பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு :நற்செய்தி அறிவிப்போம் நற்செய்தியாவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. யோபு 7: 1-4, 6-7) II. 1 கொரி 9:16-19, 22-23 III. மாற் 1:29-39)
இன்று நாம் பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நாம் நற்செய்தியை அறிவிக்கவும், நற்செய்தியாக மாறவும் நமக்கு அழைப்புவிடுகின்றன.
நம்பிக்கையில் விளையும் நற்செய்தியின் மகிழ்வு
இன்றைய முதல் வாசகத்தில் யோபுவின் துயரங்களைப் பார்க்கின்றோம். அவர் எத்தனைவிதமான துன்பங்களை அனுபவிக்கிறார். அவை அனைத்துமே தீராதத் துயரங்கள். "நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன்" என்று கூறும் யோபுவின் வார்த்தைகள் அவரது துயர்களை நமக்கு எடுத்துரைக்கின்றன. இங்கே நற்செய்தி அறிவிப்பு எங்கே இருக்கின்றது என்றதொரு கேள்வியை நாம் எழுப்பலாம். ஆனால் அலகை தந்த அத்தனை துயரங்களையும் தாங்கிக்கொண்டு நன்மையே உருவான கடவுளை பழித்துரைக்காது எல்லாவற்றையும் இறைதிருவுளமேமென ஏற்றுக்கொண்டு இறுதிவரை உறுதியாக தன்னுடைய நம்பிக்கையில் நிலைத்து நின்றார் யோபு. இது நற்செய்திக்குச் சான்று பகர்ந்தது மட்டுமன்றி, நற்செய்தியாகவும் மாறிய செயல் என்பதை நம் உள்ளத்தில் இருத்துவோம். அதனால்தான் அவரது வாழ்வின் இறுதியில் அவர் இழந்த அனைத்தையும் இறையருளால் திரும்பப் பெறுகின்றார். இது நற்செய்தியில் நம்பிக்கை கொள்வதையும், அதன்படி வாழ்வதையும் அதனால் விளையும் விலைமதிக்க முடியாத மகிழ்ச்சியையும் குறிக்கின்றது.
நற்செய்தி அறிவிப்புத் தரும் மனநிறைவு
எப்படி நற்செய்தியை அறிவிக்க வேண்டும், எவ்வாறு நற்செய்தியின்படி வாழ்ந்து அதற்குச் சான்று பகர வேண்டும் என்பதற்குப் புனித பவுலடியார் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். "நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை" என்கின்றார் புனித பவுலடியார்.
இன்றைய நம் காலச் சூழல்களில் நற்செய்தி அறிவிப்பு என்பது ஓர் எதிர்பார்ப்புடன்தான் செய்யப்படுகிறது. அதாவது, நற்செய்தி அறிவிப்பு என்பது ஒரு பயன்கருதா பணி என்பதைவிட பயன்கருதும் ஒரு பணியாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், நற்செய்தி ஊழியம் என்பது ஊதியத்திற்காக செய்யப்படுகிறது. இங்கே பொருளாசை மையமாகிப்போகிறது. அதனால்தான் நம்மிடையே பொறாமையும், போட்டிகளும், பிளவுகளும், பிணக்குகளும், சண்டைகளும், சச்சரவுகளும் தலைவிரித்தாடுகின்றன. ஆனால் நற்செய்தி அறிவிப்பு என்பது மனநிறைவை, மனமகிழ்வை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் நற்செய்தி அறிவிப்பால் தான் பெரும் ஒரே கைமாறு மனநிறைவு என்று அழுத்தமாகக் குறிப்பிடுகின்றார் புனித பவுலடியார்.
