தேடுதல்

வழிபாட்டில் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்   (ANSA)

குழந்தைகளின் ஊட்டச்சத்தில் பிலிபீன்ஸ் தலைதிருஅவை அக்கறை!

ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு உதவி வழங்க 'funds for Filipinos' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வருமானம் பயன்படுத்தப்படுகிறது : பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பல பிலிபீன்ஸ் மறைமாவட்டங்கள் மணிலாவில் உள்ள திருத்தந்தை 12-ஆம் பயஸின் கத்தோலிக்க மையத்தில் அமைந்துள்ள 'funds for Filipinos' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்காக தவக்காலத்தில் 'Fast to Feed' பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மணிலாவின் முன்னாள் பேராயர் கர்தினால் Gaudencio Borbón Rosales  அவர்களால் உருவாக்கப்பட்ட 'funds for Filipinos'  என்ற  அமைப்பின் நிதி, கத்தோலிக்கத் திருஅவை அதன் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிப்பதிலும் குழந்தைகள் வறுமையை அகற்றுவதிலும் பெரும்பங்காற்றுகிறது என்றும் அச்செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

பசியுள்ள குழந்தைக்கு உணவளிக்க ஒரு நாளைக்கு 15 Pesos  (இந்திய ரூபாய் 22.589) அளவுள்ள அந்நாட்டுப் பணம் தேவைப்படுகிறது என்றும், தவக்காலத்தில் நோன்பு மேற்கொள்பவர்கள் தாங்கள் சேமிக்கும் பணத்தை நாட்டின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உணவளிக்க நன்கொடையாக அளிக்கலாம் என்று அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சான் கார்லோஸின் ஆயர் ஜெரார்டோ அலிமானே அல்மினாசா அவர்கள், இன்றைய மக்களின் தியாகம் ஒளிமயமான நாளைய நம்பிக்கை மற்றும் ஊட்டச்சத்தின் விதைகளை விதைக்கும் என்றும், இது நமக்கு அடுத்திருப்போரின் அன்பின் வழியாகக் கடவுள் மீதான நமது அன்பை வெளிப்படுத்துவதாகும் என்றும் உரைத்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் 95 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர் என்றும், அதேவேளையில், 1,000 பேரில் 27 பேர் ஐந்து வயதை கூட எட்டவில்லை என்றும் பிலிப்பீன்ஸ் நாட்டிற்கான யுனிசெஃப் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2024, 12:02