பட்டினியால் வாடும் இந்திய பூர்வகுடி கிறிஸ்தவர்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பூர்வகுடி மக்களின் தலைவர்கள் ஏறத்தாழ 17,000 பேரை பட்டினியில் இருந்து காப்பாற்ற கூட்டாட்சி தலையீட்டை நாடியுள்ளனர் என்றும், இன வன்முறையால் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அரசின் நிவாரண முகாம்களுக்கு உணவு வழங்குவதை அதிகாரிகள் நிறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது ஆசிய செய்தி நிறுவனம்.
சுராசந்த்பூர் மாவட்டத்தின் துணை ஆணையர், பிப்ரவரி 16 முதல் நிவாரண முகாம்களுக்கு உணவு தானியங்களை வழங்க மறுத்துவிட்டார் என்றும், இது ஆயிரக்கணக்கானோரை பட்டினியில் தள்ளியுள்ளது என்றும், பூர்வகுடி மக்களின் தலைவர்கள் அமைப்பு (ITLF) பிப்ரவரி 26 அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளித்துள்ளது என்றும் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
ஒன்றிய அரசு அவசரமாகத் தலையிட்டு உணவு விநியோகத்தை விரைவில் தொடங்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது என்று உரைக்கும் அச்செய்திக் குறிப்பு, பூர்வ குக்கி இன மக்கள், பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், சுராசந்த்பூர் மாவட்டத்தில் அவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றும், முகாம்களுக்கு இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் தெரிவிக்கிறது.
இந்து பெரும்பான்மையான மெய்தி இனச் சமூகத்திற்கும் குக்கி இனப் பூர்வகுடி சமூகத்திற்கும் இடையிலான இன வன்முறையைத் தொடர்ந்து, மணிப்பூரில் ஏறத்தாழ 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கொல்லப்பட்ட ஏறக்குறைய 200 பேரும், பெரும்பாலும் பூர்வகுடிகளான குக்கி இனக் கிறிஸ்தவர்கள். மேலும் இச்சம்பவத்தின்போது, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ இல்லங்கள், ஏறத்தாழ 350 வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட கிறிஸ்தவ நிறுவனங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. (ASIAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்