விடைதேடும் வினாக்கள் - என்னால் முடியும் என நம்புகிறீர்களா?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இயேசு தொழுகைக்கூடத் தலைவனின் வீட்டில் புதுமை ஒன்றை நிகழ்த்திவிட்டுச் சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்கின்றனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வருகின்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்கிறார்கள். பின்பு, அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்கிறார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன.
மத்தேயு நற்செய்தியின் ஒன்பதாம் பிரிவின் இறுதிப் பகுதியில் கூறப்பட்டிருக்கும் இயேசுவின் கேள்வியான, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்பது குறித்து இணைந்து சிந்திப்போம். இன்றைய நம் நிகழ்ச்சி, நம் நம்பிக்கையைப் பற்றியதாக, நம் விசுவாசம் பற்றியதாக இருக்கும்.
நற்செய்தியாளர் மத்தேயு, 5,6,7 ஆகிய மூன்று பிரிவுகளில், இயேசுவின் படிப்பினைகளை, தொகுத்து வழங்கியுள்ளார். அங்குதான் மலைப்பிரசங்கமும் வருகிறது. அந்த மூன்று பிரிவுகளைத் தொடர்ந்து, 8.9 ஆகிய இரு பிரிவுகளில், இயேசு ஆற்றிய ஒரு சில புதுமைகளை பதிவு செய்துள்ளார். தொழுநோயாளர், நூற்றுவர் தலைவரின் பையன், பேதுருவின் மாமியார், பேய் பிடித்த இருவர், முடக்குவாதமுற்றவர், இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தொழுகைக்கூடத் தலைவரின் மகள் ஆகியோரை இயேசு குணமாக்கும் ஏழு புதுமைகள், இவ்விரு பிரிவுகளில் கூறப்பட்டுள்ளன. இதே ஏழு புதுமைகளை, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் ஆகிய நற்செய்திகளிலும், ஒரு சில வேறுபாடுகளுடன் நாம் வாசிக்கிறோம். இந்த ஏழு புதுமைகளைத் தொடர்ந்து, 9ஆம் பிரிவின் இறுதிப் பகுதியில், பார்வையற்ற இருவரையும், பேச்சிழந்த ஒருவரையும் இயேசு குணமாக்கும் புதுமைகளை, நற்செய்தியாளர் மத்தேயு மட்டும் பதிவு செய்துள்ளார். 9ஆம் பிரிவின் இறுதிப் பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து பதிவாகியுள்ள இப்புதுமைகளை, இயேசு, தன் பணிவாழ்வின் துவக்கத்தில் செய்ததாக மத்தேயு கூறியுள்ளார்.
பார்வையற்ற இருவர் இணைந்து பயணிக்கின்றனர். இருவருடைய இலட்சியமும் ஒன்றாக இருக்கிறது. இருளுக்குள்ளே வாழ்கின்ற வாழ்க்கை பழகிவிட்டது, இது போதும் என நினைக்காமல் வெளிச்சத்தை அடைய வேண்டும் என்னும் இலட்சியத்தோடு இருவரும் பயணிக்கின்றனர். ஒரு மீட்பரைத் தேடும் நிலையை இங்கு நாம் காண்கிறோம். யார் அதைத் தர முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருந்தனர். எனவே தான் இயேசுவை அவர்கள் பற்றிக் கொண்டனர். அவர்கள் இயேசுவிடம் தங்கள் தேவையை உரக்கக் கத்தி தெரிவிக்கின்றனர். மனம்தளராமல் அவர்கள் தொடர்ந்து இயேசுவை நோக்கி மன்றாடுகின்றனர். “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என குரலெழுப்புவதன் வழியாக அந்த இருவரும் இயேசுவை விண்ணப்பிக்கின்றனர். இயேசு மெசியா என்பதை அறிந்து கொண்டு அவரைப் பின்பற்றுகின்றனர் அவர்கள். “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என இயேசு கேட்கிறார். இருவரும் ஒரே குரலாக, ‘ஆம்’ என சொல்கின்றனர். “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்கிறார் இயேசு. விசுவாசம் இல்லாத இடங்களில் இயேசுவின் அற்புதங்கள் நிகழ்வதில்லை என்ற பெரிய பாடம் நமக்கு கிட்டுகிறது.
இயேசுவைத் தேடி வந்த பார்வையற்றோர் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாய் இருந்ததோடு, ஒருவருக்கொருவர் வழிகாட்டியாகவும் வாழ்ந்திருக்கவேண்டும். இயேசு என்ற போதகரைப் பற்றி அவ்விருவரும் வெவ்வேறு தருணங்களில் கேட்டறிந்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்திருக்கவேண்டும். அவர்கள் பகிர்ந்துகொண்ட எண்ணங்களின் விளைவாக, அவர்களுக்குள் இயேசுவைக் குறித்த நம்பிக்கை வளர்ந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையே, 'தாவீதின் மகனே' என்ற அடைமொழியில் ஒரு விசுவாச அறி்க்கையாக வெளியானது. “நம்பிக்கை என்ற சக்தியால்தான் மனிதர் வாழ்கின்றனர். அது இல்லாத போது மனிதர் வீழ்ச்சியடைகின்றனர் என்பார் வில்லியம் ஜேம்ஸ் என்ற அறிஞர்.
