மொசாம்பிக் நாட்டில் துயருறும் கிறித்தவம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மொசாம்பிக் நாட்டின் வடக்கு மாநிலமான Cabo Delgado-வில் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களின் புதிய தாக்குதல்களால் அருள்பணியாளர்கள், அருட்கன்னியர்கள் மற்றும் பிற கிறிஸ்தவ சபை ஊழியர்கள் யாவரும் ஏற்கனவே, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பிவழியும் நகரங்களுக்கு வெளியேற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மொசாம்பிக் பாதுகாப்பு ஆயுதப் படைகள் (FADM) நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சிறிது காலம் அமைதி ஏற்பட்டபோதிலும், தற்போது கிறிஸ்தவர்கள்மீதான ஜிஹாதி கிளர்ச்சியாளர்களின் புதிய தாக்குதல்கள் அங்கு மீண்டும் தொடங்கியுள்ளதாக அச்செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உயர் ஆணையரின் (UNHCR) புள்ளிவிபரங்கள் படி, மொசாம்பிக்கில் நடந்த மோதலில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 10 இலட்சம் மக்கள் இப்பகுதியில் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அச்செய்திக் குறிப்புச் சுட்டிக்காட்டுகின்றது.
கத்தோலிக்கத் திருஅவை மொசாம்பிக்கில் இடம்பெயர்ந்தோரை ஆதரித்துவரும் அதேவேளை, மோதலுக்கு அமைதியான தீர்வுகாணவும் முயற்சிக்கிறது என்று கூறும் அச்செய்திக் குறிப்பு, இந்நாட்டிற்கான ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் பிறரன்பு அமைப்பின் ஆதரவில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேய்ப்புப் பணி உதவி மற்றும் ஆலோசனை, மறைப்பணியாளர்களுக்கான வாகனங்கள் மற்றும் சமூக மையங்கள் கட்டுதலில் உதவி வருகிறது என்றும் உரைக்கின்றது.
மொசாம்பிக் நாட்டின் இராணுவம் வழங்கியுள்ள தகவலின்படி, டிசம்பர் மாதத்தின் மையப்பகுதியில் Cabo Delgado-வில் 90 விழுக்காடு அளவிற்குப் பாதுகாப்பு மீண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்