தேடுதல்

தவக்காலம் தவக்காலம்  

பல்சுவை - மாற்றத்தின் காலமாம் தவக்காலம்

தவக்காலம் நோன்பின் காலம், அருளின் காலம். மனமாற்றத்தின் காலம். நமது பழைய பாவ இயல்பை விடுத்து புதிய இயல்பை அணிந்து கொண்டு புதுவாழ்க்கை வாழ நம்மைத் தூண்டும் காலம்.
மாற்றத்தின் காலமாம் தவக்காலம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

“நமது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, உள்ளத்திற்கு எழுச்சியூட்டி, நம் உடலை ஆவிக்குரியதாக மாற்றும் ஆற்றல் கொண்டது நோன்பு” என்பார், இறையியலாளர் ஹிப்போ நகரத்து புனித அகுஸ்தீன். உணவையும், உடல் சார்ந்த தேவைகளையும் ஒறுப்பதல்ல, மாறாக, இழித்துரைத்தல், பழித்துரைத்தல் போன்ற தவறுகளை ஒறுத்து, அதிலிருந்து விலகி வாழவே, நோன்பு நம்மைத் தூண்டுகின்றது என்று கூறுவார் திருத்தந்தை புனித பெரிய லியோ. இப்படியாக நோன்பு, ஒறுத்தல் என்னும் நற்பண்புகளை நம்மில் வளர்த்து, நாம் இறைவனுடனான உறவில் ஆழப்பட, நமக்கு அறிவுறுத்தும் காலம் தான் தவக்காலம். வருகின்ற பிப்ரவரி 14 புதன்கிழமை சாம்பல் புதனுடன் அதாவது (திருநீற்றுப்புதனுடன்) ஆரம்பமாகும் தவக்காலம் பற்றிய கருத்துக்களை இன்றைய நம் பல்சுவையில் காணலாம்.

உலகமெங்கும் வாழக்கூடிய கிறிஸ்தவ மக்களால் 40 நாட்கள் கடைபிடிக்கப்படும் ஒரு காலம் தவக்காலம். இறைவேண்டல், தவமுயற்சிகள், தருமம் செய்தல், தன்னொறுத்தல் போன்ற நற்செயல்களை ஊக்குவிக்க பயன்படும் காலம். அதிலும் குறிப்பாக பிறரன்பு செயல்கள், நோன்பு ,செபம் என்னும் மூன்று செயல்களை அதிகமாக வலியுறுத்தும் காலம். நமக்காக துன்பங்கள் பட்டு இறந்து உயிர்த்த இயேசுவிற்காக நாம் நம்மை ஒறுத்து மேற்கொள்ளும் தவ நாட்கள் இவை.

தவக்காலத்தின் வரலாறு?

