மலேசியாவில் திருமுழுக்குப் பெறும் 1,700 புகுநிலைக் கிறிஸ்தவர்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மலேசியாவின் தலத்திருஅவைச் சமூகம் 1,700-க்கும் மேற்பட்ட புகுநிலைக் கிறித்தவர்களுக்குத் திருமுழுக்கு வழங்கத் தயாராகி வருவதாக Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அண்மைய ஆண்டுகளில், மலேசியாவில் உள்ள கத்தோலிக்கச் சமூகத்தில் திருமுழுக்குக் கோரும் வயதுவந்தோரின் (Adults) எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், பல்வேறு பங்குத்தளங்களிலிருந்து வரும் திருமுழுக்குப் பெற விரும்பும் வயதுவந்தோரின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் 'வயதுவந்தோரின் கிறித்தவ புகுமுகச் சடங்கு' என்ற புதியதொரு பாதையை பல்வேறு மறைமாவட்டங்கள் திறந்து வைத்துள்ளன என்றும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் நிகழவிருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாத் திருவிழிப்புத் திருப்பலியின்போது, 1,700-க்கும் மேற்பட்ட மலேசிய புகுநிலை கிறித்தவர்கள் திருமுழுக்குப் பெறத் தயாராகி வருகின்றனர் என்று கூறும் அச்செய்திக் குறிப்பு, கோலாலம்பூர் உயர்மறைமாவட்டத்தில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தில் பல்வேறு பங்குத்தளங்களைச் சேர்ந்த மொத்தம் 547 புகுநிலைக் கிறிஸ்தவர்கள், மறைக்கல்வி ஆசிரியர்கள், ஞானப்பெற்றோர் அனைவரும் அருள்பணியாளர்களுடன் கூடியிருந்தனர் என்றும் தெரிவிக்கிறது.
இவர்களுக்கு அருளுரை வழங்கிய பேராயர் Julian Leow அவர்கள், கடவுள்மீது நம் முதுபெரும் தந்தை ஆபிரகாம் கொண்டிருந்த பிரமாணிக்கத்தையும், அவர் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து தனது ஒரே மகன் ஈசாக்கை பலியிடத் தயாராக இருந்ததையும் சுட்டிக்காட்டியதுடன், அவரிடம் விளங்கிய அதே நம்பிக்கையையும் பிரமாணிக்கத்தையும் கொண்டிருக்குமாறும் புகுநிலைக் கிறிஸ்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அனைவருக்கும் மீட்பைக் கொண்டுவருவதற்காகத் தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருந்த இயேசுவின் பணிவாழ்வுக் குறித்தும் அவர்தம் கீழ்ப்படிதல் குறித்தும் வலியுறுத்தி பேசிய பேராயர் Leow அவர்கள், புகுநிலைக் கிறிஸ்தவர்கள் யாவரும் கடவுளுக்கு உண்மையாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும், தான் தெரிந்துகொண்ட மக்களுடன் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி அவர்கள் அனைவரையும் கடவுள் அழைத்துள்ளாகவும் எடுத்துரைத்தார்.
மேலும் திருஇருதய ஆண்டவர் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய பேராயர் ஜான் வோங் அவர்கள், இந்தப் புகுநிலைக் கிறிஸ்தவர்களை அன்புடன் வரவற்றதுடன், திருமுழுக்கு என்பது தொடக்க நிலைதான் என்றும், இறைவார்த்தைகளைக் வாசிப்பதிலும், சிந்திப்பதிலும், அவற்றை வாழ்வாக்குவதிலும் எப்போதும் இயேசுவுடன் இணைந்திருக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்