வாரம் ஓர் அலசல் – பிப். 13. உலக வானொலி தினம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அன்பு நெஞ்சங்களே, பிப்ரவரி 12ஆம் தேதி திங்கள்கிழமை, வத்திக்கான் வானொலி துவக்கப்பட்ட நாள். 93 ஆண்டுகளைக் கடந்து இன்றும் இளமையுடன் நிற்கிறது வத்திக்கான் வானொலி. பிப்ரவரி 12ல் வத்திக்கான் வானொலி தினத்தைச் சிறப்பிக்கின்றோம் என்றால், அதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 13, உலக வானொலி நாள். இவ்வாண்டு இவ்வுலக நாளை, “வானொலி: தகவலளித்தலில், பொழுதுபோக்களித்தலில், கல்வியறிவு வழங்குவதில் ஒரு நூற்றாண்டு" என்ற தலைப்பில் சிறப்பிக்கிறோம். தகவலளிப்பதில் சிறப்புப் பங்காற்றிய வானொலி, தற்போது பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படுவதையும், வருங்காலக் கல்விக்கு அதன் முக்கியத்துவத்தையும் உள்ளடக்கியதாக இந்த தலைப்பு உள்ளது.
கண்களுக்கு ஓய்வளித்து செவிகளுக்கு விருந்து கொடுப்பதை இந்நாள் எதிர்பார்க்கின்றது. நூறு ஆண்டுகளைத் தாண்டி வந்துவிட்ட வானொலி, கருத்துச் சுதந்திரத்தின் முக்கிய அடையாளமாக உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சமூகம், வானொலித் தகவல்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்காதது மட்டுமல்ல, நாம் விரும்பிய இடத்திற்கு எடுத்துச் செல்லும் சாதனமாகவும் வானொலி இருக்கிறது. சாலையில் வாகனத்தில் செல்வோரும், கடலில் படகில் செல்வோரும் கேட்டுக் கொண்டேச் செல்ல வானொலி உதவுகிறது.
அந்த காலத்தில் ஒரு தகவலை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு காற்று வழியாகவே கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்காற்றிய முதல் ஊடகம் எதுவென்றால் அது வானொலி தான். ஆனால் இன்று, தொலைக்காட்சி, கைபேசி, இணையதளம் என நாம் வளர்ந்துவிட்டாலும், முன்னோடியாக இருப்பது வானொலிதான். இதற்கு இன்று தேநீர் கடை சந்துகளும், ஆட்டோக்களில் ஒலிக்கும் பல பாடல்களும், பண்பலை ஒலிபரப்புக்களும் சான்றாக உள்ளன.
ஆனால் அதேவேளை, ‘வானொலி’ இன்று பலரது பயன்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. "யார் சார் இன்னைக்கு ரேடியோ கேட்குறாங்க?" என்பது, பல வானொலி நேயர்களும், வானொலி நிலையங்களும் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி.
தொலைக்காட்சிப் பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பு உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்னவென்றால் அது வானொலிதான். வானொலி ஒரு விலை குறைந்த சாதனம். குக்கிராமம் முதல் மாநகரம் வரையிலும், ஒரு நாடு முதல் உலகம் முழுவதும் வரை இணைப்பை ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது. சினிமா பாடல்களையும் தாண்டி மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தருவது வானொலி மட்டுமே. இரண்டாம் உலகப்போர் நடந்த தருணத்தில் குறிப்பாக போர் குறித்த தகவல்களை கிராமங்களில் ஒன்றாக ஓர் இடத்தில் கூடி கேட்டுக் கொண்டிருந்த காலமும் இருந்தது.
