தடம் தந்த தகைமை – அவர் கொடுத்த வேலை
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
“ரபி, உண்ணும்” என வேண்டிய சீடர்களிடம் இயேசு, “நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது……. என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு”(யோவா 4; 31-32, 34) என்கிறார்.
இயேசு மெசியாதான். ஆனால் சாதாரணமாகவே வாழ்ந்தார். அவருக்குப் பசி வந்தது - சாப்பிட்டார். தாகம் வந்தது - குடித்தார். உறக்கம் வந்தது - உறங்கினார். துக்கம் வந்தது - அழுதார். யூதேயாவிலிருந்து கலிலேயா போகும் பாதையில் சமாரியப் பெண்ணோடு ஒரு சந்திப்பு. நீண்ட தூரப் பயணக் களைப்பில் பசியும் இயல்பாய் வந்திருக்கும் என்றெண்ணியே சீடர்கள் உணவு வாங்கி வந்து உண்ண அழைத்தனர். உணவுக்கே உணவு
காட்டி அழைக்கும் உணர்வுபூர்வமான நிகழ்வு இது. அவர் உலகிற்கான உணவு என்பதை உடனிருந்த சீடர்களும் உணர்ந்திருக்கவில்லை.
சிறார் காப்பகத்தில் பண்ணையார் ஒருவர் வந்து பந்தாவாக உணவு பரிமாறினார். ஒரு சிறுமி மட்டும் ஏதும் உண்ணாமல் தனியாக நிற்க, “ஏனம்மா சாப்பிடு; மட்டன் பிரியாணி, பாயாசம், ஐஸ் கிரீம் இருக்கே” என்றார். மௌனித்து நின்ற சிறுமியிடம் மீண்டும் அதிகாரத் தொனியில் “என்ன வேண்டும்? சொல்” எனப் பண்ணையார் கேட்க 'அன்பு வேண்டும்” என்று அமைதியாகச் சொன்னார் அச்சிறுமி.
அவனியில் அன்பையும், அமைதியையும், அதில் எழும் ஆனந்தத்தையும் நிலைப்படுத்த வேண்டும். அதற்கென அர்ப்பணத்தோடு உழைக்க வேண்டுமென்பதையே தன் உணவாகக் கொண்டார் இயேசு. நாம் நம்மிடம் உள்ளதை மட்டுமல்ல; நம்மையே பகிர்வதுதான் உண்மையான உணவளித்தல்.
இறைவா! உம் திருவுளம் நிறைவேற்றுதலையே உணவாகக் கருதிய இயேசுவின் வாழ்வு எமதாகட்டும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்