தேடுதல்

மன்னர் சவுல் முன்பு இளைஞன் தாவீது யாழ் மீட்டும் காட்சி மன்னர் சவுல் முன்பு இளைஞன் தாவீது யாழ் மீட்டும் காட்சி  

தடம் தந்த தகைமை : சவுலின் அரசவையில் தாவீது!

ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகல சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது. அப்பபொழுது சவுலின் பணியாளர்கள் அவரிடம், “ஐயா, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம்மைக் கலக்கமுறச் செய்கிறதே! உம் முன் நிற்கும் உம் பணியாளர்களாகிய நாங்கள் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை அழைத்து வர எங்களுக்குக் கட்டளையிடும்! ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம் மீது இறங்கும் பொழுது அவன் யாழ் மீட்டுவான்! நீரும் நலமடைவீர்!” என்றனர். எனவே, சவுல் தம் பணியாளரிடம், “யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை கண்டுபிடித்து என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார். பணியாளர்களில் ஒருவன், “இதோ பெத்லகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்; அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்; வீரமுள்ளவன்; போர்த்திறன் பெற்றவன்; பேச்சுத் திறன் உடையவன்; அழகானவன்; மேலும், ஆண்டவர் அவனோடு இருக்கிறார்” என்றான்.

அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதர்களை அனுப்பி “ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும்” என்று தெரிவித்தார். அதைக் கேட்ட ஈசாய் கொஞ்சம் அப்பத்தையும் ஒரு தோற்பை நிறைய திராட்சை இரசத்தையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதை ஒன்றின் மேல் ஏற்றி தம் மகன் தாவீது மூலம் சவுலுக்கு அனுப்பினார். தாவீது சவுலிடம் வந்தவுடன் அரசவைப் பணியில் சேர்ந்து விட்டார். சவுல் அவர் மீது மிகவும் அன்பு கொண்டு அவரை தம் படைக்கலன் தாங்குவோனாக நியமித்தார். "தாவீது என் அவையிலேயே இருக்கட்டும்; ஏனெனில், என் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்துள்ளது” எனறு சவுல் ஈசாயிடம் சொல்லியனுப்பினார். அதன் பின் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2024, 12:54