அனைவருக்கும் வீடுகள் வழங்கும் இந்திய மறைமாவட்ட திட்டம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தவக்கால முயற்சிகளின் ஒரு பகுதியாக வீடற்றோருக்கு வீடுகளை கட்டித் தருவதை இந்தியாவின் மங்களூரு மறைமாவட்டம் கையிலெடுத்துள்ளதாக அறிவித்தார் அம்மறைமாவட்ட ஆயர் Peter Paul Saldanha.
தவக்காலத்தில் கத்தோலிக்கரின் பிறரன்புக்கு அழைப்பு விடுத்து, கடந்த மூன்றாண்டுகளாக ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித் தருவதில் மிகுந்த ஆர்வமுடன் செயல்படும் மங்களூரு மறைமாவட்டம், கடந்தாண்டில் 75 புதிய வீடுகளைக் கட்டி மறைமாவட்டத்தின் ஏழைகளுக்கு வழங்கி உதவியுள்ளது.
கத்தோலிக்க மக்களின் நன்கொடைகளுடன் கட்டப்படும் இந்த வீடுகள், எட்டு இலட்சம் மதிப்புடையதாகவும், 650 முதல் 700 சதுர அடி கொண்டதாகவும் இருக்கும்.
வீடற்றோரின் நிலத்தில் கட்டிக் கொடுக்கப்படும் இந்த வீட்டுக்கான செலவில் 51 விழுக்காட்டை மங்களூரு மறைமாவட்டம் வழங்குவதுடன், ஏனையத் தொகையை அவ்வீடு கட்டப்படும் பகுதியின் பங்குதளமும் உடமையாளரும் வழங்கி வருகின்றனர்.
2019ஆம் ஆண்டு மங்களூரு மறைமாவட்டம் நடத்திய ஆய்வின்படி, ஏறக்குறைய 500 கிறிஸ்தவர்கள் சொந்த வீடுகளின்றி வாழ்ந்துவருவதாக அறிந்ததைத் தொடர்ந்து, இவர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரவேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் இதற்கெனவே நிதி திரட்டத் துவங்கியது இம்மறைமாவட்டம்.
கத்தோலிக்கர்களுக்கு மட்டுமல்ல, வீடற்ற பிற மதத்தினரும் விண்ணப்பித்தால் அவர்களுக்கு உதவவும் மறைமாவட்டம் தயாராக இருக்கின்றது என்றார் ஆயர் Saldanha.
கர்நாடகாவின் 6 கோடியே 10 இலட்சம் மக்கள் தொகையில் 1.87 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்