இயேசுவின் பாலைவன சோதனை இயேசுவின் பாலைவன சோதனை  

தவக்காலம் முதல் ஞாயிறு : சோதனைகளைத் தாங்கும் மனவுறுதி பெறுவோம்!

இயேசுவைப் பின்பற்றும் மக்களாகிய நமக்கும் பல்வேறு வழிகளில் இந்தப் பாலைநில சோதனைகள் வரும் என்பதைப் புரிந்துகொள்வோம். அதேவேளையில், தூய ஆவியாரின் துணைகொண்டு அவைகளை வெல்வோம்.
தவக்காலம் முதல் ஞாயிறு : சோதனைகளைத் தாங்கும் மனவுறுதி பெறுவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. தொநூ 9:8-15          II.  1 பேது 3:18-22          III.  மாற் 1:12-15 )

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது இன்றளவும் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. அதுவும் ஒரு காலை இழந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டுவது சாமானிய மனிதர்களால் முடியாது. ஆனால் அந்தச் சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் அருணிமா சின்கா என்ற இளம்பெண். இவர் உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர். கைப்பந்து வீராங்கனையான அருணிமா, 2011-ஆம் ஆண்டு, (அப்போது வயது 25), லக்னோவிலிருந்து, தில்லிக்கு இரயிலில் பயணம் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரயிலில் நுழைந்த கொள்ளையர்கள், பயணிகளிடம் இருந்து உடமைகளை திருடினர். எல்லோரும் பயந்து நடுங்கிய அவ்வேளையில், அக்கொள்ளையர்களைத் வீரத்துடன் எதிர்த்துப் போராடினார் அருணிமா. இதனால் கடும்கோபுமுற்ற அவர்கள் அருணிமாவைத் தாக்கியதுடன் ஓடும் இரயிலில் இருந்து அவரை வெளியே தூக்கி எறிந்தனர். அந்நேரத்தில், அடுத்த தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த இரயில் மோதி, பலத்த காயமடைந்த அருணிமா, ஒரு காலை இழந்தார். முழங்காலுக்கு கீழே, அவரின் ஒரு கால் வெட்டி எடுக்கப்பட்டது. இடுப்புப் பகுதியில் படுகாயமடைந்த அவர், பல மாதங்கள், படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றார். பிறர் தன்னை பரிதாபமாகப் பார்ப்பதைத் தவிர்க்க, மிகப் பெரிய சாதனையை செய்ய வேண்டும் என நினைத்த அவர், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, மலையேற்றக் குழுவில் சேர்ந்து பயிற்சி பெற்றார். எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய, உலகின் முதல் இந்தியப் பெண் எனப் போற்றப்பட்ட, பச்சேந்திரி பால், காலை இழந்த அருணிமாவுக்குப் பயிற்சி அளித்தார். அதுமட்டுமன்றி, ‘நீ ஏன் வீணாக இதற்கு முயற்சி செய்கிறாய். நன்றாகக் கால் கொண்டவர்களே எவரெஸ்ட் சிகரம் ஏற சிரமப்படும்போது, உன்னால் அது கண்டிப்பாக முடியாது. எனவே எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனைப்படைக்க வேண்டும் என்ற உன் கனவை மறந்துவிடு’ என்றெல்லாம்  பலரும் குறிப்பாக, அவரது குடும்பத்தாரும் அவரது தன்னம்பிக்கையை இழக்கச் செய்தவேளை, பச்சேந்திரி பால் மட்டும், 'உன்னால் கண்டிப்பாக முடியும், நீ சாதிக்கப் பிறந்தவள்' என்று கூறி, அருணிமாவைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி பயிற்சி அளித்து வந்தார். ஆகவே, 18 மாதங்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட அருணிமா,  கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதியன்று, காலை 10.55 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். இதன்மூலம், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் என்ற நீங்காத தனிப்பெருமையைப் பெற்றார். இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்திக்காட்ட, அவர் எண்ணற்ற சோதனைகளையும், வேதனைகளையும், வலிகளையும் கடக்க வேண்டியிருந்தது.