தவக்காலம் என்ற ஒன்று எப்படி உருவானது? கிறிஸ்து இயேசு இறந்து உயிர்த்து விண்ணகத்திற்கு எழுந்தருளிச்சென்ற பிறகு, திருத்தூதர்கள் இயேசு தங்களுக்கு விட்டுச்சென்ற பணியினை சிறப்பாகச் செய்தனர். அவரது போதனைகளாலும் நடைமுறைச் செயல்பாடுகளாலும் கவரப்பட்ட அவர்கள், அதனையே தாங்கள் சந்தித்த மக்களுக்கும் எடுத்துரைத்தனர். இயேசு இறந்து, உயிர்த்த, வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையை அனைவரும் ஒன்றாக இணைந்து, கடவுளைப் புகழ்ந்து பாடல்கள் பாடுதல், அப்பம் பிடுதல் உடைமைகளைப் பகிர்தல் போன்றவற்றின் வழியாக சிறப்பித்தனர். இவ்வாறாக அவரின் இரண்டாம் வருகைக்காக மகிழ்வுடனும் ஆவலுடனும் காத்திருந்தனர் திருத்தூதர்கள். யூதர்களின் ஓய்வு நாளான சனிக்கிழமையை விட ஞாயிற்றுக்கிழமையை வெகுவிமரிசையாக சிறப்பித்தனர். திருத்தூதர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றிய சீடர்களின் இறப்பிற்கு பின் கிறிஸ்தவ சமயம் சார்ந்த கருத்தியல்கள் உருவாக ஆரம்பித்தன. இயேவின் பிறப்பு தொடங்கி அவர் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற நாள்கள் இறையியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு அவைகளை சிறப்பாக நினைவுகூரும் வழக்கம் உருவானது. தொடர்ந்து ஏற்பட்ட இறையியல் வளர்ச்சியால், யூதர்களின் பாஸ்கா விழாவையொட்டி இயேசு கிறிஸ்துவின் இறப்பையும் உயிர்ப்பையும் நினைவுகூரும் வழக்கமானது இரண்டாம் நூற்றாண்டில் உருவானது. கிழக்கத்திய திருஅவையில் நோன்பிருக்கும் காலமானது மூன்றாம் நூற்றாண்டில் உருவானது. அதன் பின் உயிர்ப்பு பெருவிழாவிற்கு முன் 3 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் ஒருசந்தி அதாவது ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ளும் வழக்கமானது உரோம் மற்றும் மேற்கத்திய திருஅவையில் உருவாக ஆரம்பித்தது. நான்காம் நூற்றாண்டில் உரோமப் பேரரசர் கான்ஸ்டாண்டின் நோபில், கிறிஸ்தவ சமயத்துக்கு அனுமதியும் அங்கீகாரமும் அளித்ததைத் தொடர்ந்து, நிசேயா திருச்சங்கம் (325) இயேசு 40 நாள் பாலைவனத்தில் உண்ணா நோன்பிருந்ததைச் சுட்டிகாட்டியது. எனவே உயிர்ப்புப் பெருவிழாவிற்கு முன்பு தயாரிப்பின் காலமாக 40 நாள்கள் நோன்பிருந்து தவம் மேற்கொள்ள வலியுறுத்தியது திருஅவை. எனவே ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்திற்கு ஆறு நாள்கள் என்ற முறையில் 6 வாரங்கள் தவக்கால நாள்களாகவும், அதற்கு அடுத்த வாரம் புனித வாரமாகவும் அனுசரிக்கப்பட்டது. கிழக்கத்திய திருஅவையினர் சனி ஞாயிறு தவிர்த்து வாரத்திற்கு 5 நாட்கள் என 8 வாரங்களைத் தவக்கால நாள்களாக அனுசரித்து வந்தனர்.

கான்ஸ்டாண்டின் நோபில் பேரரசரின் தாய் ஹெலேனா இயேசு அறையப்பட்ட சிலுவையைக் கண்டெடுத்து ஆலயம் நேர்ந்தளித்தார். அதனைத் தொடர்ந்து எருசலேமிற்கு வரும் திருப்பயணிகளின் எண்ணிக்கையும் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து இயேசு இறந்த நாளான புனித வெள்ளியன்று திருச்சிலுவை ஆராதனையும், பாடுகள் குறித்த திருவழிபாட்டுச் சடங்குகளும் உருவாக ஆரம்பித்தன.

5ம் நூற்றாண்டில் வாழ்ந்த தொடக்ககால கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை மிக சிறப்பாக ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்நாட்களில், திருமுழுக்கு பெற விரும்புபவர்கள், பெரிய பாவம் செய்தவர்கள் தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்யும் விதமாக மூன்று நாட்கள் தங்களையே வருத்தி, நோன்பிருந்து, சாம்பல் பூசி தவமிருந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டனர்.

