இலவச உணவிற்காகக் காத்திருக்கும் மக்கள் இலவச உணவிற்காகக் காத்திருக்கும் மக்கள்  (AFP or licensors)

தனித்துவமான சவால்களை எதிர்கொள்ளும் படகோனியா தலத்திருஅவை

1,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள ராவ்சன் மறைமாவட்டத்தில் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை

மெரினா ராஜ் – வத்திக்கான்

அர்ஜெண்டினாவில் உள்ள படகோனியா தலத்திருஅவையானது, தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது என்றும், அகன்ற பரப்பளவு கொண்ட தூரங்கள், அதிக அளவிலான பன்முகத்தன்மை, வளங்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படுகின்றது என்றும் கூறியுள்ளார் ஆயர் ரொபர்தோ ஆல்வாரெஸ்.

பிப்ரவரி 17 சனிக்கிழமை அர்ஜெண்டினாவின் புதிய மறைமாவட்டமான Rawson ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு ஆயர் ரொபர்தோ ஆவ்லாரெஸ் அவர்கள் தலத்திருஅவையின் வளர்ச்சி பற்றிய தனது கனவுகளையும் இடர்ப்பாடுகளையும் எடுத்துரைத்து ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் பிறரன்பு அமைப்பிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

அர்ஜென்டினா படகோனியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட ராவ்சன் மறைமாவட்டத்தின் தலைவர், Comodoro Rivadavia மறைமாவட்ட ஆயர் நிர்வாகி என இரு பொறுப்புக்களை ஏற்றுள்ள ஆயர் ஆல்வாரேஸ் அவர்கள், படகோனியா தலத்திருஅவை சிறப்பானது என்றும் அர்ஜென்டினாவின் பிற பகுதிகளை விட வித்தியாசமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள ராவ்சன் மறைமாவட்டத்தில் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை என்ற போதிலும் ஏறக்குறைய 2000 கிலோமீட்டர் வாகனத்தில் பயணம் செய்து மக்கள் மகிழ்வுடன் திருப்பலிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.  

ராவ்சன் மறைமாவட்டத்தில் இருக்கும் 12 அருள்பணியாளர்களில் ஆறு பேர் அர்ஜென்டினாவைச் சார்ந்தவர்கள், மூன்று பேர் படகோனியாவைச் சார்ந்தவர்கள் என்று கூறிய ஆயர் ஆல்வாரெஸ் அவர்கள், ஏழை எளிய மக்கள் தங்களது திருமுழுக்கு அருளடையாளச் சடங்கை நிறைவேற்ற அன்புடன் தங்களை அழைக்கின்றார்கள் என்றும், நமது மந்தையைச் சார்ந்த மக்களை பாதுகாத்து பராமரிப்பது மேய்ப்பர்களாகிய நம் கடமை என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இளம் அருள்பணியாளர்களுக்கான முதல் கூட்டம் நடத்தியதைத் தெரிவித்த ஆயர் அவர்கள், அருள்பணியாளர்களும் மிக மகிழ்வுடன் இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்றும் நாட்டில் வளங்களின் பற்றாக்குறையானது கடுமையான சவாலை எதிர்கொள்ள வைக்கின்றது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2024, 15:05