இன்று நாம் தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் அடியெடுத்து வைக்கின்றோம். வாழ்க்கையில் வரும் சோதனைகளை மனவுறுதியுடன் தாங்கி வெற்றி காண்பவர்களே இறையாட்சியில் பேறுபெற்றோராக முடியும் என்ற உண்மையை உரக்கச் சொல்கின்றன இன்றைய வாசகங்கள். சோதனைகளை வெல்லாதவர்கள் சாதனையாளர்களாக முடியாது, தடைகளைத் தகர்க்காதவர்கள் தன்னிகரடைய முடியாது, சிலுவைகளைச் சுமக்காதவர்கள் சிம்மாசனம் அமர முடியாது என்றெல்லாம் நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய நம் உலகில் உழைக்காமலேயே உயர்வுபெற வேண்டும், அதாவது, சோதனைகளைக் கடைக்காமலேயே சாதனை படைக்க வேண்டுமெனத் துடிக்கின்றனர் பலர். ஒருநாள், பெண் துறவற சபை ஒன்றின் தலைமை அன்னை ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, “இன்றைய காலங்களில் துறவு சபைகளில் இருக்கும் இளம் துறவியர் தங்களுக்கு வரும் சோதனைகளைத் தாங்கும் அளவிற்கு வலிமையும் மனப்பக்குவமும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். அவர்களில் பலர் தங்களுக்கு சோதனைகளே வரக்கூடாது என்றே கருதுகின்றனர். குறிப்பாக, எல்லா வெற்றிகளையும் எளிதாக அடைந்துவிட வேண்டுமென எண்ணுகின்றனர்” என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். இது உண்மையிலேயே நம் கருத்தில் கொள்ளத்தக்கதுதான். சோதனைகளை வெல்லாமல் சாதனைகள் படைக்க முடியாது என்பதை நமது துறவு சபைகளின் வரலாற்றையோ, திருஅவையின் வரலாற்றையோ அல்லது பல உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையோ புரட்டிப்பார்த்தாலே நமக்குத் தெரியும், ஏன், இதற்குகொரு முன்னுதாரணமாக நமது பெற்றோரையே எடுத்துக்கொள்ளலாம். நம்மை ஆளாக்க அவர்கள் எத்தனை துயரங்களையும், சோதனைகளையும், வலிகளையும் கடந்து வந்திருப்பார்கள். அதுமட்டுமன்றி, நமது கிறிஸ்தவ வாழ்வின் பயணத்தில் நகமும் சதையும் போல சோதனைகளும் சாதனைகளும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை. எனவே, இத்தகைய சிந்தனைகளை மனதில் கொண்டவர்களாக இப்போது இன்றைய வாசகங்களில் நம் உள்ளங்களைப் பதிப்போம்.

சோதனைகளை வென்ற நோவா

இன்றைய முதல் வாசகத்தில் நோவாவுடனும் இம்மண்ணுலகின் உயிர்கள் அனைத்துடனும் கடவுள் ஏற்படுத்திக்கொண்ட புதியதொரு உடன்படிக்கையை  பார்க்கின்றோம். "உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது. என்ற வார்த்தைகள் வழியாக, கடவுள் நோவாவுடன் தனது உடன்படிக்கையை ஏற்படுத்துவதுடன் அதன் அடையாளமாகத் தனது வானவில்லையும் மேகத்தின்மீது வைக்கின்றார். மேலும் நோவா வாழ்ந்த நேரிய வாழ்வைக் குறித்து, 'தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்' என்று 6-ஆம் அதிகாரத்தின் 9-ஆம் இறைவசனம் கூறுகிறது. அதேவேளையில் நோவா காலத்தில் கடவுளுக்கு எதிரான தீச்செயல்கள் பரவிக்கிடந்தன. இதனால் மனவேதனையடைந்த கடவுள் நோவாவிடம், “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன். ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன். உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்; அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு" (வச 13-14) என்று கூறி, அந்தப் பேழை எப்படி வடிவமைக்கப்படவேண்டும் என்றெல்லாம் விலாவரியாக விளக்குகின்றார். நோவா எப்படிப்பட்ட சோதனைகளையெல்லாம் சந்தித்திருப்பார் என்பதை நாம் இக்கணம் எண்ணிப் பார்ப்போம். நோவாவுக்கு இந்தப் பேழையை செய்து முடிக்க கண்டிப்பாக பல மாதங்கள் ஆகியிருக்கும். இந்நாள்களில் தீச்செயல்களை செய்துவந்த அலகையின் வடிவான அத்தீயவர்கள் நோவாவையும் அவரது குடும்பத்தாரையும் நிச்சயம் கடும் சோதனைக்கு உட்படுத்தியிருப்பார்கள் என்பது திண்ணம். இரண்டு வழிகளில் அவர்கள் நோவாவிற்குச் சோதனைகளைத் தந்திருக்கலாம். முதலாவது, ‘என்ன பெரிய வெள்ளம் வந்துவிடப்போகிறது என்று இந்த அறிவீனன் இப்பேழையை செய்து வருகிறான்’ என்று கிண்டல் மற்றும் கேலிப்பேச்சுகளால் அவரைக் கண்டிப்பாக வசைபாடி இருக்கலாம். இரண்டாவதாக, அத்தீயவர்கள் இந்தப் பேழையை செய்யவிடாமல் நோவாவையும் அவரது புதல்வர்களையும் தடுத்து நிறுத்தும் வண்ணமாக பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

