தடம் தந்த தகைமை - உம்மோடு பேசும் நானே அவர்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார் என இயேசுவிடம் கூறுகிறார் சமாரியப்பெண்.
அதற்கு, “உம்மோடு பேசும் நானே அவர்” என பதிலுரைக்கிறார் இயேசு.
நாடு கடத்தலாலும், அடிமைப்படுத்தலாலும், பிற கலாச்சாரப் பிணைப்பாலும் இஸ்ரயேல் இனம் பிளவுபட்டது. அப்பிளவினால் ஏற்பட்ட இனக்கலப்பில் பிறந்தவர்களே சமாரியர். அப்பிளவுபட்ட வாழ்விலும் ஓர் ஒருங்கிணைப்பின் தேடல் இருந்தது. அத்தேடலின் அடையாளமே சமாரியப் பெண்ணின் கிறிஸ்து என்னும் மெசியாவின் எதிர்பார்ப்பு. அந்த மெசியா வந்தால் எல்லாரையும் ஒன்று சேர்ப்பார்; ஓர் இனச் சங்கமம் நிகழ்வுறும். அதன் வழியாக தங்கள் அடிமைத்தனம் எல்லாம் அகலும் என்ற நம்பிக்கை அன்றைய எளியோர் பலருக்குள் கனவாக இருந்தது. “உம்மோடு பேசும் நானே அவர்” என்ற இயேசுவின் வெளிப்படுத்தல் அவரது வாழ்வில் நிகழ்ந்த இரண்டாம் திருக்காட்சி என வருணிக்கலாம்.
யூதேயாவின் பெத்லகேமில் பிறந்தபோது அவரைத் தேடி வந்த ஞானியர் மூவருக்கு வெளிப்படுத்திய இயேசு (மத் 2;11) சமாரியாவில் கிணற்றண்டையில் ஒரு சாதாரண பெண்ணுக்கும் தம்மை மெசியாவாக வெளிப்படுத்தினார். ‘கடவுளின் கைகோர்ப்பு கடையரோடும் கதியற்றவரோடுமே’ என்ற உண்மைதனை இப்பெண் வழியாக இயேசு அரங்கேற்றம் செய்வது ஓர் அசாத்திய செயல்.
கள்ளங்கபடமற்ற மனப்பாங்கு கொண்டவரின் அனைத்துத் தவறுகளையும் நிபந்தனையின்றி மன்னிக்கலாம்.
இறைவா! இயல்பாய்ப் பழகவும், இயல்பாய் வாழவும் உந்துகின்ற உணர்வை என் இதயத்திற்குத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்