ஆப்ரிக்கத் திருஅவையில் முன்னேற்றத்திற்கான அறிகுறியை காணமுடிகிறது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த நாற்பது ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் வரலாறு துன்பங்களின் கதையாகிவிட்டது என்றும், உண்மையில், பல நாடுகளில், என் சொந்த நாடான நைஜீரியா உட்பட, சூழல்கள் மோசமாகிவிட்டன என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார் நைஜீரியாவின் தலைநகரான Abuja-வின் ஓய்வுபெற்ற பேராயர் கர்தினால் John Olorunfemi Onaiyekan.
தனது 80-வது பிறந்த நாளை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள கர்தினால் Onaiyekan அவர்கள், ஆனாலும் ஆப்பிரிக்காவில் முன்னேற்றத்திற்கான வழிகள் வலிமையாய் உள்ளன என்றும், உண்மையில், ஓர் ஆப்பிரிக்கத் தலத்திருஅவை, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நம்மால் காண முடிகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கத்தோலிக்கத் திருஅவையில் கடவுளின் அற்புதமான கொடை நம்மிடம் உள்ளது, ஆனால் இவைகளை நாம் குறைத்து மதிப்பிடுகின்றோம் என்றும், அவ்வாறே திருஅவையின் சமூகப் படிப்பினைகளை உள்ளடக்கிய அழகான கருத்துக்கள் மற்றும் மதிப்பீடுகளும் நம்மிடையே உள்ளன, இவைகளையும் நாம் அடிக்கடி குறைத்தே மதிப்பீடு செய்கின்றோம் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கர்தினால் Onaiyekan.
மதிப்பீடுகளைத் தீவிரமாக மதிக்க தவறும் இவ்வுலகில், திருஅவை, அம்மதிப்பீடுகளைப் பற்றி பேசுகிறது மற்றும் வலியுறுத்துகிறது என்று எடுத்துக்காட்டிய கர்தினால் Onaiyekan அவர்கள், ஏழை மக்களின் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்று யோசிக்க கூட நேரமில்லாமல் அரசியல் விளையாட்டு விளையாடும் அரசியல் தலைவர்களைக் குறித்தும் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
நைஜீரியாவை கடுமையாகப் பாதித்து வரும் வன்முறை குறித்து பேசிய கர்தினால் Onaiyekan அவர்கள், அங்கு நடக்கும் உண்மை நிலையை வெளிப்படுத்தி வருவதுடன் தலத்திருஅவையின் பணிகளையும், பங்களிப்பையும், பாதிக்கப்படும் மக்களுடனான அதன் உடனிருப்பையும் உலகுக்கு வெளிப்படுத்திவரும் வத்திக்கான் செய்திகள் மற்றும் பிற செய்தி நிறுவனங்களுக்கும் தனது நன்றியை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
நைஜீரியா அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறது என்றும், கிறிஸ்தவர்களுக்காகவோ அல்லது மத காரணங்களுக்காவோ இதனை நான் கூறவில்லை, இதுதான் உண்மை நிலை என்றும், இந்த உண்மை உலகுக்கு சொல்லப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் கர்தினால் Onaiyekan.
நைஜீரியாவில் குடிமக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை ஒரே மாதிரியாகப் பாதுகாக்கும் குறைந்தபட்ச நல்லாட்சி தேவை என்று வலியுறுத்திய கர்தினால் Onaiyekan அவர்கள், வாழ்க்கை மிகவும் மலிவானதாக மாறிவருகிறது என்ற ஆபத்தை எடுத்துரைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து வரவேண்டும் என்றும், மனிதர் ஒவ்வொருவரின் உயிரும் மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுக் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்