உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பாகிஸ்தான் தலத்திருஅவை வரவேற்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பாகிஸ்தான் நாட்டின் வரலாற்றில் "கிறிஸ்தவர்களுக்கு எதிரான மிக மோசமான சம்பவம்" என்று தலத் திருஅவைத் தலைவர்களால் விவரிக்கப்படும் தாக்குதல்களுக்கு அதிகாரிகள் அளித்த பதில் குறித்த அரசின் அறிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, அந்நாட்டிற்கான கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் Samson Shukardin அவர்கள் வரவேற்றுள்ளார் என்று ICN செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் பிறரன்பு அமைப்பிடம் இவ்வாறு தெரிவித்துள்ள ஆயர் Shukardin அவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களையும் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமான இல்லங்களையும் ஒரு கும்பல் தீயிட்டு எரித்த ஜரன்வாலா தாக்குதல்கள் குறித்த அரசின் அறிக்கையை ஏற்க மறுத்த பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜரன்வாலா பற்றிய அரசின் அறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் ஆற்றியுள்ள எதிர்வினை "கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு மிகவும் சாதகமானது" என்று விவரித்த ஆயர் Shukardin அவர்கள், அரசும் குறிப்பாக உச்ச நீதிமன்றமும் இந்தப் பிரச்சினையை இவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்வது இதுவே முதல் முறை என்றும் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் 3 பேர் கொண்ட அமர்வுக்குத் தலைமை தாங்கிய பாகிஸ்தான் தலைமை நீதிபதி Qazi Faez Isa அவர்கள், பஞ்சாபின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சமர்ப்பித்த அறிக்கை "குப்பைத் தொட்டியில் வீசப்படுவதற்கு" தகுதியானது என்று விவரித்தார் என்று ICN செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த அறிக்கைப் பற்றிய உச்ச நீதிமன்ற விசாரணையில், பஞ்சாப் சட்ட அதிகாரி ஒருவர் 304 கைதுகளுக்குப் பிறகு 22 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வெறும் 18 குற்றப்பத்திரிகைகள் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு வாரங்களுக்குள் புதிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அதிகாரிகள் தங்கள் விசாரணைகளை முழுமையாக மேற்கொள்ளத் தவறினால் இடைநீக்கம் செய்ய நேரிடும் என்று எச்சரித்ததுள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பு உரைக்கின்றது. (ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்