தடம் தந்த தகைமை - வாயை மூடு
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்து விடவா வந்தீர்? நீர் யாரென எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்கிறது தீய ஆவி.
வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ (மாற் 1:24-25) என அதட்டுகிறார் இயேசு.
நாசரேயன் இயேசுவை நாசரேத்து ஊரினரால் புரிந்துகொள்ள இயலவில்லை, அதற்கென அவர்கள் முயற்சிக்கவுமில்லை. ஆனால் கப்பர்நாகூம் ஊரில் வாழ்ந்தவர் புரிந்து வைத்துள்ளார். இயேசுவின் ஆளுமை, அருஞ்செயலாற்றும் வல்லமை, அவரது ஆழ்ந்த அர்ப்பணம், தீமைக்கு எதிரான அவரது நிலைப்பாடு, பாதிக்கப்பட்டோர் மீதான பரிவிரக்கம் யாவும் இங்கே தீய ஆவி பிடித்த ஒருவரால் ஒரு நம்பிக்கை அறிக்கையாகப் பிரகடனப்படுத்தப்படுகிறது. தீப்பந்தத்தை எவ்வளவுதான் கீழே தாழ்த்திப் பிடித்தாலும் அதன் சுடர் மேல் நோக்கியே உயரும். அர்ப்பணங்களுக்கு அதிகாரம் செலுத்தும் உரிமை உண்டு. இயேசு ஒரு தன்னிகரற்ற அர்ப்பணர். தன்னை மட்டும் எண்ணாமல் தரணி மக்கள்
வாழ வேண்டுமென்ற தணியாத் தாகவேகம் அவருக்குள் ஆழ்ந்திருந்தது. இயேசு சாமானியரோடு சாமானியராக சரிசமமாகப் பழகினாலும், சதிசெய்யும் எவரோடும் அவர் சமரசம் செய்ய முன்வரவில்லை. தனது கேள்விகளால், போதனைகளால், அருஞ்செயல்களால் தீய சக்திகளையும் ஆதிக்கவாதிகளையும் வாயடைக்கச் செய்தார். அன்பிலிருந்து புறப்படும் அர்ப்பணம் எப்போதும் ஆக்ரோஷமாகவே வெளிப்படும்.
சுயநலமற்ற அன்பிருந்தால் சமூகத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கும் துணிவு பிறக்கும்.
இறைவா! அடுத்தவர் புகழ வேண்டுமென எதையும் செய்யாமல், அன்புள்ளத்தோடு பணியாற்றும் அர்ப்பண மனம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்