பற்றியெரியட்டும் நற்செய்திப் பேரார்வம்
நற்செய்தி அறிவிப்பு என்பது வற்றாத உயிருள்ள ஒரு நீரூற்றாக நம் உள்ளத்தில் பாய்ந்தோடவேண்டும். அது நம் உள்ளதை பற்றி எரியச் செய்ய வேண்டும். இதனைத்தான் இறைவாக்கினர் எரேமியாவின் வாழ்வில் காண்கின்றோம். “அவர் பெயரைச் சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது" (காண்க 20:9) என்கின்றார் எரேமியா. இயேசு சபையின் நிறுவுனர் புனித இனிகோ தனது ஆருயிர் நண்பர் புனித சவேரியரை இந்தியாவிற்கு நற்செய்திப் பணிக்கு அனுப்பியபோது, "சவேரியாரே, செல்லுங்கள், உலகம் முழுவதையும் இறையன்பால் பற்றியெரியச் செய்யுங்கள்" என்றுரைத்தார். புனித பிரான்சிஸ் சவேரியாரின் நற்செய்தி அறிவிப்புப் பணி எவ்வளவு பெரிய மாற்றத்தை உலகமெங்கிலும் கொணர்ந்தது என்பதையும், அம்மாற்றமே ஆயிரக்கணக்கான தேவ அழைத்தல்களைப் பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பதையும் நாம் சொல்லவும் வேண்டுமோ? இயேசு கிறிஸ்துவின் மேல் கொண்ட பேரார்வத்தால் வெறும் 10 ஆண்டுகளில் பம்பரமாய்ச் சுழன்று தனது நற்செய்தி அறிவிப்புப் பணியால் இந்த உலகையே புரட்டிபோட்டவர் புனித சவேரியார் என்பதை இந்த உலகமே சொல்லும்.
எல்லோருக்கும் நற்செய்தி பரவட்டும்
நற்செய்தி அறிவிப்பு என்பது கிணற்று நீராய்த் தேங்கிப்போய்விடாமல் ஆற்றுநீராய்ப் பெருக்கெடுத்துப் பாய்ந்தோடவேண்டும் என்பதை இன்றைய நற்செய்தியில் எடுத்துக்காட்டுகின்றார் இயேசு. அதாவது, நற்செய்தி பரவலாக்கப்பட வேண்டும், அதன் பயன் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இயேசுவின் முழுவிருப்பமாக இருந்தது. சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு, அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார் என்று வாசிக்கின்றோம். அதுமட்டுமன்றி, தான் எவ்வாறு எல்லா ஊர்களுக்கும் பயணித்து நற்செய்தியை பரப்புரை செய்தாரோ, அவ்வாறே தனது சீடர்களையும் நற்செய்தி அறிவிக்க அனுப்புகின்றார். இதற்குப் பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார் (காண்க லூக் 10:1) என்று லூக்கா நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். மேலும் தான் விண்ணேற்றம் அடைவதற்கு முன்பு, தனது சீடர்களைக் கலிலேய மலைக்கு அழைக்கும் இயேசு, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) என்று கூறியதாக மாற்கு நற்செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நற்செய்தி அறிவிப்பில் உயிர்த்தியாகம்
நற்செய்திக்காகத் தன் இன்னுயிரைக் கையளிப்பதுதான் நற்செய்தி அறிவிப்பின் இறுதிநிலையாக அமைகின்றது. நற்செய்திக்குச் சான்று பகிர்வதில் இதுவும் ஒரு நிலை என்றாலும், இதற்குத் துணிச்சலும் உயிர்த்தியாகமும் அவசியம் தேவைப்படுகின்றன. இன்று நாம் புனித அருளானந்தர் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். அவர் சிந்திய புனித இரத்தம் அந்த மரவநாட்டு மண்ணிலிருந்து மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலுமே ஆயிரக்கணக்கான இறையழைத்தல்களைத் திருஅவைக்குக் கொணர்ந்தது. புனித அருளானந்தரின் தியாகமிக்க வாழ்வு நற்செய்தியை எம்முறையில் அறிவிப்பது, அதனை எவ்வழியில் வாழ்ந்துகாட்டுவது, எப்படி அதற்குச் சான்றுபகர்வது என்பதற்கு வழிகாட்டி நிற்கிறது. ஆக, நற்செய்தி அறிவிப்பு என்பது சவாலானது, வலிகள் நிறைந்தது, வாழ்வைத் துறக்கத் தயார் நிலையில் இருப்பது என மூன்று முக்கியக் கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது என்பதை இப்புனிதரின் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. புனித அருளானந்தர் குறுநில மன்னர் தடிய தேவரின் நீங்காத நோயைக் குணப்படுத்திய பிறகு, அவர் மனமாற்றம் பெற்று கிறிஸ்தவ மதத்தைத் தானாகவேத் தழுவிக்கொள்ள முன்வந்தார். அதற்குப் பெரும்தடையாக இருந்தது அவர் நான்கு