இலண்டனில் ஆண் புலம்பெயர்ந்தோருக்கான புதிய தங்கும் இல்லம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிரித்தானிய இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகத்திற்கு, நான் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களின் உதவி இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் இந்நேரம் வீடற்றவர்களாகவும் மிகவும் மோசமான சூழ்நிலையிலும் இருந்திருப்போம். எல்லாவற்றிற்கும் நன்றி என்று இலண்டனைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் ஒருவர் கூறியதாகத் தெரிவித்துள்ளது ICN எனப்படும் செய்தி நிறுவனம்.
இலண்டனில் Amani இல்லம் என்ற பெயரில் ஆண் புலம்பெயர்ந்தோருக்காகப் புதிய இல்லம் ஒன்றைக் கட்டியெழுப்பி அவ்வில்லத்திற்கு முதல் குடியிருப்பாளர்களை அந்நாட்டின் இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகம் வரவேற்றுள்ள வேளை, இவ்வாறு அந்நபர் கூறியதாக அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
மேலும் ஆண் புலம்பெயர்ந்தோருக்காக எழுப்பப்பட்டுள்ள இந்தப் புதிய இல்லம், அந்நாட்டிலுள்ள இயேசு சபை அருள்பணியாளர்கள், பிற துறவு சபையினர் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஆதரிப்போரின் கணிவு நிறைந்த தாராள மனப்பான்மையால் சாத்திமாகியுள்ளது என்றும் அந்நபர் தெரிவித்ததாக அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, நிலையான தங்குமிடத்திற்காக நான் தினமும் இறைவேண்டல் செய்து வந்தேன், Amani இல்லம் எனது இறைவேண்டலுக்கு இறைவன் அளித்த பதில் என்றும், எனது அன்றாட வாழ்வை நான் கவனித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வில்லத்தில் நான் விரும்பும்போது தூங்கவும், எப்போது வேண்டுமானாலும் சாப்பிடவும் முடியும் என்றும் மகிழ்வுடன் கூறினார் இவ்வில்லத்தில் குடியேறியுள்ள புலம்பெயர்ந்தோரில் மற்றுமொரு நபர்.
எங்களது வாழ்வின் கதைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், நாங்கள் உடன்பிறந்த உறவில் வளர்வதற்கும், நான் இந்தப் புலம்பெயர்ந்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வதற்கும், மன அழுத்தம் மற்றும் பதற்றத்திலிருந்து விடுபட்டு மன அமைதியுடன் வாழ்வதற்கும் இப்புதிய இல்லம் நல்லதொரு வாய்ப்பையும் சூழலையும் வழங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார் அந்நபர்.
ஒருவருக்கொருவர்மீது மரியாதை மற்றும் இரக்கம், இணைந்து பணியாற்றுதல், வீட்டின் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளல் மற்றும் துயரமான வேளைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் ஆகிய மதிப்பீடுகளைக் கொண்ட இல்லமாக இது காட்சியளிக்கிறது என்றும், இந்த Amani இல்லம் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான இடம் மட்டுமல்ல, புதிய நட்புகள் பிறக்கும் இடமாகவும் அமைந்துள்ளது என்றும் இவ்வில்லத்திற்குப் புதிதாகக் குடிவந்துள்ள புலம்பெயர்ந்தோரில் பலர் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்