தாவீது மன்னர் யூத மக்கள் வரலாற்றில் தலைசிறந்த அரசராக விளங்கியவர். அவர் வழித்தோன்றலாக மெசியா வருவார் என்னும் செய்தி யூத மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தாவீதின் மகன் என்பதும் மெசியா என்பதும் ஒரே பொருளைக் தருபனவாக அமைந்தன. இங்கு, இயேசுவை மெசியா என அடையாளம் கண்டு அதில் முழு நம்பிக்கைக் கொண்டிருந்த அந்த இரு மனிதரும் உண்மையிலேயே புறப்பார்வையற்றவர்களாக இருந்தாலும் அகப்பார்வை கொண்டிருந்தார்கள் என்பதை காண்கின்றோம். இயேசுவை தாவீதின் மகனே என பார்வையற்றோர் அழைக்கும்போது, இறைவாக்கினர் எசாயா, மெசியாவைக் குறித்து கூறுவது ஞாபகம் வருகிறது. “அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்” (எசாயா 35:5-6) என வாசிக்கிறோம். இயேசு தாவீதின் மகனாக, மெசியாவாக இருப்பதால், பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும் என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகள் தம்மில் நிறைவேறும் என அந்த பார்வையற்றோர் நம்பியதால் கண்கள் திறக்கப்பட்டனர்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடல் 11ஆம் பிரிவின் இறைவார்த்தை 6ல் நாம் வாசிப்பது இதைத்தான். “நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராய் இருக்க முடியாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும், அவரைத் தேடிசெல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும்” என்கிறார் புனித பவுல்.
நற்செய்தியில் வரும் அந்த இரண்டு பார்வையற்றவர்களும், இயேசுவை தேடிச்சென்றால் அவர் பார்வையளிப்பார், தக்க கைம்மாறு தருவார் என்று நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கையே அவர்களுக்கு மீட்பளித்தது.
கபிரியேல் வானதூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன நிகழ்வில், மரியா தூதரிடம், 'இது எப்படி முடியும்? நான் கன்னி ஆயிற்றே' எனத் தயக்கம் காட்டுகிறார். 'கடவுளால் முடியாதது எதுவும் இல்லை' என்று தூதர் சொன்னவுடன், மரியா சரணாகதி அடைகின்றார். 'இறைவனால் முடியும்' என்று மரியா நம்பியதால் மீட்பர் இவ்வுலகில் பிறந்தார். இதுபோல், 'இவரால் முடியும்' என்று அந்த பார்வையற்றவர்கள் நினைத்ததால் பார்வை பெற்றனர்.
தாவீதின் மகனே என அழைத்து தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி பார்வைக்காக குரலெழுப்பிய பார்வையற்றோரிடம், இயேசு இந்த கேள்வியை கேட்கவேண்டிய அவசியம் என்ன என்று நாம் சிந்திப்பது இயல்பே.
அவர்கள் எதிர்பார்த்ததை இயேசுவால் அளிக்க முடியும் என அவர்கள் உண்மையாகவே நம்ப வேண்டும் என்பதுதான் இயேசுவின் கோரிக்கை. அந்த மனிதர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவர்களின் கண்களைத் திறக்கின்றார். பார்வை பெற்ற மனிதர்கள் ஒருவிதத்தில் புது வாழ்வு பெற்றார்கள் எனலாம். பார்வையற்ற மனிதர்கள் புறக்கண்பார்வை பெறுவதற்கு முன்னரே அகக்கண் திறக்கப்பட்டோராக இயேசுவை அணுகியதையும் பார்க்கின்றோம்.
இந்த கேள்வியின், அதாவது, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என இயேசு கேட்ட கேள்வியின் பின்னணியைக் கொஞ்சம் நோக்குவோம். தொழுகைக்கூடத் தலைவனின் வீட்டில் சிறுமியை உயிர்ப்பித்த புதுமையை நிகழ்த்திவிட்டு இயேசு வெளியே வருகிறார். இந்த இரு பார்வையற்றோரும் இயேசுவை நோக்கி தாவிதின் மகனே எங்களுக்கு இரங்கும் என குரலெழுப்பி பின்தொடர்கின்றனர். அவரின் வீட்டுக்குள்ளும் வருகின்றனர்.
