தேடுதல்

ஆப்ரிக்காவில் மருத்துவ உதவிகள் ஆப்ரிக்காவில் மருத்துவ உதவிகள் 

ஆப்ரிக்காவில் கத்தோலிக்க மதத்தின் மருத்துவப் பணிகள்

மத்திய ஆப்ரிக்க குடியரசில் 10 குழந்தை நல மருத்துவர்களும், 12 கோடி மக்களைக் கொண்ட எத்தியோப்பியாவில் 50 எலும்பியல் மருத்துவர்களும் உள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஆப்ரிக்கக் கண்டத்தில் நல ஆதரவுப் பணிகளை நடத்திவரும் கத்தோலிக்க அமைப்புக்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மார்ச் 20 புதன்கிழமையன்று திருப்பீடத்திற்கான இத்தாலிய தூதரகம் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடுச் செய்திருந்தது.

ஏழை நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நலத்திட்டங்களுடன் தலையிடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், Africa Cuamm என்ற அமைப்பின் மருத்துவர்கள் கலந்துகொண்டதுடன், ஆப்ரிக்காவில் மருந்துக்களைவிட ஆயுதம் அதிக அளவில் கிடைக்கப் பெறுகின்றன என்ற கவலையும் வெளியிடப்பட்டது.

ஆப்ரிக்காவின் நல ஆதரவுப்பணிகளில் கத்தோலிக்க துறவறத்தாரின் பணி மிக முக்கியத்துவம் நிறைந்தது என்பது எடுத்துரைக்கப்பட்டதுடன் இந்த துறவுசபைகளுக்கு வழங்கப்படவேண்டிய ஆதரவும் வலியுறுத்தப்பட்டது.

ஆப்ரிக்கக் கண்டத்தில் பயிற்சிப் பெற்ற மருத்துவப்பணியாளர்கள் போதிய அளவு இன்மை, போதிய கட்டுமான வசதிகளின்மை, போதிய மருத்துவக் கருவிகள் இன்மை என்ற மூன்று குறைபாடுகள் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

மத்திய ஆப்ரிக்க குடியரசு முழுவதும் 10 குழந்தை நல மருத்துவர்களே பணிபுரிவதாகவும், 12 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எத்தியோப்பியாவில் 50 எலும்பியல் மருத்துவர்களே இருப்பதாகவும் இக்கூட்டத்தில் எடுத்துக்காட்டுகள் எடுத்துரைக்கப்பட்டன.

ஆப்ரிக்காவில் இடம்பெறும் மருத்துவப் பணிகளில் 30 முதல் 70 விழுக்காடு மத நிறுவனங்களாலேயே நடத்தப்படுவதாகவும், கத்தோலிக்கத் திருஅவையின் பணி பாராட்டுக்குரியது மற்றும் ஆதரவு அளிக்கப்பட வேண்டியது எனவும், திருப்பீடத்திற்கான இத்தாலிய தூதரகம் நடத்தியக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2024, 14:46