தேடுதல்

தொழுநோயாளரைக் குணப்படுத்தும் இயேசு தொழுநோயாளரைக் குணப்படுத்தும் இயேசு  

பொதுக் காலம் 6-ஆம் ஞாயிறு : உலக நோயாளர்கள் நலம்பெறட்டும்!

உலககெங்கினும் உள்ள நோயாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், அவர்தம் மாண்புகள் போற்றப்படவும், அவர்கள் நோய்நீங்கி நலம் பெறவும் இந்நாளில் தூய லூர்து அன்னை வழியாக இறைவனிடம் மன்றாடுவோம்.
பொதுக் காலம், 6-ஆம் ஞாயிறு : உலக நோயாளர்கள் நலம்பெறட்டும்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. லேவி 13: 1-2, 44-46)      II. 1 கொரி 10:31-11:1      III.  மாற் 1:40-45 )

இன்று நாம் பொதுக் காலத்தின் ஆறாவது ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நாம் உள்ளத்தாலும் உடலாலும் நலம்பெற அழைப்புவிடுக்கின்றன. இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் தொழுநோய் குறித்தும், அந்நோய் கொண்ட ஒருவர் நலம்பெறும் நிகழ்வு குறித்தும் நமக்கு எடுத்துரைக்கின்றன. இதுகுறித்த நமது தியானச் சிந்தனைகளை இன்னும் ஆழப்படுத்துவதற்கு முன்பாக, இந்நோய் குறித்த ஒரு சில காரியங்களை முதலில் தெரிந்துகொள்வோம். தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் கடுமையான தோல் அழற்சியையும்  கை, கால், சருமத்தின் இதரப் பகுதிகளின் நரம்புகளில் பாதிப்பையும் உண்டாக்குகிறது. தொழுநோய் பற்றி பயத்தை உண்டாக்கும் பலவித கதைகள் நமது வரலாற்றில் கூறப்பட்டுள்ளன. நீண்ட நெடுங்காலமாக இந்தப் பாதிப்பு பல்வேறு எதிர்மறை களங்கத்துடன் மனித இனத்தை அச்சுறுத்தி வருகின்றது. மேலும் தொழுநோயின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மனிதர்களைப் பெரிதும் பாதித்து வருகின்றன. சீனா, எகிப்து மற்றும் இந்தியாவின் பண்டைய நாகரீகங்களில் தொழுநோய் என்பது மருந்து இல்லாத, உரு சிதைக்கும், தொற்று நோயாக இருந்து வந்துள்ளது என்பதையும் வரலாற்றுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதிலும் உள்ள தொழுநோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,000 ஆகும். அதிலும் ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் தொழுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அதிலும் குறிப்பாக, தெற்குப் பகுதிகளான, கலிபோர்னியா, ஹவேலி, மற்றும் இதர மாநிலங்களில் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் புள்ளிவிபரங்கள் புலப்படுத்துகின்றன. தொழுநோய்க்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும் நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருத்தல், மற்றும், அவரின் மூக்கு மற்றும் வாயில் இருந்து வடியும் நீர் ஒருவர் சருமத்தில் அடிக்கடி படும்போது அவருக்கும் தொழு நோய் பரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, பெரியவர்களைவிட குழந்தைகளை இந்த நோய் அதிகம் பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேற்கண்ட இந்தத் தரவுகளை உள்ளத்தில் உள்வாங்கிக்கொண்டு இப்போது நமது மறையுரைச் சிந்தனைகளைத் தொடர்வோம். இன்றைய முதல் வாசகம் லேவியர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் 13 மற்றும் 14-வது அதிகாரங்கள் முழுவதும் தொழுநோய்பற்றி கூறப்பட்டுள்ளது. பதிமூன்றாம் அதிகாரத்தில் ‘தொழுநோய்பற்றிய சட்டங்கள்’ என்ற தலைப்பிலும், பதினான்காம் அதிகாரத்தில், ‘தொழுநோய் கண்டபின் தூய்மை செய்தல்’ என்ற தலைப்பிலும் இந்நோய்ப்பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இன்று நமக்கு கொடுக்கப்பட்டுள்ள விவிலியப் பகுதியை இப்போது வாசிப்போம். ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது; “ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும். அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார். ஏனெனில், நோய் அவர் தலையில் உள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, “தீட்டு, தீட்டு”, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே, தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

