காசா கிறிஸ்தவர்கள் சிலுவைப் பாதை வழி வாழ்கின்றனர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சிலுவைப் பாதையின் ஒவ்வொரு நிலையிலும், இந்தப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அமைதிக்காகவும், துன்பப்படுபவர்களுக்காகவும், அனைத்தையும் மற்றும் அனைவரையும் இழந்தவர்களுக்காகவும் நாங்கள் இறைவேண்டல் செய்தோம் என்று கூறினார் காசாவின் திருக்குடும்ப பங்குத்தளத்தின் பங்குத்தந்தை அருள்பணியாளர் Gabriel Romanelli
அருள்பணியாளர் Romanelli, கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று போர் தொடங்கியதிலிருந்து காசா நகரத்திற்குத் திரும்ப முடியாமல் எருசலேமில் தங்கியுள்ள வேளை, அப்பங்கிலுள்ள உதவிப் பங்குத்தந்தை அருள்பணியாளர் Youssef Asaad அவரிடமிருந்தும் மக்களிடமிருந்தும் பெறும் தகவல்களின் அடிப்படையில் வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய தொலைபேசி உரையாடலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மணி நேரமும் இங்கே நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது என்று கூறிய அருள்பணியாளர் Romanelli அவர்கள், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் வெடித்ததில் இருந்து, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை இப்போது 29,000-ஐ தாண்டியுள்ளது என்றும், 69,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாஸ் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இப்படிப்பட்டச் சூழலில் திருக்குடும்ப பங்குத்தள மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் கடினமாகி வருகின்றது என்றும், விசுவாசிகள் தங்களுக்குத் தேவையான உணவைப் பெற தீவிர முயற்சி செய்யும் வேளை, இப்போது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே சமைக்க முடிகிறது என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் அருள்பணியாளர் Romanelli.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்