தூய பேதுரு இறையியல் இணையவழிக்கல்வி பட்டமளிப்பு விழா
மெரினா ராஜ் – வத்திக்கான்
பொதுநிலையினர் மற்றும் துறவறத்தார், இறைநம்பிக்கையில் ஆழப்படும் விதமாகவும் கிறிஸ்தவ நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தும் விதமாகவும் ஸ்பாட் எனப்படும் தூய பேதுரு இணையவழி இறையியல் கல்வி திகழ்கின்றது என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் அருள்முனைவர் ஜெயபிரதீப்.
அண்மையில் பெங்களூரு தூய பேதுரு திருப்பீட நிறுவனத்தாரால் இணையவழியில் மறைநூல் மற்றும் இறையியல் பற்றிய பட்டயப்படிப்புக்களுக்கான முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவானது பெங்களூரு தூய பேதுரு திருப்பீட நிறுவனத்தில் நடைபெற்றது. அவ்விழா குறித்த செய்தி அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்பாட் (St. Peter’s Online Theology) நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள்முனைவர் ஜெயபிரதீப்.
பட்டமளிப்பு விழாவில் பெல்லாரி மறைமாவட்ட ஆயர் முனைவர் ஹென்றி டிசோஷா, பெங்களூரு தூய பேதுரு திருப்பீட நிறுவனத்தின் தலைவர் அருள்முனைவர் அந்தோணி இலாரன்ஸ் மற்றும் நிறுவனப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நம்பிக்கை மற்றும் அறிவாற்றலுக்கான கொண்டாட்டமாக சிறப்பிக்கப்பட்ட இந்த முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் 516 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 364 மாணவர்கள் இறைப்பணியியல், மறைநூல், திருஅவை சட்டங்கள் போன்றவற்றில் பட்டயப்படிப்பிற்கான பட்டத்தைப் பெற்றனர்.
மறைநூல்கள் மற்றும் இறையியல் படிப்புக்களுக்கான இணையவழிக் கல்வியானது கல்வி மற்றும் நம்பிக்கை செறிவூட்டல் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் பெற்றுள்ளதாகவும், கிறிஸ்தவ நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய ஆழமான புரிதலை வளர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும் இருக்கின்றது எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SPOT நிறுவனத்தின் தாக்கமானது எல்லைகடந்து நீண்டு, தொலைதூர கிராமங்களில் பணியாற்றும் நபர்களையும் சென்றடைந்துள்ளது எனவும், அருள்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள், திருப்பலி மறையுரைகளில் மட்டுமே கேட்டு வந்த விவிலிய விளக்கங்களை ஸ்பாட் நிறுவனம் வழங்கும் கல்வி வழியாக இன்னும் அதிகமதிகமாகப் பெற்று தெளிவடைய முடிந்தது எனவும் எடுத்துரைத்துள்ளார்.
வெறும் சான்றிதழ் படிப்புக்களாக மட்டும் இருந்துவிடாமல் தனி நபர்கள் மற்றும் சமூகங்கள் விவிலியம் பற்றிய அதிக புரிதல் மற்றும் இரக்கத்துடன் மக்களுக்குப் பணியாற்றவும், அதிகாரம் அளிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கற்றல் மற்றும் கண்டுபிடிப்பு, வாழ்க்கையை வளப்படுத்தும் வழியில் உள்ள ஆன்மாக்களை வளர்ப்பது போன்ற புதிய எல்லைகளை எதிர்காலத்தில் செய்யத் தயாராக உள்ளது என்றும், முதல் பட்டமளிப்பு விழா வெறும் கல்வி சாதனைக்கான கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல் தூயபேதுரு திருப்பீட நிறுவனத்தின் அறிவு மற்றும் நம்பிக்கையின் நீடித்த விருப்பத்திற்கான சான்றாகவும் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்