ஹாங்காங்கில் கத்தோலிக்க மற்றும் தாவோயிச 3 நாள் கருத்தரங்கு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஹாங்காங்கின் Yuen Yuen நிறுவனத்தில் இவ்வாரம் திங்கள் முதல் புதன் வரை இடம்பெற்றுவரும் மதங்களிடையே உரையாடலுக்கான திருப்பீடத்துறை மற்றும் ஹாங்காங் தாவோயிச அமைப்பினர் இணைந்து நடத்தும் கலந்துரையாடல் வழி இணக்கவாழ்வைக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் இவ்விருதரப்பினரும் இணைந்து செயலாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்கிற்கு, மதங்களிடையேயான உரையாடல் வழி இணக்கம் நிறைந்த சமூகத்தை உரமிட்டு வளர்க்க முடியும் என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிளவுபட்டு நிற்கும் உலகில் கத்தோலிக்கர்களும் தாவோயிசத்தினரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, உலகைக் குணப்படுத்தலில் ஒன்றிணைந்து பணியாற்ற உதவும் நோக்கத்தில் ஏற்பாடுச் செய்யப்பட்ட இந்த ஹாங்காங் கருத்தரங்கில், ஹாங்காங், சைனா, தாய்வான், பிரான்ஸ், இத்தாலி, தென்கொரியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்நாம், சிங்கப்பூர் ஆகியவை உட்பட பல நாடுகளின் இவ்விரு மதப் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
தற்போது இடம்பெற்றுவரும் கத்தோலிக்க மற்றும் தாவோயிச 3 நாள் கருத்தரங்கு குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட ஹாங்காங் கர்தினால் Stephen Chow அவர்கள், சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் பலன்தரும் பங்குதாரர்களாக மதங்கள் எவ்வாறுச் செயல்படமுடியும் என்பதற்கு இந்த கருத்தரங்கு உதவும் என்றார்.
தாவோயிஸ்ட் மதத்தின் கண்ணோட்டமானது, உலக நடவடிக்கைகளை அமைதி மற்றும் இணக்கத்தை நோக்கி வழி நடத்திச் செல்வதாகும் என கூறிய கர்தினால் Chow அவர்கள், கருணை, எளிமை, உலக வெற்றிகளை நாடி ஓடாமலிருத்தல் போன்ற மதிப்பீடுகளை பகிர்பவைகளாக கிறிஸ்தவமும் தாவோயிசமும் உள்ளன என மேலும் எடுத்துரைத்தார்.
இதே கருத்தரங்கில் பங்குகொள்ளும் மதங்களிடையே உரையாடலுக்கான திருப்பீடத்துறையின் செயலர் பேரருள்திரு இன்டுனில் ஜனகரத்னே கொடித்துவாக்கு கங்கனமலகே (Indunil Janakaratne Kodithuwakku Kankanamalage) அவர்கள், நம்பிக்கையின்மைகளும் விரக்திகளும் நிறைந்த உலகின் இந்த துன்பகரமான வேளைகளில், நாம் ஒன்றாக அமர்ந்து உரையாற்ற முடியும், பணியாற்ற முடியும், நடக்க முடியும் என்பதற்கு சான்றாக இத்தகையக் கூட்டங்கள் இருக்கின்றன என எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்