இயேசுவோடு ஒன்றிணைந்து நடப்பது கிறிஸ்தவர்களாகிய நமது பொறுப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
இயேசுவோடு ஒன்றிணைந்து நடந்து, ஒற்றுமையாக வாழ்வது, கிறிஸ்தவர்களாகிய நமது பொறுப்பு என்றும், இதன் வழியாக உண்மை, நீதி, அன்பு மற்றும் அமைதியின் பாதைகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் பிலிப் நேரி ஃபெராவோ.
பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தவக்கால திருப்பயணத்தின் இறுதியில் நடைபெற்ற திருப்பலின்போது இவ்வாறு கூறியுள்ளார் கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்தின் பேராயரும் CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவருமான கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ.
அமைதியையும் உண்மையையும் நாடுவதற்குப் பதிலாக ஊழல், பொய், சமூக முரண்பாடுகளுக்கானப் பங்களிப்பு, போன்றவற்றில் நாம் சிக்கிக்கொள்ளாமல், நமது விருப்பங்கள் என்ன என்பதை இத்தவக்காலத்தில் ஆழமாக சிந்தித்து, நம் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் ஃபெராவோ.
ஒருங்கிணைந்த பயணத்தைப் பற்றி எடுத்துரைத்த கர்தினால் ஃபெராவோ அவர்கள், இயேசுவோடு நாம் நமது ஒன்றிப்பை ஆழப்படுத்தவும், நம்பிக்கையில் முன்னேறிச்செல்லவும், தன்னலமின்றிப் பிறருக்கு உதவிகள் புரியவும் இயேசுவின் ஒளியை சமுதாயத்தில் சுடர்விடவும் நாம் இத்தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறியுள்ளார்.
நமது பழைய பாவ இயல்புகளையும் அதற்கான பாதைகளையும் துறந்து முழுமனமாற்றம் பெற வலியுறுத்திய கர்தினால் ஃபெராவோ அவர்கள், சினோடல் என்னும் ஒன்றிணைந்த பயணத்தை, உண்மையாக நம்மில் நிறுவுவதற்காக, இயேசுவை நமது வாழ்வின் மையமாக வைக்கவேண்டும் என்றும், பிறர் நலப்பணிகள் ஆற்றுதல், ஒற்றுமையை வளர்த்தல், சமூகத்தில் நம்பிக்கையில் ஒளியைப் பரப்புதல் போன்ற செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
கிறிஸ்துவுடன் நாம் கொண்டுள்ள ஒன்றிப்பினால், இறையரசில் நுழைவதற்கான உரிமையை பெறுகின்றோம் என்றும், பிரிவினைகள், வகுப்பு வாதங்கள் போன்றவற்றில் வளர்வதற்குப் பதிலாக கிறிஸ்துவுடனான உறவில் வளரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் கர்தினால் ஃபெராவோ.
கோவாவில் உள்ள (sancoale) சன்கோலே திருத்தலத்திற்கு பாதயாத்திரையாக தவக்காலத்தில் மக்கள் திருப்பயணம் மேற்கொள்வதை கடந்த ஆறு ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கும் நிலையில் திருப்பயணத்தின் இவ்வாண்டு கருப்பொருளானது “தவத்தின் பாதையில் நம்பிக்கையை எடுத்துரைப்பவர்களாக ஒன்றிணைந்துப் பயணிப்போம்” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்டது.
பிப்ரவரி 18 ஞாயிற்றுகிழமை இந்திய நேரம் அதிகாலை 2.00 மணியளவில் கோவாவின் பம்பிலோ என்ற பகுதியிலிருந்து தொடங்கப்பட்டு 10 கிமீ தூர நடைபயணமாக சன்கோலே திருத்தலத்தை வந்தடைந்த இத்திருப்பயணத்தில் ஏறக்குறைய 18000 கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்