளங்களே! உலக நோயாளர் தினத்தை இம்மாதம் 11ஆம் தேதி சிறப்பிக்க உள்ளோம். கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, பல்வேறு மதத்தினரும் உடல் நலம், உள்ளநலம் வேண்டி செல்லுமிடம் பிரான்சின் லூர்து நகர். அன்னை மரியா காட்சியளித்த இந்த இடம் செல்ல முடியாதவர்கள், லூர்து அன்னையிடம் நலம் வேண்டி செபித்து குணம் பெற்றுள்ளனர். அந்த அன்னை மரியாவின் திருவிழாவான பிப்ரவரி 11ஆம் தேதி உலக நோயுற்றோர் தினம் சிறப்பிக்கப்பட, 32 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாளை உருவாக்கினார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்.

உலகில் நோய்களுக்கென எத்தனையோ உலக தினங்கள் இருக்கின்றன. மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், புற்றுநோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், பார்கின்சன் நோய், கோமா, சிதைந்த மூளைக் கோளாறு அல்லது அல்சைமர் நோய், தசை சிதைவு, இரத்த சோகைக்கு வழிவகுக்கும் நாள்பட்ட தொடர்ச்சியான எலும்பு மஜ்ஜை செயலிழப்பு, பிரைன் டியூமர் எனப்படும் மூளைக்கட்டி, எய்ட்ஸ், அண்மைக்காலத்தில் கொரோனா பெருந்தொற்று என பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் உலகில் மக்களுக்கு இந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஊட்டும் விதமாக, இன்று, உலக நீரிழிவு நோய் தினம், உலக மலேரியா தினம், உலக அரிய நோய்கள் தினம்,   உலக தொழுநோய் ஒழிப்பு தினம், உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு தினம், உலக காச நோய் தினம், உலக மனநல தினம், உலக எயிட்ஸ் தினம், கல்லீரல் தினம், உலக இதய தினம், உலக அல்சைமர் தினம், உலக மூட்டு வலி தினம், உலக தைராய்டு தினம், ஏன், உலக விலங்கு வழி நோய்கள் தினம் என்று கூட பல தினங்களை நாம் சிறப்பித்து வருகிறோம்.

இவையெல்லாம் உடலோடு தொடர்புடைய நோய்கள் குறித்த விழிப்புணர்வு தினம். ஆனால், திருஅவையில் கொண்டாடப்படும் உலக நோயாளர் தினமோ, விழிப்புணர்வு தினம் என்பதையும் தாண்டி, அவர்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் தினமாக, அவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் தினமாக, அவர்களுக்காக நாம் இறைவேண்டல் செய்யவேண்டியதை நினைவூட்டும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சிலர் எண்ணலாம், நோயாளர் தினத்தை ஏன் கொண்டாட்டம் என்று சொல்கிறீர்கள் என்று. நோயை நாம் கொண்டாடவில்லை, மாறாக, நோயுற்றோர் காட்டும் நம்பிக்கை, துணிவு, இவற்றையும், நோயுற்றோர் மீது மற்றவர் காட்டும் அக்கறை, பரிவு இவற்றையும் நாம் கொண்டாடுகிறோம் என்பதுதான் உண்மை. பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், இந்த நோயோடு 14 ஆண்டுகள் எவ்விதம் வாழ்ந்தார் என்பதையும், நோயுற்றோர் பலருக்கு நம்பிக்கையாகத் திகழ்ந்தார் என்பதையும் நாம் அறிவோம். நோயுறுதல், நலமடைதல் என்ற அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் குறித்துக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஒருவர் நலம் அடைவதற்கு, முதலில், இறைவனின் அருள், இரண்டாவது, நோயாளியிடமும், அவரைச் சுற்றியிருப்போரிடமும் உருவாகும் நம்பிக்கை, மூன்றாவது, மருத்துவரின் திறன் என்ற இந்த வரிசைதான் உண்மை. மருத்துவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றினாலும், அவர்களைக் காப்பாற்றுவது இறைவன்தான். புகழ்பெற்ற அறிஞர் ஒருவர் ஒருமுறைக் கூறினார், "கடவுள் குணப்படுத்துகிறார்; குணப்படுத்தியதற்கான பணத்தை மருத்துவர் வசூல் செய்கிறார்" என்று.