இஸ்ரயேல் மக்களின் காலத்தில் தொழுநோய் கொண்டவர்கள் பொதுவிடத்திற்கு வரும்போது “தீட்டு, தீட்டு”, எனக் குரலெழுப்பிக் கத்திக் கொண்டே வரவேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தீட்டுப்படமால் ஒதுங்கிச் செல்லவும், இந்நோய் பரவாமல் தங்களைக் காத்துக்கொள்ளவும் முடியும். அதுமட்டுமன்றி, அவர்கள் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு இந்தச் சப்தத்தை எழுப்பவேண்டும் என்ற விதியைப் பார்க்கும்போது இந்த நோயின் கொடூரத்தையும் இந்நோய்கண்டவர்களின் வலிகளையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. மேலும் தொழுநோயாளர்கள் அனைவரும் பாளையத்திற்குப் புறம்பே தள்ளப்படுவர் அல்லது குடியிருக்கக் கட்டாயப்படுத்தப்படுவர். அத்துடன் நீண்டதொரு குச்சியின் முனையில் கட்டித்தொங்கவிடப்பட்ட பாத்திரத்தில் உணவு வைக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும். அதற்குக் காரணம், அவர்கள் தீட்டானவர்கள் என்பது மட்டுமல்ல, அந்த நோய் தங்களுக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். மேலும் தொழுநோய்கண்ட ஒருவர் தான் குணமாகிவிட்டால் உடனே குடும்பத்தினருடனோ அல்லது மற்றவர்களுடனோ ஒன்றிணைந்துவிட முடியாது. மாறாக, குரு வந்து பரிசோதித்துப் பார்த்துவிட்டு சான்றளித்த பின்னரே இது சாத்தியமாகும். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தொழுநோய் கொண்டவர்கள் அனுபவித்த சொல்லொண்ணா துயரங்கள், வலிகள், வேதனைகள், முக்கியமாக, சமூகப் புறக்கணிப்பு ஆகியவற்றையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

இதன் பின்னணியில் இப்போது நற்செய்தி வாசகத்தின்மீது நமது கண்களைப் பதிப்போம். 'ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்' என்ற வார்த்தைகள், தொழுநோயாளர் இயேசுவின் மெசியாத்தன்மையில் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்ம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இஸ்ரயேல் மக்களின் காலத்தில் தொழுநோய் கொண்ட ஒருவர் குணமடைவது என்பது மரணத்திலிருந்து மீண்டும் உயிர்பெறுவதற்குச் சமமானதாகக் கருதப்பட்டது. அதுமட்டுமன்றி, மெசியா வரும்போது அவர் தொழுநோயாளர்களைக் குணப்படுத்துவார் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது.  இதற்கொரு எடுத்துக்காட்டாக மத்தேயு நற்செய்தியில் ஒரு நிகழ்வைப் பார்க்கின்றோம். யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பி அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்கின்றார். அதற்கு இயேசு மறுமொழியாக, “நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்”  (காண்க மத் 11:4-6) என்று கூறுகின்றார்.

இரண்டாவதாக, இயேசு தொழுநோயாளர்மீது பரிவு கொள்கின்றார் என்பதை இன்றைய நற்செய்தியில் பார்க்கின்றோம். இயேசுவின் இந்த அணுகுமுறை மிகவும் முக்கியமானது. காரணம், அவரது இறையாட்சிப் பணியில் பரிவு, பாசம், இரக்கம், கணிவன்பு ஆகியவை மேலோங்கி இருப்பதை பார்க்கின்றோம். குறிப்பாக, இங்கே பரிவு என்பது பாதிக்கப்பட்ட ஒருவருடன் நம்மையே முழுவதுமாக ஒன்றிணைத்துக்கொள்ளும் குணமாகும். ஒருவர் தனது உள்ளார்ந்த தன்மையை வேறொருவருக்கு விட்டுக்கொடுத்தல் என்ற கருத்தைத்தான் இங்குக் கையாளப்பட்டுள்ள கிரேக்கச் சொல் எடுத்துக்காட்டுகிறது. மேலும் பரிவு என்பதை வெறுமனே பரிவு என்று மட்டும் சொல்லாமல் இரக்கத்தையும் அதனுடன் சேர்த்தே பரிவிரக்கம் என்று கூறுகின்றோம். இந்தப் பரிவிரக்கம்தான் இயேசுவின் மெசியாத்தன்மையில் வெளிப்படுகிறது. 'அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்' (காண்க மாற் 6:34) என்றும், நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தல் நிகழ்வில், “நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன்" (காண்க. மாற் 8:2) என்றும், நயீன் ஊர்க் கைம்பெண்ணின் இறந்த ஒரே மகனை உயிர்பித்துத் தரும் நிகழ்வில், அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்” என்றார் (காண்க லூக் 7:13) என்றும், கூறும் நற்செய்திப் பகுதிகள் இயேசுவிடம் மிகுந்தளவில் பரிவிரக்கம் வெளிப்பட்டதற்கான சான்றுகளாக அமைகின்றன. இதனடிப்படையில் பார்க்கின்றபோது, தொழுநோயாளரை நலமாக்கும் பகுதியில், இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார் என்று வாசிக்கின்றோம்.

