மணிப்பூர் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியோருக்கு நன்றி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மோதல்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் மணிப்பூர் மாநில மக்களுக்கு மனிதாபிமான மற்றும் ஆன்மீக உதவிகளை வழங்கிவரும் இந்திய கத்தோலிக்க சமூகத்திற்கும், அரசுசாரா அமைப்புக்களுக்கும் தன் நன்றியை வெளியிடுவதாக அறிவித்துள்ளார் இம்பால் பேராயர் Linus Neli.
மணிப்பூர் மக்களுக்கு மனிதாபிமான மற்றும் ஆன்மீக உதவிகளை வழங்கிய கத்தோலிக்கர்களுக்கும் அரசுசாரா அமைப்புகளுக்கும் நன்றியை வெளியிடும் அதேவேளை, அமைதி நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் காத்திருப்பதாக தெரிவித்தார் மணிப்பூர் தலைநகர் இம்பாலின் பேராயர்.
இந்தியாவின் இலத்தீன், சீரோ மலபார், மற்றும் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை ஆயர்களை உள்ளடக்கிய CBCI ஆயர் பேரவையின் பெங்களூரு கூட்டத்தின்போது இதனை அறிவித்தார் பேராயர் நெலி.
மணிப்பூரில் அண்மை மோதல்களால் ஏறக்குறைய 180 பேர் கொல்லப்பட்டுள்ளது, பல வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது குறித்தும் எடுத்துரைத்த பேராயர், ஏறக்குறைய 300 கோவில்களும் கல்வி நிலையங்களும் அழிவுக்குள்ளாகியது, மற்றும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
வன்முறைகள் இன்னும் தொடர்ந்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய பேராயர், மணிப்பூரின் பொருளாதாரம் இந்த வன்முறைகளால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்