ஆறாம் நூற்றாண்டில், புனித வாரத்தின் முதல் நாள் குருத்து ஞாயிறாகக் கொண்டாடும் வழக்கமானது இஸ்பெயின் நாட்டில் உருவானது. புனித வியாழனில் திருஎண்ணெய்கள் மந்திரிக்கும் திருத்தைல திருப்பலிகளும் கொண்டாட ஆரம்பமாகின. ஏழாம் நூற்றாண்டில் தொலேதோ சங்கத்தின் விளைவாக ஒரு சில இடங்களில் மட்டுமே நடைபெற்று வந்த பாதம் கழுவும் சடங்கு திருஅவை முழுவதும் செயல்படுத்தப்பட்டது. எட்டாம் நூற்றாண்டில் குருத்தோலை மந்திரிக்கும் வழக்கமும், ஒன்பதாம் நூற்றாண்டில் புனித வியாழன் முதல் புனித சனிக்கிழமை வரையிலான நாள்கள் உயிர்ப்பிற்கான சிறப்பு முன்தயாரிப்பு நாள்களாகக் கருதப்பட்டன. பத்தாம் நூற்றாண்டில் சிலுவையில் அறையப்பட்ட உடலை அதிலிருந்து இறக்கி அடக்கம் செய்யும் (தூம்பா) வழிபாடுகளும் கிபி 1091 ஆம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் உர்பான் அவர்கள் முயற்சியால் தவக்காலத்தின் முதல் நாளானது சாம்பல் புதனுடன் ஆரம்பாகும் வழக்கம் உருவானது. யேசுவின் பாடுகளை 14 நிலைகளில் நினைத்து செபிக்கும் சிலுவைப்பாதை பக்தி முயற்சியானது 1217ஆம் ஆண்டில் தூய பிரான்சிஸ் அசிசியாரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இப்படியாக படிப்படியாக தவக்காலமும் அதில் நாம் கடைபிடித்து வரும் சடங்குமுறைகளும் உருப்பெற ஆரம்பித்தன. உயிர்ப்பு பெருவிழாவிற்கு முன் உள்ள 6 வாரங்கள் பாவம் செய்தவர்கள், மனம் மாற விரும்புபவர்கள் திருஅவையோடும் கடவுளோடும் மீண்டும் நல்லுறவு கொண்டு வாழ வழி செய்யும் விதமாக, தவநாட்களாக சிறப்பிக்கப்பட்டன. இயேசுவின் உயிர்ப்பைக் குறிக்கும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் தவம் அனுசரிக்கப்பட்டது. அதன்பின் இரண்டாம் வத்திக்கான் சங்கம் நிகழ்ந்த பின் அதாவது 1962- 1965 க்கு பின், பெரிய வியாழனுக்கு முந்திய நாள் வரை நோன்பு தபம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு 40 நாட்கள் தவக்காலமாகக் கருதப்பட்டு வருகின்றது.

ஏன் தவக்காலம்?

நான்கு வகை பருவ காலங்கள் உலகத்தில் புழக்கத்தில் உண்டு இளவேனிற் காலம் கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம். தவக்காலம் இதில் இளவேனிற்ககாலம் என்று அழைக்கப்படும் வசந்த காலத்தில் வருகின்றது. போர்வைக்குள் ஒடுங்கி புகலிடம் தேடிய குளிர்காலம் முடிந்து புதிய இலைகளுடன் புது வாழ்வை தொடங்க மரங்கள் எத்தனிக்கும் காலம். இதுவரை வெறுமையாய் இருந்த தன்னை சிறு இதழ்கள் மூலம் அலங்கரிக்க தொடங்கும் காலம். இன்னும் நான் இருக்கிறேன் என்பதை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தும் காலம். மரங்கள் போல நமது வாழ்வும் வசந்தத்தை நோக்கி வண்ண நடை போட வாய்ப்பளிக்கும் காலம் இத்தவக்காலம்.

