துப்பாக்கி ஏந்தி அல்ல, மாறாக ஜெபமாலை கொண்டு போரிடுகிறோம்!
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உக்ரைனுக்கு எதிரான போர் துவங்கி இரண்டாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்துவரும் அப்பாவி உக்ரைன் மக்கள், இறைவனில் நம்பிக்கைக் கொண்டு ஒரு புதுமைக்காக இன்னும் காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் அந்நாட்டின் Lviv பேராயர் Mieczysław Mokrzycki.
ஏவுகணைகளும் எறிகுண்டுகளும் எண்ணற்ற மக்களை பலிவாங்கி வருவதாகவும், எண்ணற்ற மக்கள் துயர்களாலும் மனநோய்களாலும் அவதியுறுவதாகவும் உரைத்த பேராயர், மக்கள் இன்னும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் முன்னோக்கிச் செல்வதாகவும், அவர்களுக்கன மீட்பு ஒரு புதுமை வழியாக இடம்பெறும் என்பதில் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
உக்ரைன் மக்கள் கடவுளின் போர்வீரர்களாகச் செயல்படுவதாகவும், துப்பாக்கிகளை ஏந்தி அல்ல, மாறாக ஜெபமாலையுடன் போரிடுவதாகவும், போர்க்களத்தில் அல்ல, மாறாக திருநற்கருணைமுன் முழங்காலில் நின்று போரிடுவதாகவும் கூறினார் பேராயர் Mokrzycki.
பலர் உயிரிழந்தும், காயமுற்றும், வீடுகளை இழந்தும், வாழ்வு ஆதாரங்களையும் இழந்துள்ள நிலையில் அவர்களில் அச்சமும், ஏக்கங்களும், நிலையற்றதன்மைகளுமே மிச்சமிருக்கின்றன என்ற பேராயர், இத்தகைய ஒரு சூழலில் தலத்திருஅவை அனைவருக்கும் தன் உதவிகளை வழங்கி வருகின்றது என்றார்.
போர் வீரர்களுக்கான ஆன்மிக உதவிகள், மக்களுக்கு உணவு மற்றும் மருந்து விநியோகம், புலம்பெயர்ந்தோர்க்குத் தேவையான உதவிகள், மேய்ப்புப் பணி உதவிகள் எனப் பல நிலைகளில் மோதல்களுக்கிடையே தொடர்ந்து தலத்திருஅவை பணியாற்றிவருவதாக மேலும் கூறினார் பேராயர் Mokrzycki.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்