தடம் தந்த தகைமை : கோலியாத்து இஸ்ரயேலரை அச்சுறுத்தல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பெலிஸ்தியர் போருக்குப் படைகளை யூதாவிலுள்ள சோக்கோவிலில் ஒன்று திரட்டினர். சோக்காவுக்கும் அசேக்காவுக்கும் இடையேயுள்ள எபெசுதம்மில் அவர்கள் பாசறை அமைத்தனர். சவுலும் இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு ஏலா என்ற பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, பெலிஸ்தியருக்கு எதிராகப் போரிட அணிவகுத்தனர். பெலிஸ்தியர் அப்பக்கம் ஒரு மலையின் மீதும், இஸ்ரயேலர் இப்பக்கம் ஒரு மலையின் மீதும் நின்றிருக்க, அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.
அப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில், “நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும். அவன் என்னுடன் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்; நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிமைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும்” என்றான். மேலும், அந்தப் பெலிஸ்தியன், “இதோ, இஸ்ரயேல் படைகளுக்கு சவால் விடுகிறேன். என்னோடு போரிட இப்பொழுதே ஒருவனை அனுப்புங்கள்” என்றான். சவுலும் இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கலங்கிப் பெரிதும் அச்சமுற்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்