இயேசுவின் புதுமைகளுள் ஒன்றை இப்போது முன்வைக்கிறோம். ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். இறைவன் விரும்பினார், அவர் நலமடைந்தார்.

இறையருளுக்குப்பின், எந்த ஒரு நோயாளிக்கும் மருத்துவ உதவிகள் மட்டுமல்ல, மனிதரின் உதவிகளும் நெருக்கமும் இன்றியமையாத தேவை. நலம் பெறுவதற்கு, மருத்துவ உதவிகள் தேவை என்பதை மறுக்கமுடியாது. ஆனால், ஒருவர் நலமடைவதற்குத் தேவையான முதல் படி, தான் நலமடைவேன் என்று அவர் உள்மனதில் எழும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உயிர்துடிப்புடன் வாழவைக்க நாம் வழங்க வேண்டிய உதவி, இதில் அடுத்த படி. இதைத்தான் திருஅவையின் நோயாளர் தினம் மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கின்றது. கொஞ்சம் அமர்ந்து சிந்தித்துப் பார்ப்போம். நாம் வாழ்வில் எதை பெற்றோம் கொடையாக? எதை நாம் கொடுப்போம் கொடையாக?, என்ற கேள்வி நமக்குள் எழவேண்டும். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலின் வாயிலாக நம்மிடம் எழுப்பும் வினா இது. உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக்கொண்டது தானா? என்பதுதான் அது. ஆம்.  நமது உயிராகட்டும், நமது வாழ்வாகட்டும், நமது உடலாகட்டும், நமது குடும்பமாகட்டும், அனைத்துமே நாம் இறைவனிடமிருந்து கொடையாக பெற்றுக்கொண்டவையே.

கொடை என்பது வெறுமனே பொருட்களை கொடுப்பதோ, பொருட்களின் உரிமையை ஒருவரிடமிருந்து மற்ற ஒருவருக்கு மாற்றுவதோ மட்டுமல்ல, அதற்கும் மேலாக கொடுப்பவரே கொடையாக மாறுவதாகும், அதன் வழியாக ஓர் உறவுப் பாலத்தை கட்டமைப்பதுமாகும். புனித அன்னை தெரேசாவைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். நோயாளிகளைப் பராமரிப்பதில் தன்னலமின்றி, மகிழ்ச்சியோடு செயலாற்றியவர் அவர். தானே களத்தில் இறங்கி, நோயாளிகளின் புண்களைத் துடைத்தவர். ஏழைகளுக்கும் நோயாளர்களுக்கும் அவர் செய்த அன்புப் பணியின் வழியாக இறைவனின் அன்பை இவ்வுலகறியச் செய்தவர். மொழி கடந்து, இனம் கடந்து, மதம் கடந்து நமது அன்பு, தன்னலமற்ற அன்பாக, அனைத்து மனிதர்களுக்குமானதாக  இருக்கவேண்டும் என்பதே அன்னை தெரேசா நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

உலக நோயாளர் தினத்தை சிறப்பிக்கவிருக்கும் நாம், இன்றைய சூழலின் நெருக்கடியில் நம்மையே நாம் நோய்களிலிருந்து காப்பாற்றும் வழிகள் குறித்தும் சிறிது எண்ணிப் பார்ப்போம்.

மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மாசுக்கேடு, இயற்கை பேரழிவு, இயந்திரமயமாக்கல், நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், பட்டினி போன்ற பல்வேறு காரணிகள் மக்களின் நலவாழ்வுக்கு பெரும் சவாலாக உள்ளன என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உலக அளவில் 2040ல் 64 கோடியே 20 இலட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிப்படுவார்கள் என உலக நலவாழ்வு நிறுவனத்தின் அறிக்கை ஒன்று அச்சுறுத்துகிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நோயும் நம்மை அவற்றின் பங்குக்கு பயமுறுத்தித்தான் வருகின்றன. திடீர் திடீரென பல்வேறு வைரஸ்களும் உருவாகி மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதை, அண்மையில் உலகத்தையே நிலைகுலைய வைத்த கெரோனா தொற்றுநோய் வழி அறிந்தோம். அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து இன்றும் தொடர்ந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