மனைவியரைக் கொண்டிருந்ததுதான். எனவே, ‘நீங்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஒரே ஒர மனைவியை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்’ என்று அருளானந்தர் தடியதேவரிடம் கூறினார். எனவே, அருளானந்தரின் சொல்லிற்குக் கட்டுப்பட்ட தடியதேவரும் முதலில் மணந்த மனைவியை மட்டுமே வைத்துக்கொண்டு மற்ற மூவரையும் அனுப்பிவிட்டார். இம்மூவரில் ஒருவர்தான் மன்னர் சேதுபதிக்கு உறவினரான கடலாயி என்பவர். அவள் சென்று மன்னரிடம் இதுகுறித்து முறையிட, அவரின் கடுங்கோபத்திற்கு ஆளானார் அருளானந்தர். அதுமட்டுமன்று, இதனால் அரசவையில் ஒரு சில பிரச்சனைகள் எழுந்தன. இந்தப் பிரச்சனையின் பாதிப்புகள் இயேசு சபையின் இல்லங்களிலும் எதிரொலித்தன. எனவே அவர் உடனடியாக போர்த்துக்கல் நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்பட்டார். அங்கு அவரைக் கண்ட அவரது அன்னை அவர் நிலைகுறித்து பெரிதும் வருந்தி அழுதார். அதுமட்டுமன்றி, அவரை அரசவையிலேயே தங்கவைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அருளானந்தர் உறுதியான மனம் கொண்டவராக, ‘எனது உயிரும் உடலும் மறவ நாட்டு மக்களுக்கே சொந்தம்’ என்று கூறியவாறு அந்தத் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு மீண்டும் மறவ நாட்டிற்குத் திரும்பினார். அதன்பிறகு தொடர்ந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக அவர் கைதுசெய்யப்பட்டு ஓரியூர் திட்டைக்குக் கொண்டுசெல்லப்பட்டு மன்னர் உதய தேவரின் ஆணைப்படி தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆக, புனித அருளானந்தரின் வீர மரணம் என்பது நற்செய்தியின் விழுமியங்களை அவர் கடுமையாகக் கடைபிடிக்க விரும்பியதற்காக நிகழ்ந்த ஒன்று என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதே விழுமியத்தைக் கடைபிடித்ததற்காகத்தான் புனித திருமுழுக்கு யோவானும் ஏரோது மன்னரால் தலைவெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார் என்பதயும் நம் நினைவில் கொள்வோம்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி, இந்தியக் கிறிஸ்தவர்களாகிய நாம் முக்கியமானதொரு நினைவுதினத்தை அனுசரித்தோம் அச்சம்பவத்தை இப்போது நினைத்தாலும் நமது குலை நடுங்கும் அளவிற்கு மிகவும் கொடூரமானது. கடந்த 1999-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 22-ஆம் தேதியன்று இரவு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மதபோதகர் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது மகன்களான 9 வயதே நிரம்பிய பிலிப்பு, மற்றும், 7 வயதே நிரம்பிய திமொத்தேயுவும் தங்கள் வாகனத்திலேயே உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அப்போது வாகனத்திற்கு வெளியே இருந்த அந்தக் கொடூர மனம் கொண்ட கூட்டம், எரிந்துகொண்டிருந்த அந்த வாகனத்தைச் சுற்றி வந்து, "ஜெய் ஸ்ரீராம்" என்று கத்திக்கொண்டு குதூகலித்துக்கொண்டிருந்தது. இந்தப் படுகொலையை அப்போதைய பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், 'கொடூரமான கொலை' என்று வர்ணித்ததுடன் கொலையாளிகளைப் பிடிப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணை பிறப்பித்தார். இந்தப் படுகொலைக்கு முன்பாக 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் கொல்லப்பட்டவர் அருளாளர் இராணி மரியா. அதன் பின்னர், 2011-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி ஜார்கண்டில் படுகொலை செய்யப்பட்டவர் அருள்சகோதரி வல்சா ஜான். இப்படியாக இயேசுவின் நற்செய்திக்கு சான்று பகர்பவர்கள் உலகெங்கினும் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனாலும் இவற்றின் மத்தியிலும் இறையாட்சிக்கான நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது நிறுத்தப்படாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. காரணம், இது இயேசுவுக்கான ஓர் தொடர் ஓட்டம்.
"இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே, பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்" என்றும், "ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" (காண்க மத் 10:16-18, 28) என்றும் கூறும் இயேசுவின் வார்த்தைகளுக்கு இவர்கள் தங்களின் மாசற்ற புனித இரத்தத்தால் சான்றுபகர்ந்துள்ளனர் என்பது திண்ணமன்றோ!
இன்றைய நமது நற்செய்தி அறிவிப்பு
இன்றைய நமது நற்செய்தி அறிவிப்புப் பணி எப்படி இருக்கின்றது என்பதைக் குறித்துச் சிந்திக்கவும் நாம் அழைக்கப்படுகின்றோம். நாம் வாழும் இன்றைய உலகில் நல்ல செய்தியை காட்டிலும் கெட்ட செய்தியே அதிகம் அறிவிக்கப்படுகிறது. மற்றவர்களின் வாழ்வில் காணப்படும் நற்செயல்களை அறிவிப்பதை விட்டுவிட்டு அவர்களிடம் விளங்கும் ஒரு சில வேண்டத்தகாத குணங்கள் வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்படுகின்றன. எந்த அளவுக்கு ஒருவரின் பெயரைக் கெடுக்க முடியுமோ அல்லது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முடியுமோ அந்தளவுக்கு அத்தகைய செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன. இது சாதி, மதம், மொழி மற்றும் இனத்தின் பெயரால் நிகழ்ந்து வருகின்றது. குறிப்பாக, துறவற வாழ்வில் இது அதிகம் காணப்படுவதுதான் மிகுந்த வேதனைக்குரியதாக இருக்கின்றது. அதற்கு முக்கியமானதொரு எடுத்துக்காட்டு 'மொட்டைக்கடுதாசி' கலாச்சாரம். இப்போது இது அடுத்துக்கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது. திருஅவையில் முக்கியமான பொறுப்பிற்கு ஒருவர் வந்துவிடப்போகிறார் என்பதை அறிந்து அவருடைய பெயருக்கு முன்கூட்டிய பங்கம் விளைவிப்பது புதுவழியாகிவிட்டது. அண்மையில் நமது தமிழகத்தில் சம்மந்தப்பட்ட அருள்பணியாளர் ஒருவர் குறிப்பிட்டதொரு மறைமாவட்டத்தின் ஆயராகத் திருத்தந்தையால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்ற பொய்யானதொரு தகவலை பரப்பியதைக் கண்டோம். இந்தச் சீர்கெட்ட நிலைக்கு முக்கியமான காரணம், அதிகாரத்தின் மீது கொண்ட மோகம் மற்றும் வெறி. இதுதான் நமது நற்செய்தி அறிவிப்புப் பணியா? இதுதான் நற்செய்தியாக வாழும் வழிமுறையா? இதற்காகவா நாம் அழைக்கப்பட்டோம்? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி நாம் சிந்திக்க வேண்டும்.
நமதாண்டவர் இயேசுவும் கூட பரிசேயர், சதுசேயர், திருச்சட்ட அறிஞர்கள், தலைமைக்குருக்கள், மூப்பர்கள் ஆகியோரிடம் காணப்பட்ட தவறுகளை நேரிடையாகக் கண்டித்தாரே தவிர அவர்களுடைய பெயரைப் பங்கப்படுத்த அவர் ஒருபோதும் விரும்பியதே இல்லை என்பதை நாம் அறிவோம். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் எம்மாதிரியான நற்செய்தியை அறிவிக்கின்றோம் என்பதை இக்கணம் எண்ணிப் பார்ப்போம். நாம் படைக்கப்பட்டதன் நோக்கமே, கடவுளை அறிந்து அன்புசெய்து அவர் பணியாற்றவே (நற்செய்தி அறிவிக்க) என்பதை உணர்ந்து இயேசு வெளிப்படுத்திய விழுமியங்களை உள்ளடக்கிய நற்செய்தியை நாள்தோறும் அறிவிப்போம். அதற்குச் சான்று பகர்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்