மத்திய ஆப்ரிக்காவில் PIME மறைப்பணியாளர்களின் அர்ப்பணமுள்ள சேவை
மெரினா ராஜ் – வத்திக்கான்
மத்திய ஆப்ரிக்காவின் சாத் பகுதியில் ஏறக்குறைய என்பது இலட்சம் சூடான் நாட்டுப் புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் உள்ளனர் என்றும், கடுமையான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து வரும் அப்பகுதியில் பீமே மறைப்பணியாளர்கள் சபையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது உலகம் மற்றும் மறைப்பணி என்னும் வலைதள அமைப்பு.
கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக சூடானில் நடைபெற்றுவரும் வன்முறைச் சூழலினால் ஏராளமான மக்கள் தங்களது உறவுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர் என்றும், அதிகரித்து வரும் போர்ச்சூழலினாலும் மனித உரிமைமீறல் செயல்களினாலும், பாதிக்கப்பட்ட மக்கள் உள்நாட்டுப் போரில் இருந்து வெளியேற வழிகள் இல்லாத சூழலில் இம்மறைப்பணியாளர்கள் சபையானது மக்களுக்கு அர்ப்பண மன நிலையுடன் உதவிவருகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளது அவ்வமைப்பு.
ஆயிரக்கணக்கான இறப்புக்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் சந்திக்கும் இடர்ப்பாடுகள் என துன்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் வெகுதொலைவில் இருக்கின்றன என்றும், உள் நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது வலைதள அமைப்பு.
60 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள், அதிலும் குறிப்பாக, வாழ்வதற்கான அடிப்படைப் பொருள்கள் ஏதுமற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள், தங்களது நாட்டை விட்டு எகிப்து, எத்தியோப்பியா, தென்சூடான் குறிப்பாக சாத் நோக்கி புலம்பெயர்கின்றனர் என்றும், உடனடி மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் இவர்கள், பீமே மறைப்பணியாளர்களிடம் உதவிகளைப் பெறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடுமையான வறுமை மற்றும் ஏழ்மை நிலையில் வாழும் ஆப்ரிக்க மக்கள் தற்போது நீர், அடிப்படைத் தேவைகளின்மை, மோசமான நலவாழ்வு நிலைமை, மின்சாரமின்மை போன்றவற்றினால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், தொடர்ந்து இடம்பெயரும் மக்கள் வாழும் பகுதிகளில், காலரா போன்ற நோய்களின் ஆபத்து அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது அவ்வமைப்பு.
மொத்த சூடானின் 37 விழுக்காட்டினர் அதாவது 5,50,000 பேர் சாத்திற்கு புலம்பெயர்ந்துள்ள நிலையில் மோங்கோ காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன் பீமே மறைப்பணியாளர்கள் சபையினர் மக்களுக்கு அடிப்படை உதவிகளை வழங்கி வருகின்றனர்.
ஏறக்குறைய 5800 குடும்பங்களில் வாழும் மக்களில் 85விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் சிறார். அதிலும் 70 விழுக்காட்டினர் கைம்பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்