தற்போது தான், அதாவது தொழுகைக்கூடத் தலைவனின் வீட்டுக்குச் செல்லும் வழியிலும், தொழுகைக்கூடத் தலைவனின் வீட்டிலும் இயேசு நிகழ்த்திய இரு புதுமைகளை இவர்கள் பார்க்காவிடினும், மக்கள் கூட்டம் பேசுவதை இவர்கள் இருவரும் நிச்சயம் கேட்டிருக்க வேண்டும். இதே பின்னணியில் வந்த இயேசுவின் இந்த கேள்விக்குள் பல கேள்விகள் அடங்கியுள்ளன. நான் செய்த புதுமைகளைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டதை நம்புகிறீர்களா? உங்களுக்கு என்னால் பார்வை தரமுடியும் என நம்புகிறீர்களா? தாவீதின் மகனே என மெசியாவாக என்னை அழைத்தது உங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடா? என கேள்விகள் உள்ளிருக்கின்றன. இதற்கெல்லாம் ஒரே பதிலாக அவர்கள் இருவரும் ஒருமித்த குரலில், ஆம் ஐயா என விசுவாசப்பிரகடனம் செய்கின்றனர். நம் வாழ்வை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாமும் இந்த புதுமைகளையெல்லாம் இயேசு ஆற்றினார் என உறுதியாக நம்புகிறோம். ஆனால், நம் வாழ்விலும் இயேசு புதுமைகளை ஆற்றுவார் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறதா?. மனம் திறந்து உங்களுக்குள்ளேயே, உங்களுக்கு மட்டுமே கேட்கும்படியாக சொல்லிப் பாருங்கள். நம் நம்பிக்கை, நம் கடுகளவு விசுவாசம்கூட மலையையும் அசைக்கும் என்பது நமக்குள் உறுதியாக இருக்கிறதா?. எந்த மலையையும் நம்மால் அசைக்க முடியாவிட்டாலும் நாம் கடவுள் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறோமே அதுதான் விசுவாசம். என்னை மீட்பவர், குணப்படுத்துபவர், மன்னிப்பவர், விண்ணப்பங்களுக்கு பதிலளிப்பவர் இயேசுவே என மனதில் நம்பும் நாம், இக்கட்டான சூழலிலும் அந்த உறுதிப்பாட்டிலேயே நிலைத்திருக்கிறோமே அதுதான் விசுவாசம். அத்தகைய விசுவாசத்தையே அந்த பார்வையற்றோரிலும் எதிர்பார்த்த இயேசு, நம் ஒவ்வொருவரிலும் அது வெளிப்படையாக தெரியப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார். நம்மைக் குணைப்படுத்தவும், மாற்றியமைக்கவும் கடவுளுக்கு அதிகாரம், வல்லமை இருக்கிறது. ஆனால், நம் விசுவாசம் ஒரு முன்நிபந்தனையாக அங்கு நிற்கிறது. இதைத்தான் நாம் மாற்கு நற்செய்தி 6ஆம் பிரிவில், “இயேசு தன் சொந்த ஊரில் உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்” (மாற்கு 6:5 ) என வாசிக்கின்றோம். விசுவாசம் வழியாகத்தான் புதுமைகள் இடம்பெற முடியும். இந்த இரு பார்வையற்றவர்களைப்போல் நாம் முதலில் அவரை தேடிச் செல்ல வேண்டும். இதைத்தான் புனித பவுல் எபிரேயருக்கு எழுதிய திருமடலில், “தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்” (எபி 7:25) எனத் தெளிவாக உரைக்கிறார். நம் விசுவாசமே அனைத்திற்கும் முதல் கூறு. நம் ஒத்துழைப்பின்றி நமக்கான நன்மை எதுவும் கிடைப்பதில்லை. கடவுள் ஒவ்வொருமுறையும் நம்மைப் பார்த்துக் கேட்கிறார், “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?”. நாம் ஆம் என்று சொன்னால், அவரின் பதில் நிச்சயமாக, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்பதாகத்தான் இருக்கும். நம் விசுவாசமும் இயேசுவின் வல்லமையும் ஒன்றிணையும்போது அரும்பெரும் செயல்கள் நிகழ்கின்றன.
நம் விசுவாசம் பொறுமையையும், விடாமுயற்சியையும், பணிதலையும் எதிர்பார்க்கின்றது. இதைத்தான் பார்வையற்றோர் கண்திறக்கப்பட்ட நிகழ்விலும் பார்க்கின்றோம். நம் விசுவாசம் என்பது அரும்பெரும் செயல்கள் ஆற்றுவதற்கான அதிகாரம் அல்ல, மாறாக, மாற்ற இயல்வதை மாற்றவும், அதற்குமேல் அதை ஏற்கவும் வல்லமை தருவது. அந்த வரத்தைத் தருமாறு நாம் இறைவனை நோக்கி விசுவாசத்துடன் வேண்டுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்