ஒருவருக்கொருவர் உதவும் உக்ரைன் குழந்தைகள் ஒருவருக்கொருவர் உதவும் உக்ரைன் குழந்தைகள்  (AFP or licensors)

உக்ரைனில் ஒன்றரை கோடி பேர் மனிதாபிமான உதவிகளைச் சார்ந்துள்ளனர்

மோதல்களால் உக்ரைன் நாட்டில் ஏறக்குறைய 40 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளனர், இதில் 58 விழுக்காட்டினர் பெண்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இரஷ்யா மற்றும் உக்ரைனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போரால் ஏறக்குறைய 30 இலட்சம் குழந்தைகள் உட்பட 1 கோடியே 46 இலட்சம் பேர் மனிதாபிமான உதவிகளையேச் சார்ந்து வாழும் நிலை உருவாகியுள்ளதாக Save the Children என்ற பிறரன்பு அமைப்பு அறிவித்துள்ளது.

மக்கள் அடர்த்தியாக வாழும் உக்ரைனின் பகுதிகளில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஏனைய அரசு சாரா அமைப்புக்களுடன் இணைந்து விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ள Save the Children அமைப்பு, இரண்டாண்டுகளான போரில் 587 சிறார்கள் உட்பட 10,500க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

கடந்த இரண்டாண்டு போரில் ஒவ்வொரு நாளும் 42 பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும் கவலையை வெளியிடுகிறது இப்பிறரன்பு அமைப்பு.

இப்போரால் கொல்லப்பட்டுள்ள மக்களுள் 87 விழுக்காட்டினர் வெடிகுண்டுகளால் உயிரிழந்தவர்கள் எனக் கூறும் இந்த அமைப்பு, இப்போரால் உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் குறித்த துல்லியமான விவரங்கள் தெரியவில்லை எனவும் தெரிவிக்கிறது.

மனிதாபிமான உதவிகளைச் சார்ந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுள் 80 விழுக்காட்டினருக்கு மனநல ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன எனக் கூறும் Save the Children பிறரன்பு அமைப்பு, 2022ஆம் ஆண்டிலேயே உக்ரைனின் ஏழ்மை நிலை 5 மடங்கு அதிகரித்ததாகவும் தெரிவிக்கிறது. 

மோதல்களால் உக்ரைன் நாட்டில் ஏறக்குறைய 40 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளனர், இதில் 58 விழுக்காட்டினர் பெண்கள். 40 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்துள்ள வேளை, 59 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைன் நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2024, 14:46