கப்பல் வழியாக சிகிச்சைக்கென காசா குழந்தைகள் இத்தாலிக்கு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீன குழுக்களிடையே காசாவில் இடம்பெற்றுவரும் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சிகிச்சைக்கென ஏற்றிவந்த இத்தாலிய இராணுவ மருத்துவ உதவி கப்பல் இத்தாலிய துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
ஏற்கனவே விமானம் மூலம் காசா பகுதி குழந்தைகள் சிகிச்சைக்கென இத்தாலி வந்துள்ள நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக கப்பல் வழியாக La Spezia துறைமுகத்தை வந்தடைந்த நிகழ்வில் அவர்களை வரவேற்க இத்தாலிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் Antonio Tajani, புனித பூமி கத்தோலிக்கப் பகுதிக்குப் பொறுப்பான பிரான்சிஸ்கன் அருள்பணி Ibrahim Faltas ஆகியோர் சென்றிருந்தனர்.
பாலஸ்தீனம், இஸ்ராயேல் மற்றும் எகிப்து அரசுகளுடன் அருள்பணி பால்தாஸ் அவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தி அனுமதியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது காசாவிலிருந்து சிகிச்சைத் தேவைப்படும் குழந்தைகள் எகிப்துக்கு கொணரப்பட்டு கப்பல் வழியாக இத்தாலிக்கு கொண்டுவரப் பட்டுள்ளனர்.
தற்போது சிகிச்சைக்கென கொணரப்பட்டுள்ள குழந்தைகளுள் பலர் பெற்றோர்களை இப்போரில் இழந்தவர்கள் எனவும், இன்னும் நிறையக் குழந்தைகள் சிகிச்சைக்கென காசாவிலேயே காத்திருப்பதாகவும் தெரிவித்தார் அருள்பணி பால்தாஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்