நலத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நம் மனித இனம் கண்டுள்ளது என்பதை மறுக்கமுடியாதுதான். நம்முடைய ஆயுட்காலம் அதிகரித்துள்ளதையும், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையும், பல மோசமான தொற்று நோய்கள் அழிக்கப்பட்டுள்ளதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், வேறு வேறு வடிவங்களில் நலப் பிரச்சனைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பலவேறு அடிகள் பட்டபின்னர்தான், நலவாழ்வு என்பதே உண்மையான மற்றும் மிகப்பெரிய செல்வம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் இரண்டும்தான் நம்மை உற்சாகமாக மற்றும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்பதை உணர்ந்து வருகிறோம். இங்குதான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்திவரும் இயற்கையை நேசி என்பது முதலில் வருகிறது. ‘இயற்கையை வணங்கு’ என்று நம் முன்னோர் அறிவுறுத்தியது வெறும் வார்த்தைகளல்ல.

விளைநிலங்களை எல்லாம் துண்டு போட்டு, வீட்டு மனைகளாக்கினோம். மணல் குவாரி, மண் குவாரி, கிரானைட் குவாரிகள் என தோண்டி பூமித்தாயைக் காயப்படுத்தினோம். தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் என்றுமே மக்காத குப்பையாக மாறி பூமியின் வளத்தை அழிக்க வழிவகுத்தோம். இத்தோடு விட்டோமா? தண்ணீரில் கலப்படம், குடிநீரில் சாக்கடை நீர் கலப்பது, ஆற்று நீரில் சாயப்பட்டறை மற்றும் தொழிற்சாலையின் கழிவுநீர் கலப்பது போன்ற செயல்களை அனுமதித்தோம். வாகனங்கள் விடும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும்புகை, புகைபிடிப்பதனால் உண்டாகும் புகை, இவை போன்ற பல காரணங்களால் சுத்தமான காற்றை அசுத்தமடைய வைத்தோம். ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்து, அல்ட்ரா வைலைட் கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கி, தோல் புற்றுநோய்கள் வருவதற்கு நாமே காரணம் ஆனோம்.

உலக நோயாளர் தினம் எனத் துவங்கி விட்டு, சுற்றுச்சூழல் அழிவைப் பற்றிக் கூறுகிறிர்களே என சிலர் கேட்பது புரிகிறது. நோய்களைக் குறித்துப் பேசும்போது, இவைகளை அகற்ற நம் பங்களிப்புக் குறித்துப் பேசும்போது, இயற்கைக்கு எதிராக நாம் ஆற்றிவரும் கொடுமைகளைக் குறித்து அலசி அவைகள் அகற்றப்பட முயல வேண்டியது அவசியம். இதைத்தான் வள்ளுவப் பெருந்தகையும் அழகாகக் கூறுவார், நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்று.

நோயை தடுப்பதற்கான, தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்துக் காண்பதும் சிறப்பு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழக்க வழக்கங்கள், அன்றாடம் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவை சரியான நேரத்துக்கு உட்கொள்தல், உணவில் பழங்கள் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்தல், உப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், சரியான இடைவெளியில் உடல் பரிசோதனை செய்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்தல், உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் மனதளவிலும் ஆரோக்கியம் தேவை என்பதை உணர்ந்து மன அழுத்தம் குறைய யோகா, தியானம் போன்றவைகளை அன்றாடம் செய்தல், இரவு தூங்கும் போதாவது கைபேசியை தூரவைத்தல், சரியான நேரத்துக்கு தூங்குதல், அதிகாலை எழுதல், சரியான நேரத்தில் தேவையான தண்ணீர் குடித்தல், புகை, மது போன்ற பழக்கங்களை அடியோடு விட்டொழித்தல், முடிந்த அளவு செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களை உபயோகித்தல், காடுகளை அழிப்பதைத் தவிர்த்தல், மழைநீரைச் சேகரித்தல், வீட்டிலும் வெளியிலும் ஒலி இல்லா சமுதாயத்தை உருவாக்க உழைத்தல்,  மரம் நடுதலை ஊக்குவித்தல் போன்றவைகள் வழி நம் நலவாழ்வைப் பேணுவதோடு, நம் வருங்கால சந்ததியினருக்கும் பெரும் சேவையாற்றியதாக இருக்கும்.

இயற்கையை நேசிப்போம். நலமுடன் வாழ்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2024, 14:31