தவக்காலம் நோன்பின் காலம் அருளின் காலம் மனமாற்றத்தின் காலம். நமது பழைய பாவ இயல்பை விடுத்து புதிய இயல்பை அணிந்து கொண்டு புதுவாழ்க்கை வாழ நம்மை தூண்டும் காலம். கடவுளை முழுமையாக அன்புகூரும் இடம் என்றும், அருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் பாலைவன அனுபவம் நமக்கு ஏற்படும் அதிலிருந்து நாம் மீண்டு வரவேண்டும் என்றும் இவ்வாண்டு தவக்காலச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாற்பது நாள்கள் என்பதன் விவிலிய விளக்கம்

கடவுள் நோவா காலத்தின்போது, பாவம் செய்த மக்களை தண்டிக்க 40 நாள்கள் இரவும் பகலும் பூமியின் மேல் மழைபொழியச் செய்தார். இஸ்ரயேல் மக்களின் மனமாற்றத்திற்காகவும் கடவுளின் அருளைப் பெறுவதற்காகவும் மோசே மற்றும் எலியா இருவரும் 40 நாள்கள் தங்களை வருத்தி உண்ணா நோன்பிருந்தனர். இஸ்ரயேல் மக்கள் தங்களது பாவத்திற்குப் பரிகாரமாக 40 ஆண்டுகள் கானான் நாட்டிற்குச் செல்வதற்காக பாலைவனத்தில் அலைந்து திரிந்தனர். இயேசு தனது பணிவாழ்விற்குள் நுழையும் முன் 40 நாள்கள் உண்ணா நோன்பிருந்து பாலைவனத்தில் அலகையினால் சோதிக்கப்படுகின்றார். ஆக 40 என்ற எண் முழுமையின் அடையாளமாகவும் மனமாற்றத்திற்கான காலமாகவும் கருதப்படுவதால் தவக்காலத்தையும் நாற்பது நாள்களாக சிறப்பிக்க திருஅவை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இயேசுவைப் போலவே நாமும் நாற்பது நாட்கள் இறைவனைப் பற்றி சிந்திக்கவும், அவர் நம் உடன் இருக்கின்றார் என்பதை உணரவும், நமக்கான கடவுளின் திட்டம் என்னவென்று சிந்தித்து நம்மை நாமே கேள்விக்குட்படுத்தவும், அதை அமைதியுடன் வரவேற்கவும் இத்தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம்.

கடவுள் நமக்குள் இருந்தால், நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவருடைய விருப்பத்தின்படி அவருடைய செயல்களின் வெளிப்பாடாகவே இருக்கும். தவறு செய்வது மனித இயல்பு அதிலிருந்து மீண்டு நற்செயல்களினால் நமது வாழ்வை நாம் மாற்றியமைக்க அழைக்கப்படுகின்றோம். அவரை நோக்கித் திரும்பி வரவும், மனம் மாறவும், அழைக்கப்படும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய எண்ணங்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் எண்ணங்களுக்கும் இடையே உள்ள தூரத்தை சிறிதளவாவது குறைக்க இந்த தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்துவுடனான நமது வாழ்க்கை எவ்வளவு உண்மையானது என்பது பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.

திருஅவை தனது பிள்ளைகளாகிய நம் அனைவரையும் மனமாற்றத்தின் பாதையில் முன்னேற வேண்டும் என்ற உறுதியான நோக்கத்துடன் தவக்காலத்தை சிறப்பிக்க அழைக்கிறது. இயேசுவின் ஆன்மிக ஞானம், உள்ளார்ந்த செபம், அமைதி, நோன்பு, ஒற்றுமை, பகிர்வு போன்ற பண்புகளில் நாம் வளரவேண்டும். நமது புலன்களை அதன் இச்சைகளைக் கட்டுப்படுத்தி இறைவனே எல்லாவற்றுக்கும் மேலானவர், அவர் ஒருவர் மட்டுமே நமக்குப் போதும் என்று நாம் உணரவேண்டும். கடவுள் நம்மை அளவுக்கதிகமாக அன்பு செய்கின்றார் என்பதை உணர்ந்து கடவுள் நம்மேல் காட்டிய இரக்கத்தையும் அன்பையும் நாம் நம் உடன் வாழ்பவர்களிடத்தில் காட்ட முயல்வோம். கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் திறந்த இதயத்துடன் இருக்க முயற்சிப்போம்.

இயேசுவின் வாழ்வில் தவம்.