ஆதிகாலத்தில் ஒலியை வைத்தே தகவல்களை பரப்பிய மனித சமூகம், படிப்படியாக வளர்ச்சியடைந்து, தகவல் தொடர்பு வளர்ச்சியின் மைல்கல்லாக வானொலியைக் கண்டுபிடித்தது. அதிலிருந்து கிளைவிட்டதுதான், நொடிக்கு நொடி செய்திகள், திரைப்படங்கள், பாடல்கள் என எதை வேண்டுமானலும் நம் கையடக்க தொலைபேசியில் பார்க்கும் நிலை.
மனிதன் எதிரொலி கேட்டு வானொலி படைத்தான் என்றான் கவிஞன். ஆம், எதிரொலியை உற்று நோக்கிய ஜேம்ஸ் கிளார்க் மார்க்ஸ்வெல், மைக்கேல் பாரடே ஆகிய இரண்டு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை ஒலி அலைகளாக மாற்றும் கருவியை உருவாக்கினர். இவர்களின் அடித்தொட்டு ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர் மின்காந்த அலைகளை டிரான்ஸ்மீட்டராக மாற்றினார். பின்னர் இத்தாலியைச் சேர்ந்த குலியெல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டறிந்தார். இதையடுத்து, வானொலி கண்டுபிடிப்பிற்காக மார்கோனிக்கு 1909ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் விருது (Karl Ferdinand Braun என்பவருடன் பகிர்ந்து கொண்டார்) வழங்கப்பட்டது நாம் அறிந்ததே. இந்தியாவை பொறுத்தவரை 1927 ஆம் ஆண்டு மும்பை, மற்றும் கொல்கத்தாவில் முதன் முதலாக வானொலி நிலையம் தொடங்கப்பட்டது.
வானொலியில் செய்திகளையும், திரைப்படப் பாடல்களையும் கேட்கும் நேயர் எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மையெனினும், இன்றைய ஸ்மாட் தொலைபேசிகளிலும் வானொலி தனக்கான ஒரு குட்டி இடத்தை தக்கவைத்துள்ளதும் உண்மை. இன்றளவும் போர்ச்சூழல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போதும், கடலுக்குள் இருக்கும் மீனவர்களிடம் புயல், கடல் கொந்தளிப்பு போன்ற முக்கிய தகவல்களை கொண்டு செல்வதிலும் முதன்மையான இடத்தில் வானொலி உள்ளது. இன்று உலகம் முழுவதிலும் ஒரு இலட்சத்திற்கும் மேலான வானொலி நிலையங்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அதிகப்படியான கிராமங்களில் இன்றளவும் வானொலியை பயன்படுத்தித்தான் அன்றாட தகவல்களை அறிந்து கொள்கின்றனர். இரவு நேரங்களில் மனதைத் தாலாட்டும் பாடல்களை வானொலியில் கேட்டு விட்டு உறங்கச் செல்வது இன்னும் பலருக்கு வாடிக்கையான ஒன்று. தென்கச்சி கோ சுவாமிநாதன், இளையராஜா, சவுந்தராஜன், எஸ்பிபி, சித்ரா, வாணி ஜெயராம், சுசீலா எம்.எஸ்.விஸ்வநாதன், பி.பி.ஸ்ரீநிவாஸ், "ஆல் இந்தியா ரேடியோ மாநிலச் செய்திகள் வாசிப்பவர் சரோஜினி", "செய்திகள் வாசிப்பது செல்வராஜ்" உள்ளிட்டோர் வானொலியால் மட்டுமே மக்களை கட்டி வைத்திருந்தனர் என்றால் மூத்தக் குடிமக்களால் மறுக்க முடியாது.
1939 ஆம் ஆண்டு, பண்பலை வானொலி (FM) மக்களின் பயன்பாட்டிற்காக வந்தது. அதற்கடுத்து 1994 ஆம் ஆண்டு எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் 24 மணி நேரமும் இணையதளம் மூலம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் ஒலிபரப்பு வந்தது.
கடந்த 2011ஆம் ஆண்டு ஐ.நா.வின் 36வது பொதுஅவைக் கூட்டத்தில் முதன்முதலாக இஸ்பெயின், உலக வானொலி தினம் அறிவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து, பல நாடுகளின் ஒப்புதலோடு பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது. இதன் நோக்கமே வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே.
