தடம் தந்த தகைமை – மோவாபியரை வெற்றி கொண்ட இஸ்ரயேலர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மறுநாள் காலை, பலி செலுத்தும் நேரத்தில் இதோ! தண்ணீர் ஏதோம் திக்கிலிருந்து ஓடி வந்தது! நாடு தண்ணீரால் நிரம்பியது. ‘தங்களோடு போர் புரிய அரசர்கள் வருகிறார்கள்’ என்று மோவாபியர் அனைவரும் கேள்வியுற்று, படைக்கலம் தாங்கக் கூடிய இளையோர், முதியோர் அனைவரையும் ஒன்று திரட்டி எல்லையில் அணிவகுத்து நின்றனர். மோவாபியர் காலையில் எழுந்த பொழுது, கதிரவனின் ஒளி தண்ணீர்மீது ஒளிர்ந்தது. மறுபக்கம் இருந்த அவர்களுக்குத் தண்ணீர் இரத்த வெள்ளமாய்த் தோன்றியது. உடனே அவர்கள், “அது இரத்தம்! அந்த அரசர்கள் தங்களுக்குள் போர் புரிந்து ஒருவர் மற்றவரை வெட்டி வீழ்த்திவிட்டனர். மோவாபியரே! வாருங்கள்! கொள்ளையடிப்போம்!” என்றனர். ஆனால், அவர்கள் இஸ்ரயேலின் பாசறைக்குள் நுழைந்தவுடன், இஸ்ரயேலர் எழுந்து மோவாபியரைத் தாக்கினர்.
இவர்கள் அவர்கள் முன்னிலையிலிருந்து பாய்ந்து தப்பி ஓடினர். ஆயினும், இஸ்ரயேலர் துரத்திச் சென்று மோவாபியரை வெட்டி வீழ்த்தினர். பின்னர், அவர்கள் நகர்களைத் தகர்த்து, எல்லா நல்ல நிலங்கள் மீதும் ஆளுக்கு ஒரு கல் வீசி நிரப்பினர். எல்லா நீருற்றுக்களையும் தூர்த்து, எல்லா நல்ல மரங்களையும் வெட்டி வீழ்த்தினர். அரண் சூழ்ந்த கீர் அரசேத்து மட்டும் எஞ்சி நின்றது. அந்நகரையும் கவண் வீசுவோர் வளைத்து அழித்தனர். தனக்கு எதிராகப் போரின் முடிவு இருந்ததை அறிந்த மோவாபிய மன்னன், வாளேந்திய எழுநூறு வீரர்களைச் சேர்த்துக் கொண்டு, ஏதோம் மன்னனை எதிர்க்கச் சென்றான். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னர், அவன் தனக்குப்பின் அரசாளும் உரிமையுள்ள தன் தலைமகனை இட்டுச் சென்று, மதிலின்மேல் அவனை எரிபலியாக ஒப்புக் கொடுத்தான். இஸ்ரயேலர் தங்களுக்கு எதிராகக் கடுஞ்சினம் மூள்வதைக் கண்டு, அவனை விட்டு அகன்று தம் சொந்த நாட்டுக்குத் திரும்பினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்