தேடுதல்

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர்கள் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர்கள் 

அரசியல் காரணங்களுக்காக கிறிஸ்தவ மதிப்பீடுகளை வளைக்காதீர்

இன்று ஐரோப்பாவும் உலகமும் கண்டுவரும் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள, கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு உரிய இடம் வழக்கப்படவேண்டியது அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அரசியல் சுயநலக் காரணங்களுக்காக ஒருபோதும் கிறிஸ்தவ மதிப்பீடுகள் வளைக்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒன்றிணைந்த செயலகம்.

ஐரோப்பாவிலுள்ள 26 ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்த ஜூன் மாதம் இடம்பெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில், அரசியல் சுய இலாபங்களுக்கும், இன அடிப்படையிலான வாதங்களுக்கும் என கிறிஸ்தவ மதிப்பீடுகளை வளைக்க முயல்வது தவிர்க்கப்பட வேண்டும் என விண்ணப்பித்துள்ளது.

இன்றைய ஐரோப்பா சந்தித்துவரும் மாற்றங்கள் மற்றும் சவால்களை மனதில்கொண்டு ஐரோப்பாவின் வருங்காலம் குறித்தப் பேச்சுவார்த்தைகளில் கிறிஸ்தவ மதிப்பீடுகள் மீண்டும் மைய இடம் வகிக்க வேண்டும் என தங்கள் செய்தியில் கூறியுள்ள ஐரோப்பிய ஆயர்கள், ஐரோப்பாவின் அனைத்துத் திட்டங்களிலும் கிறிஸ்தவ மதிப்பீடுகளே அடிப்படையாக இருப்பதால், ஐரோப்பிய திருஅவைகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர்.

பொருளாதரப் பிரச்சனைகள், குடிபெயர்தல், நல அதரவுப் பிரச்சனைகள், அண்மை நாடுகளில் இடம்பெறும் போர்கள் போன்றவைகளின் விளைவுகள் குறித்து கவலையை வெளியிடும் ஆயர்கள், ஜனநாயகத்தில் குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

இன்று ஐரோப்பாவும் உலகமும் கண்டுவரும் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள, பெரும்பான்மை ஐரோப்பிய மக்கள் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு உரிய இடம் வழக்கப்படவேண்டியது அவசியம் என தங்கள் செய்தியில் மேலும் கூறியுள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2024, 14:38