இந்தியாவிற்கு வெளியிலிருந்து தமிழில் ஒலிபரப்பும் வானொலிகள் என்று பார்த்தோமானால், இலங்கை வானொலி, பிபிசி தமிழோசை, சீன வானொலி, வெரித்தாஸ் வானொலி, வத்திக்கான் வானொலி, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, மாஸ்கோ வானொலி, சிங்கப்பூர் வானொலி, மலேசிய வானொலி, அட்வண்டிஸ்ட் உலக வானொலி, TWR வானொலி, HCJB வானொலி, பாகிஸ்தான் வானொலி, ஃபீபா வானொலி, போன்ற சிற்றலை வானொலிகளையும், ஃபேமிலி ரேடியோ, எஸ்.பி.எஸ்.ஆஸ்ரேலியா போன்ற சிறப்பு நிலை வானொலிகளையும் குறிப்பிட்டுச் சொல்லாலாம். இது தவிர, எத்தனையோ தமிழ் இணையதள வானொலிகள் உள்ளன.
வத்திக்கான் வானொலி
பிப்ரவரி 12ஆம் தேதி தன் 93ஆம் வயதைச் சிறப்பிக்கும் வத்திக்கான் வானொலியை எடுத்துக்கொண்டோமானால், 1931ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த வானொலியில் 1965ஆம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பு வாரத்திற்கு இருமுறை எனத் துவக்கப்பட்டது. 1986ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதியிலிருந்துதான் தினசரி ஒலிபரப்பு தமிழில் துவங்கியது. திருத்தந்தையின் வானொலியான இது, வானொலியைக் கண்டுபிடித்த குலியெல்மோ மார்க்கோனி என்பவரால், வத்திக்கான் நகர நாடு உருவாக்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் 1931ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது. திருத்தந்தை பதினோராம் பயஸால் 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது, 46 மொழிகளில் பண்பலை, செயற்கைக்கோள் மற்றும் இணையம் வழியாக தனது சேவைகளை வழங்குகின்றது. இதில் 61 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இரண்டாம் உலகப் போரின்போது நாத்சி ஜெர்மனியின் வதைப்போர் முகாம்களைக் கண்டித்து முதன் முதலாகச் செய்திகளை ஒலிபரப்பியது வத்திக்கான் வானொலி ஆகும். மேலும், போரின்போது நாடுகளுக்கு செய்தி அறியும் வழியாக இவ்வானொலி விளங்கியது. குடும்பங்கள் போர்க்கைதிகளைத் தொடர்புகொள்வதற்கு உதவியாக தகவல் அலுவலகம் ஒன்றையும் வத்திக்கான் வானொலி நிறுவியது. 1940க்கும் 1946ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில் 12 இலட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான உதவித் தகவல்கள் ஒலிபரப்பப்பட்டன என்பது இவ்வானொலியின் பெருமை.
வத்திக்கான் வானொலி உருவாக்கப்பட்ட பின்னர், இரண்டாம் உலகப் போர் காலத்திலும் சமய சுதந்திரம் மறுக்கப்பட்ட சர்வாதிகாரக் காலத்திலும், கம்யூனிசம் ஆட்சியிலிருந்த காலத்திலும் எனப் பல முக்கிய கட்டங்களில் நசுக்கப்பட்டோர் மற்றும் உரிமை மறுக்கப்பட்டோருக்கானத் திருஅவையின் குரலாக வத்திக்கான் வானொலி செயல்பட்டுள்ளது, தொடர்ந்து செயல்பட்டும் வருகிறது. இன்றும் எம் கூட வந்து நேயர் குடும்பத்தில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் வெளியிடுகிறோம்.
வானொலி ஒலிபரப்பின் முக்கியத்துவம் உணர்ந்து இணைந்து நடைபோடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்