இயேசு தன்னுடைய எல்லா செயல்களையும் தொடங்குவதற்கு முன் தனித்திருந்து செபித்தார். தன்னுடைய 12 வயதில் இறைவேண்டலையும் இறைப்பிரசன்னத்தையும் தேடத் தொடங்கிய அவர் இறுதி வரை தவத்தையும் தனிசெபத்தையும் ஒரு போதும் கைவிடவில்லை. பணி தொடங்குவதற்கு செபத்தில் முன் தனித்திருந்தார். புதுமைகள் செய்ய தொடங்கும் முன்னும், செய்து முடித்த பின்னும் இறை செபத்தில் தனித்திருந்தார். தனிமையில் ஒருவருடன் பேசுவதற்கு முன்பும் கூட்டத்தினர்க்கு மத்தியில் பேசும்போதும் தனித்திருந்து தன்னுடைய செப ஆற்றலைப் பெருக்கிக்கொண்டார். இயேசு தான் வாழ்ந்தது போல நம்மையும் வாழச்சொல்கின்றார். அவர் வாழ்ந்து காட்டி விட்டார். நம்மை வாழ அழைக்கின்றார். அருளை அள்ளித் தாரும் இத்தவக்காலத்தில் தனிசெபத்திலும் ஒறுத்தலிலும், பிறரன்பு பணிகளிலும்  நாம் நம் நேரத்தை செலவிடுவோம். தவக்காலத்தை அருள் தரும் காலமாக மாற்றுவோம்.

தானங்கள் செய்வோம் பிறரை அன்பு செய்ய.

நோன்பு விரதங்கள் இருப்போம் நம்மை அன்பு செய்ய,

செபத்தில் நிலைத்திருப்போம் இறைவனை அன்பு செய்ய.

ஆக தானம், நோன்பு, செபம் என அனைத்தும் வலியுறுத்துவது அன்பையே. தவக்காலம் அன்பை வலியுறுத்தும் காலம். அன்பில் நிலைத்திருப்போம். அன்பால் நிலைத்திருப்போம். தவக்காலம் என்னும் வசந்த காலம் வாழ்வில் வளமையை அள்ளித்தரட்டும்.

உண்மை ஒளியை நாம் உணர இறைவன் நமக்கு சில அறிவுரைகளைக் கொடுக்கின்றார். 1. ஆலயம் செல்லுங்கள். 2. நற்செயல் புரியுங்கள். 3. ஒளியை நோக்கி வாருங்கள்.

1. ஆலயம் செல்வோம்:

நாமும் பல நேரங்களில் சோதனைகளுக்கு ஆளாகின்றோம். துன்புறுகின்றோம். ஆனால் அத்துன்பத்திற்கு நம்முடைய சூழலையும் நேரத்தையும் உடன்வாழும் சக மனிதர்களையும் காரணம் காட்டி விடுகின்றோம். துன்புற்ற நேரத்தில் ஆலயத்திற்கு சென்றாலும் நம்முடைய மன்றாட்டுகள் புலம்பல்களாகவும் அழுகைகளாகவும் தான் இருக்கின்றனவே தவிர, அவை எதனால் என்று எண்ண மறந்துவிடுகின்றோம். இந்தத் தவக்காலத்தில் ஒறுத்தல்களையும், செப தவங்களையும் மேற்கொள்ளும் நாம், ஆலயம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அடிக்கடி செல்லும் இடமே நமது இல்லம். எப்போதாவது சென்றால் அது விருந்தினர் இல்லம். நாம் கடவுளின் பிள்ளைகள் எனில் அவர் வாழும் இல்லம் நமது இல்லம். அனுதினமும் ஆலயம் சென்று நாம் ஆண்டவரின் பிள்ளைகள் என்ற உரிமையை தக்க வைத்துக் கொள்வோம். உண்மை ஒளி நம்மில் தானாக சுடர்விடும்.

