தேடுதல்

மன்னர் சவுல் தாவீதை சந்தித்தல் மன்னர் சவுல் தாவீதை சந்தித்தல்  

தடம் தந்த தகைமை : மன்னர் சவுல், தாவீதை சந்தித்தல்!

“என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றார் தாவீது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அந்நாள்களில் கோலியாத்தின் பழிப்புரையைக் கேட்ட தாவீது, தம்மருகில் இருந்தவர்களை நோக்கி, “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலின் இழிவை நீக்குகிறவனுக்கு என்ன கிடைக்கும்? வாழும் கடவுளின் படைகளைப் பழிப்பதற்கு விருத்த சேதனம் இல்லாத பெலிஸ்தியனாகிய இவன் யார்?” என்று கேட்டார். தாவீது கூறிய வார்த்தைகளைக் கேட்டவர்கள் அவற்றைச் சவுலிடம் தெரிவித்தனர். உடனே சவுலும் அவரை வரவழைத்தார். அப்போது தாவீது சவுலை நோக்கி, “இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது. நீயோ இளைஞன். ஆனால், அவனோ தன் இளம்வயது முதல் போரில் பயிற்சியுள்ளவன்” என்றார்.

தாவீது சவுலை நோக்கி, “உம் அடியானாகிய நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோ மந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால், நான் பின் தொடர்ந்து ஓடிச் சென்று அதை அடித்து அதன் வாயினின்று ஆட்டை விடுவிப்பேன்; அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியைப் பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன். உம் அடியானாகிய நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்று இருக்கிறேன். விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தியனும் அவற்றில் ஒன்றைப் போல்தான்; ஏனெனில், அவன் வாழும் கடவுளின் படைகளை இழிவுபடுத்தியுள்ளான்” என்றார். மேலும், தாவீது, “என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “சென்று வா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்” என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2024, 13:48