அடுத்து, 'இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!' என்ற இறைவார்த்தைகள் நம் மனங்களை அப்படியே வருடுகின்றன. தொழுநோய்க்கு மருந்து கண்டுபிடித்து அதை எளிதாக குணமாக்கும் இன்றைய காலத்திலேயே நாம் தொழுநோயாளர்களை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பார்க்கின்றோம் என்றால், மோசேயின் காலத்திலும் இயேசுவின் காலத்திலும் அதன் நிலைமை எந்தளவுக்குக் கோரமாக இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. இயேசு இங்கே தொழுநோயாளரைத் தொடுகின்றார். அவர்மீது பரிவிரக்கம் கொண்டு, அவரைத் தொட்டுக் குணப்படுத்துகின்றார். இந்தத் தொடுதல் என்பது நோயாளர்கள்மீதான கடவுளின் அன்பையும், பரிவையும், இரக்கத்தையும், நெருக்கத்தையும், உடனிருப்பையும் வெளிக்காட்டுகின்றது. கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் தும்மியவர்களையெல்லாம் துரத்தி அடித்தார்கள், இருமியவர்களை எல்லாம் இரக்கமின்றிப் பார்த்தார்கள். முகக்கவசம் இல்லாதவர்களையெல்லாம் முணுமுணுத்துக் கொண்டே பார்த்தார்கள். கொடுமையிலும் கொடுமையாக இப்பெருந்தொற்றால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்குக் கல்லறைகள் கூட மறுக்கப்பட்டன. சென்னையில் இதற்காக ஒரு கலவரமே நடந்ததைப் பார்த்தோம். ஆனால் இவை அத்தனை களேபரங்கள் மத்தியிலும் எத்தனையோ மருத்துவர்களும் செவிலியர்களும், தன்னார்வலர்களும் தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து கொரோனா தொற்று நோயாளர்களைத் தொட்டுத்தூக்கி அவர்களுக்குப் பணிவிடை செய்தார்கள். இறந்தவர்களை இன்முகத்துடன் கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள். ஏறக்குறைய 28-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் இந்நோய்த்தொற்று ஏற்பட்டு மரணித்தும்போனார்கள். அன்றைய காலகட்டத்தில், இந்தக் கொரோனா பெருந்தொற்றைவிட மிகவும் மோசமாக இருந்தது தொழுநோயின் நிலை. அப்படிப்பட்டதொரு அச்சம் நிறைந்த சூழலிலும் இயேசு தொழுநோயாளரைத் தொட்டுத்தூக்குவதன் வழியாகத் தனது பரிவிரக்கத்தை வெளிப்படுத்துகிறார். மேலும், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்”  (மாற் 2:17) என்ற இயேசுவின் வார்த்தைகள் அவருடைய பரிவிரக்கத்திற்கு, அதாவது, மெசியாத்தன்மைக்குச் சான்றாக அமைகின்றன என்பதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  

இறுதியாக, நலமடைந்த தொழுநோயாளரிடம்,  "நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று கூறுகின்றார் இயேசு. தொழுநோயாளர் ஒருவர் நலமடைந்துவிட்டால் அவர் குருவிடம் சென்று காட்டி நோய் நீங்கியதற்கான சான்று பெறவேண்டும். இதனை லேவியர் நூலில் விரிவாகக் காணலாம் (காண்க.லேவி 14:1-32). அதையே செய்யும்படி இங்கே இயேசு அத்தொழுநோயாளரிடம் கட்டளையிடுகின்றார். இதைச் செய்யவேண்டிய அவசியம் இல்லாதிருந்தும் கூட, இயேசு இதனைச் செய்யப் பணிப்பதன் வழியாக அவர் யூதச் சட்டத்தை மதிக்க முன்வருகின்றார் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

இன்று நாம் புனித லூர்து அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இன்றைய நாள் உலக நோயாளர்கள் நாளாகவும் சிறப்பிக்கப்படுகின்றது. உலக நோயாளர்களைக் குணப்படுத்தும் அன்னையாக மரியா போற்றப்படுகிறார். நமது தமிழகத்திலுள்ள புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயம், பிரான்ஸ் நாட்டிலுள்ள புனித லூர்து அன்னைப் பேராலம், போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள புனித பாத்திமா அன்னைப் பேராலயம் ஆகிய மூன்றும், அன்னை மரியா உலக நோயாளர்களைக் குணப்படுத்தி வருகின்றார் என்பதற்குச் சான்று பகர்கின்றன. இன்றைய உலகில் நோயாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றது. பலர் கேட்பாரற்றுத் தெருக்களிலும், சந்தைவெளிகளிலும், பொதுவிடங்களிலும் தூக்கி வீசப்படுகின்றனர். இன்றைய மருத்துவ உலகமும் சேவையை மறந்து பணத்தை மையமாகக் கொண்டு செயல்படுவதால் அங்கும் நோயாளர்கள் பெரிதும் புறக்கணிக்கப்படுகின்றனர். பெரும்பாலான நோயாளர்கள் ஆதரவற்றவர்களாகவே மரணத்தைத் தழுவுகின்றனர். இந்நிலை மாறி உலககெங்கினும் உள்ள நோயாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், அவர்தம் மாண்புகள் போற்றப்படவும், அவர்கள் நோய்நீங்கி நலம் பெறவும் இந்நாளில் தூய லூர்து அன்னை வழியாக இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2024, 13:49