2. நற்செயல்கள் புரிவோம்:

கடவுள் அன்பும் அருளும் மிக்கவர். அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அந்த அன்புக்கும் அருளுக்கும் உரிமையுடையவர்கள். அன்பு அருள் இவ்விரண்டையும் நாம் மென்மேலும் வளர்த்துக் கொள்ள நமக்கு மிக உதவியாக இருப்பவை நாம் செய்யும் நற்காரியங்கள். சிலர் தங்களுடைய நற்செயல்கள் பிறரால் பாராட்டப்படவில்லை இரசிக்கப்படவில்லை என்று எண்ணி அதனைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுகின்றனர். சூரியன் உதிப்பதையும், மறைவதையும் உலகில் வாழும் எல்லோரும், எல்லா நேரமும் இரசிப்பதில்லை. அதற்காக சூரியன் தன் வேலையை செய்யாமல் இல்லை. நாம் செய்கின்ற நற்செயல்களை இரசிப்பவர்களும் அதை விமர்சிப்பவர்களும் இருக்கும் உலகில் தான் நாம் வாழ்கின்றோம். விமர்சனங்களுக்கு பயந்து வாழ்ந்தால் நல்விளைவுகளை அறுவடை செய்ய முடியாது. நாம் நற்செயல்கள் புரிவதற்கென்றே இயேசு கிறிஸ்து வழியாக படைக்கப்பட்டிருக்கின்றோம். அதை உணர்ந்து வாழ்ந்தால் உண்மை ஒளி நம் வாழ்வை மகிழ்விக்கும்.

3. ஒளியை நோக்கி வருவோம்:

சிறு பிள்ளைகள் நடை பயிலும் நேரத்தில் தாய், தந்தையர் அக்குழந்தைகளை தரையில் இறக்கி விடுவர். பின் தன்னை நோக்கி வருமாறு கைகளை நீட்டுவர். குழந்தைகள் அம்மா அப்பாவின் முகம் அறிந்து அவர்களை நோக்கி நடையெடுக்கும். தான் நடக்கிறேன் என்பதை விட தன் அம்மா அப்பாவை நோக்கி செல்கின்றோம் என்ற மகிழ்வே அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும். அப்படியே நடையும் பழகிவிடுவார்கள். பிள்ளைகள் பெற்றோர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையினால் அவர்கள் வாழ்வு மேம்படுகின்றது. நாமும் பல நேரங்களில் நம் இறைவனால் கீழே இறக்கி விடப்படுகின்றோம். சிலர் அதை, நமது வாழ்வு என்னும் நடைபழக என்று எடுத்துக் கொண்டு, ஒளியாம் இறைவனை நோக்கி நம்பிக்கையோடு செல்கின்றனர். சிலர் இறைவனால் தாங்கள் கைவிடப்பட்டதாக எண்ணிக் கொண்டு அழுது அழுது கண்களால் ஒளியை மறைத்துக் கொள்கின்றனர்.

உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியை நோக்கி வருகின்றனர். தீங்கு செய்பவர்கள் ஒளியை வெறுக்கின்றனர் என்ற நற்செய்தி வாசகத்திற்கு ஏற்ப நமது ஒளி இயேசு என்பதை உணர்வோம். அவர் நமக்காக சிலுவையில் உயர்த்தப்பட்டார். அவரில் நம்பிக்கை கொண்டதால் நாம் நிலைவாழ்வு பெறுகிறோம். கடவுளின் அன்பை முழுமையாக பெறுகின்றோம். நமது தீமை விளைவிக்கக் கூடிய செயல்பாடுகளை மாற்றி இயேசுவின் பாதையில் பயணம் செய்யும் போது, உண்மை ஒளியின் ஒளிக்கீற்றுகளாகின்றோம். ஆலயம் சென்று, நற்செயல்கள் புரிந்து ஒளியை நோக்கி வரும் போது, நாமும் அந்த ஒளியின் சிறு பிம்பங்களாகின்றோம். அப்போது கடவுளாம் ஆண்டவர் நம்மோடும் இருந்து நம்மையும் வழிநடத்துவார்.  உண்மைக்கேற்ப வாழ்வோம் உண்மை ஒளியின் பிம்பங்களாவோம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2024, 14:27