இதில் நாம் இன்னொரு முக்கியமானதொரு காரியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அது என்னவென்றால், நோவா கடவுள்மீது கொண்டிருந்த ஆழமான மற்றும் அசைக்க முடியாத இறைநம்பிக்கை. பாலைவனத்தில் மூன்று வழிகளில் தன்னை சோதித்த அலகையை இறைத்தந்தையின்மீது கொண்டிருந்த பிரமாணிக்கத்தால் இயேசு வென்றது போல இங்கே நோவாவும் இறைத்தந்தையின்மீது தான் கொண்டிருந்த ஆழமான அன்பாலும், நம்பிக்கையாலும், பிரமாணிக்கத்தாலும் அத்தீயவர்களை வெல்கின்றார். மேலும் இங்கே இரண்டு முக்கியமான இறையியல் கருத்துக்கள் வெளிப்படுகின்றன. முதலாவது, நோவா காலத்து பெருவெள்ளம் இயேசுவின் பெயரால் நாம் பெரும் திருமுழுக்கின் முன்னடையாளமாக அமைகின்றது. அதாவது, கடவுள் அனுப்பிய அப்பெருவெள்ளம் எவ்வாறு தீயவர்களை அழித்து நேர்மையாளரான நோவாவையும் அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றியதோ, அவ்வாறே, இயேசுவின் பெயரால் நாம் பெறும் திருமுழுக்கு, தீயவனான அலகையிடமிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது என்பதை இதன்வழியாக நாம் அறிந்துகொள்கின்றோம். இதன் காரணமாகவே, "நோவா பேழையைச் செய்து கொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக் கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலர், அதாவது, எட்டுப்பேர் மட்டும் அந்தப் பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது. அவர் வான தூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் நோவா காலத்து பெருவெள்ளம் குறித்த தனது புரிதலை வெளிப்படுத்துகின்றார் புனித பேதுரு.

இரண்டாவதாக, நோவா நமதாண்டவர் இயேசுவின் முன்னடையாளமாக அமைக்கிறார். இயேசு கிறிஸ்துவிடம் விளங்கிய இறைத்தந்தையின்மீதான உண்மை அன்பு, நேர்மை, பிரமாணிக்கம், கீழ்ப்படிதல், அலகை காட்டிய உலக மதிப்பீடுகளுக்குள் சிக்கிக்கொள்ளாத அவரின் தெளிந்து தேர்தல், இவ்வுலக மக்களின் மீட்புக்காக இறைத்தந்தையின் வார்த்தைகளுக்குத் தன்னை முற்றிலுமாகக் கையளித்தல் ஆகிய நற்குணங்கள் யாவும் நோவாவிடமும் விளங்குவதைக் காண்கின்றோம். இவ்விதத்தில் இயேசுவின் முன்னோடியான நோவா, கிறிஸ்துவின் வழியில் அலகையின் வடிவாக விளங்கிய அத்தீயவர்கள் கொடுத்த சோதனைகளை வெற்றிகொள்கின்றார்.

