இந்திய கிறிஸ்தவர்கள் இந்திய கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

பொதுநலனை இலக்காகக் கொண்டு அரசியல் தலைவர்கள் செயல்பட வேண்டும்

கல்வி மற்றும் நலவாழ்வு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எதிராக மதமாற்றம் தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன

மெரினா ராஜ் - வத்திக்கான்

நாட்டின் பொதுவான நலனை மட்டுமே எப்போதும் தங்கள் இலக்காகக் கொண்டு இந்திய அரசியல் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டங்களுக்கு ஏற்றவாறு நீதி, நேர்மை, சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவத்துடன் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் இந்திய இலத்தீன், சீரோ மலபார், மற்றும் மலங்கரா தலத்திருஅவை ஆயர்கள்.   

பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் (அண்மையில்) இந்தியாவின் பெங்களூரூவில் நடந்த இந்திய இலத்தீன், சீரோ மலபார், மற்றும் மலங்கரா தலத்திருஅவை ஆயர்கள் ஏறக்குறைய 170 ஆயர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் போது இவ்வாறு தங்களது கருத்துக்களை ஆயர்கள் வெளியிட்டுள்ளதாக பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மகத்தான முன்னேற்றங்கள் இருந்தாலும் இந்த வளர்ச்சியின் பாதையானது கிராமப்புறங்களில் வறுமை நிலையில் வாழும் மக்களையும் உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும் என்றும், தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுதல், ஜனநாயக அமைப்புக்களைப் பாதுகாத்தல் போன்றவை மிக முக்கியமானது என்றும் வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள்.

நாட்டின் முக்கியமான ஜனநாயக அமைப்புகள் பலவீனமடைந்து வருகின்றன என்றும், கூட்டாட்சி அமைப்பு, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படவேண்டிய ஊடகங்கள் போன்றவை தங்கள் பங்கை சிறப்பாக நிறைவேற்றவில்லை என்ற பரவலான கருத்து உள்ளதாகவும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் ஒருபோதும் பறிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சேதப்படுத்துகின்ற மற்றும் ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கின்ற வகையில் செயல்கள் நடைபெற்று வருகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளனர்.

கல்வி மற்றும் நலவாழ்வு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எதிராக மதமாற்றம் தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள ஏறக்குறைய 2.3 விழுக்காடு மக்களில் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர்கள் என்றும் எடுத்துரைத்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டி இன மக்களுக்கும், குக்கி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலை எடுத்துரைத்து மகத்தான மனித உயிர்களும், வாழ்வாதாரங்களும் இம்மோதலினால் பாதிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலை மாற நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான தீவிர செயல்முறையைத் தொடங்க அனைத்து அரசு மற்றும் சமயங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றக் கூட்டு முயற்சிக்கு அழைப்புவிடுத்துள்ளனர் ஆயர்கள். (FIDES)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2024, 14:10