அச்சத்தின் பிடியில் வாழும் சிரியா மக்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நாங்கள் மனித மாண்புடன் வாழ்வதற்கு விரும்புகிறோம், நாங்கள் பல சிரமங்களையும், பிரச்சனைகளையும், துர்பாக்கியங்களையும் அனுபவித்திருக்கிறோம் என்றும், மனித நேயத்திலிருந்து வரும் உதவிகள் எங்களை மீண்டும் நிலைநிறுத்த உதவ வேண்டுமே தவிர எங்களை யாசிக்கும் நிலைக்குத் தள்ளவிடக்கூடாது என்றும் கூறியுள்ளார் Blue Marists என்னும் துறவு சபையைச் சார்ந்த அருள்சகோதரர் Georges Sabé
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் துருக்கி மற்றும் வடக்கு சிரியாவைத் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவுற்றுள்ள வேளை, அதன் தற்போதைய நிலை குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் சகோதரர் Sabé
மேலும் பல்வேறு துயரங்கள் மத்தியிலும் சிரியா மக்கள் இழந்த தங்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதிலும், அவர்களுக்கு உதவுவதிலும் Marist துறவு சபையினர் ஆற்றிவரும் அர்ப்பணிப்பு நிறைந்த பணிகள் குறித்தும் இந்நேர்காணலின்போது விளக்கியுள்ளார் சகோதரர் Sabé
இந்நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 500 முதல் 600 குடும்பத்தினர் இன்னும் இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர் என்றும், இவர்கள் வேறு எங்கும் செல்ல முடியாததாலும், புனரமைப்புப் பணிகள் இன்னும் நடைபெறாததாலும் இன்னும் பலர் பாதுகாப்பற்ற நிலையில், சேதமடைந்த தங்களின் சொந்த வீடுகளிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
பொருள் சேதத்தைத் தவிர, மக்களிடம் உளவியல் பாதிப்பும் அதிகம் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள சகோதரர் Sabé அவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் எனப் பலரையும் அச்சம் இன்னும் ஆட்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், ஐ.நா. நிறுவனத்தின் உலக உணவுத் திட்ட (WFP) அமைப்பானது சிரியாவுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்திவிட்டது என்பதை நினைவு கூர்ந்த அருள்சகோதரர் Sabé அவர்கள், இந்த இக்கட்டான நிலையில் துயருறும் மக்களைக் கைவிடும் உரிமை நமக்கு இல்லை என்று தான் நம்புவதாகவும் உரைத்துள்ளார் சகோதரர் Sabé
நம்பிக்கை என்பது சாத்தியம் என்றும், இறைவன் நம்மைக் கைவிடவில்லை என்று நாம் நம்ப வேண்டும் என்றும் எடுத்துரைத்த சகோதரர் Sabé அவர்கள், இந்த நம்பிக்கையின் அடிப்படையில், நாம் மற்றவர்களைச் சந்திக்க வேண்டும் என்றும், இதுவே நமது நம்பிக்கையில் முன்னேற நமக்கு உதவுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுக் கூடைகள் வழங்கல், உளவியல் ஆதரவு, கல்வி, மனித வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் வாடகை செலுத்த நிதி உதவி அளித்தல் ஆகியவற்றுடன் உறுதியான வழிகளில் நம்பிக்கையை விதைப்பதைத் தொடரவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் விவரித்துள்ள சகோதரர் Sabé அவர்கள், Aleppo-விலுள்ள Blue Marists துறவு சபையைச் சேர்ந்த சகோதர்களின் குறிக்கோளும் இதுதான் என்றும் எடுத்துக்காட்டிள்ளார்.
கடந்த ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் துருக்கியின் தென்கிழக்கு பகுதியையும் வடக்கு சிரியாவையும் பெருமளவில் சேதமடையச் செய்ததுடன் ஏறக்குறைய 60,000 பேர் வரை மரணமடையச் செய்தது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்