ஹெயிட்டி சமுதாயம் பயங்கரவாதத்தால் சிதைந்து முடங்கிக் கிடக்கிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஹெயிட்டியில் கொலைகள் மற்றும் கடத்தல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால், அந்நாட்டு மக்களின் துன்பங்களுக்கு முடிவுகட்டுமாறு கடவுளின் பெயரால் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளது அந்நாட்டின் ஆயர் பேரவை.
ஹெயிட்டியில் நிலவும் தற்போதைய சூழல் குறித்தும், கடத்தல்காரர்களால் தலத்திருஅவை அனுபவித்து வரும் துயர்கள் குறித்தும் வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் விரிவாக விளக்கியுள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவையின் துணைத்தலைவர் ஆயர் Pierre-André Dumas
கடந்த மூன்று ஆண்டுகளாக ஹெயிட்டியில் அதிகளவில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கடத்தல்கள் ஆகியவை நடந்துள்ளன என்று ஏறக்குறைய பத்திற்கும் மேற்பட்ட ஆயர்கள் ஹெயிட்டி அரசு அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியதாக நேர்காணலின்போது கூறிய ஆயர் Dumas அவர்கள், தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து, நாட்டைக் காப்பதில் அறிவார்ந்த முடிவை எடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தினர் என்றும் கூறியுள்ளார்.
நாட்டில் நடக்கும் கலவரங்களையும் கிளர்ச்சிகளையும் கண்டு தான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாகவும், இத்தகையத் துயரங்களை இனிமேலும் மக்களால் தாங்கமுடியாது என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள ஆயர் Dumas அவர்கள், இறப்பு மற்றும் வறுமையால் மக்கள் அதிகம் சோர்வடைந்துள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
ஹெயிட்டியின் ஆயர் பேரவை தலத்திருஅவை மக்களின் அனைத்துத் துயரங்களிலும் இணைந்துள்ள அதேவேளையில், அமைதியான முறையில் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்பதையே அது எப்போதும் விரும்புகிறது என்பதையும் வலியுறுத்தியுள்ளார் ஆயர் Dumas.
தனது விசுவாசிகளுக்குத் தான் எழுதியுள்ள தவக்காலம் குறித்த செய்தியில், 'அமைதி மற்றும் சகோதர அன்பினால் உருவாக்கப்பட்ட உண்மையான சுதந்திரத்தை நோக்கிய பயணத்திற்கு' என்ற தலைப்பில் தனது சிந்தனைகளை வழங்கியுள்ளதாகவும் அந்நேர்காணலில் தெரிவித்துள்ளார் ஆயர் Dumas.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்