அலகையின் சோதனையை வென்ற இயேசு

இயேசு அலகையால் சோதிக்கப்பட்டதை மிகவும் சுருக்கமாகத் தருகின்றார் மாற்கு நற்செய்தியாளர். ஆனால் இயேசு எதிர்கொண்ட மூன்று சோதனைகளை அவர் கொடுக்கவில்லை. இவருக்குப் பின்பு நற்செய்தியை எழுதிய புனித மத்தேயும் லூக்காவும் தாங்கள் பெற்ற வழி வழிச் செய்தியாக அந்த மூன்று வகையான சோதனைகள் பற்றி விரிவாகத் தருகின்றனர் (காண்க மத் 4:1-11; லூக் 4:1-13). பாலைநிலத்தில் இயேசு காட்டு விலங்குகளுடன் இருந்ததை மாற்கு மட்டுமே குறிப்பிடுகின்றார். இயேசு எவ்வளவு கடுமையான சோதனைகளை அனுபவித்திருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக மாற்கு இவ்வாறு மறைமுகமாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் ஒத்தமை நற்செய்தியாளர்கள் மூவரும் இயேசு, பாலைநிலதிற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டு, நாற்பது நாட்கள் அலகையால் சோதிக்கப்பட்டார் என்று ஒருசேரக் கூறுகின்றனர். பாலைநிலத்தில் 40 நாள்கள் இயேசு சோதிக்கப்பட்ட நிகழ்வு, இஸ்ரயேல் மக்களின் முன்னோர்கள் பாலைநிலத்தில் 40 நாள்கள் சோதிக்கப்பட்ட பிறகு, கடவுள் அவர்களைத் தம் மக்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த நாற்பது ஆண்டுகளும் இஸ்ரயேல் மக்களின் பயிற்சிக் காலமாகவே கருதப்பட்டது. மேலும் மன்னர் சவுல் தாவீதின் மேல் காழ்புணர்ச்சி கொண்டு அவரைக் கொல்லத் தேடியபோது அவரிடமிருந்து தப்பியோடி பாலைநிலத்தில் தங்கியிருந்தார் என்று வாசிக்கின்றோம் (காண்க 1 சாமு 26:3-4)). இந்தப் பாலைநில தங்குதல் அனுபவம் இறைநம்பிக்கை, அன்பு, நட்பு, அரவணைப்பு, கைவிடப்படல், மறுதலிப்பு, துரோகம், பிரமாணிக்கமின்மை குறித்த பல பாடங்களை அவருக்குப் கற்றுக்கொடுத்தது. அதன்பிறகு, தனது முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களைச் சிறப்பாக ஆட்சி புரிந்தார்.

தூய ஆவி - தீய ஆவி போராட்டம்

ஒத்தமை நற்செய்தியாளர் மூவருமே இயேசுவை தூய ஆவியார் பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றதாகவே பதிவு செய்துள்ளனர். இயேசுவின் இந்தப் பாலைநில அனுபவத்தில், அலகை என்னும் தீய ஆவியை தூய ஆவியின் துணைகொண்டு வெற்றியடைகின்றார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் தனது பணிவாழ்வைத் தொடங்குவதற்கு முன்பாக இயேசு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இயேசு தனது பணிவாழ்வின்போது அலகையின் சூழ்ச்சிகள் பலவற்றை சந்தித்தாக வேண்டும். இதற்கானதொரு பயிற்சி களமாக இந்தப் பாலைநில சோதனை அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். குறிப்பாக, இயேசு கல்வாரியில் சாவைத் தழுவிக்கொள்வதற்கு முன்பாக, கெத்செமணி தோட்டத்தில் அவர் சந்தித்த அந்த மரணப் போராட்டத்தில் வெற்றி காண இந்தப் பாலைவன சோதனை ஒரு வழியாக அமைந்தது என்பதையும் நமது சிந்தையில் இருத்துவோம்.

சோதனைகளைத் தாங்கும் மனவுறுதி பெறுவோம்!

இந்த விதத்தில் பார்க்கும்போது இயேசுவைப் பின்பற்றும் மக்களாகிய நமக்கும் பல்வேறு வழிகளில் இந்தப் பாலைவன சோதனைகள் வரும் என்பதைப் புரிந்துகொள்வோம். அதேவேளையில், நமது அன்றாட வாழ்க்கையில் அலகை தரும் சோதனைகளின்போது நாம் பிரமாணிக்கமுடன் இறைவனின் பக்கம் உறுதியாக நிற்கும்போது தூய ஆவியானவர் அச்சோதனைகளிலிருந்து நமக்கு வெற்றி அருள்வார் என்பது உறுதி. "என் சகோதர சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள். உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்" என்றும், "சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்" (காண்க யாக 1:2-4,12) என்றும் உரைக்கின்றார் புனித யாகப்பர். ஆகவே, நமது அன்றாட வாழ்வில் அலகை தரும் சோதனைகளை தாங்கும் உறுதியான மனதை இறைவன் நமக்கு அருள வேண்டுமென இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2024, 13:53