தேடுதல்

இயேசுவின் இறந்த உடல் அன்னைமரியின் மடியில் இயேசுவின் இறந்த உடல் அன்னைமரியின் மடியில்  (Tutti i diritti sono riservati)

புனித வெள்ளி - புதைக்கப்பட்ட கோதுமைமணி

இயேசு தன்‌ அன்னையை யோவானுக்கு மட்டும்‌ தாயாகத்‌ தரவில்லை. நமக்கும்‌, அவரைப் பின்பற்றுகின்ற எல்லாருக்குமே தன்‌ தாயை அம்மாவாக விட்டுச்‌ சென்றார்‌

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இன்று இயேசு சிலுவையில் கொல்லப்பட்ட நாள்! இந்த நாள் புனித வாரத்தின் பெரிய வெள்ளி, நல்ல வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. சாவு ஒன்று நடந்தேறிய நாள் இது. அதுவும், அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்டு, அறச்செயல்கள் அரசியல் ஆக்கப்பட்டு, ஒருவர் கலகக்காரனாக பட்டம் சூட்டப்பட்டு, நீதியை வளைத்து, மதத்தலைவர்கள் திட்டமிட்டுச் சாவு நிகழ்ந்த நாளை ‘நல்ல வெள்ளி’ என்று கூறுவது கொஞ்சம் முரணாகத் தெரியவில்லையா?. அன்று நமக்குத் தெரிந்தவரையில் நல்லது எதுவும் நடந்ததா?

இயேசுவின்மேல் அவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறித் தாக்குதல் அவர் எதிர்பார்த்த ஒன்றுதான், அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்ட ஒன்றுதான். தனக்கு இக்கதி நேரும் என்பது தெரிந்திருந்தும் நீதிக்காகவும், நேர்மைக்காகவும், உண்மைக்காகவும் அன்பிற்காகவும் எடுத்த தீர்க்கமான நிலைப்பாடு அவரை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றது. இதன் வழிதான் சிலுவைச் சாவின் வெள்ளி நல்ல வெள்ளியாகியது, ஆம், புனித வெள்ளியாகியது.

இயேசு சிலுவையில் தொங்கிய அந்த இறுதி நிமிடங்களை கொஞ்சம் கண்முன்னே கொண்டுவருவோம்.

- முதலில் நம்மை தாக்கும் வார்த்தைகள், “தந்தையே, இவர்களை மன்னியும்‌. தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத்‌ தெரியவில்லை” என்பதைக் குறித்து சிந்திப்போம்.

தன்‌ அன்னையை யோவானுக்கு மட்டுமல்ல, நமக்கும்‌, அம்மாவாக விட்டுச்‌ சென்றதை தியானிப்போமா‌?

- எத்தனை வேதனை இருந்தால், இயேசு தன் அன்பு தந்தையை நோக்கி, “என்‌ இறைவா, என்‌ இறைவா, ஏன்‌ என்னைக்‌ கைவிட்டீர்‌?” என்று கூக்குரலிட்டிருப்பார்?.

- அதே இறைத்தந்தையிடம்தான் தன் ஆவியை ஒப்படைக்கிறார். வானம் இடி இடித்தது, சூரியன் மறைந்தது, பூமி குலுங்கியது.

- மரணம் நிகழ்ந்தபின் நிக்கதேமுவும், அரிமத்தியா ஊரைச்‌ சேர்ந்த யோசேப்பும் அடக்கச்சடங்கு ஏற்பாடுகளை கவனித்து அன்னை மரியாவுக்கு உதவி, உடலை நல்லடக்கம் செய்கின்றனர்.

- இன்று நம்‌ கண்முன்னே இறந்து அடக்கம்‌ செய்யப்பட்டாலும்‌, உண்மையாகவே இறைமகனாக இருக்கும் நம் மீட்பர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம். ‌

அன்பு நெஞ்சங்களே, இந்த கொடூர மரணத்தை நேரில் கண்ட இயேசுவின் நெருங்கிய நட்பு குடும்பத்தின் இலாசரும் அவரின் இரு சகோதரிகளும், நாம் இதுவரை இப்போது, இந்நிகழ்ச்சியில் தியானித்த வார்த்தைகளைக் கொண்டு உரையாடிய ஒரு கற்பனைச் சித்திரத்தை இப்போது உங்கள் முன் படைக்கிறோம்.   

இயேசுவின் கல்லறை அருகே லாசரும் மார்த்தாவும் மரியாவும்

ஒலிச்சித்திரம்

இலாசர்‌: மார்த்தா, மரியா. நாசரேத்து போதகரின்‌ உடலை அடக்கம்‌ செய்து, கல்லறையை பெரியக்‌ கல்லால்‌ மூடிவிட்டார்கள்‌. அதையே எவ்வளவு நேரம்‌ பார்த்துக்‌ கொண்டு நிற்பீர்கள்‌? இன்னும்‌ ஒருமணி நேரத்தில்‌ சூரியன்‌ மறைந்துவிடும்‌, ஓய்வு நாளும்‌ தொடங்கிவிடும்‌. நாமும்‌ சீக்கிரமாக பெத்தானியாவுக்கு போக வேண்டும்‌. புறப்படுவோமா?

மார்த்தா: ஆம்‌, இலாசர்‌... புறப்படலாம்‌... ஆனால்‌, இந்த இடத்தை விட்டு நகரவே முடியவில்லையே! சிறுவயதிலிருந்தே ஒரு அண்ணனைப்‌ போல நம்மோடு பழகிவந்த இயேசு, இவ்வளவு கொடூரமாகச்‌ கொல்லப்பட்டதை நேரிலே பார்த்ததால்‌, பெரும்‌ பாரம்‌ மனதை அழுத்துகிறது. இதயம்‌ துடிக்கிறது. இதோ பார்‌... மரியா இன்னும்‌ அழுதுகொண்டே இருக்கிறாள்‌.  

மரியா: (அழுகுரவில்‌) என்னால்‌ தாங்கமுடியவில்லை, மார்த்தா! (அழுகை) போதகர்‌ இயேசு யாருக்கும்‌ எந்தத்‌ தீமையும்‌ செய்தவரல்ல. நல்லதையே போதித்தார்‌, நல்லதையே செய்தார்‌, நம்முடன்‌ மிகுந்த அன்போடு பழகினார்‌. (அழுகை) அவருக்கு ஏன்‌ இத்தனை அவமானம்‌, இவ்வளவு கொடுமையான தண்டனை? அவர்‌ உடலெங்கும்‌ எத்தனை ஆழமானக்‌ காயங்கள்‌, பார்த்தாயா? முகத்திலும்‌, உடல்‌ முழுவதும்‌ இரத்தம்‌. சிலுவையில்‌ தொங்கியது ஒரு மனித உடலாகவேத் தெரியவில்லை.(அழுகை)

இலாசர்‌: துன்பப்படும்‌ ஊழியர்‌ ஒருவரைப்‌ பற்றி இறைவாக்கினர்‌ எசாயா சொல்லும்போது, “மனித சாயலே அவருக்கு இல்லை; வன்செயல்‌ எதுவும்‌ அவர்‌ செய்ததில்லை; வஞ்சனை எதுவும்‌ அவர்‌ வாயில்‌ இருந்ததில்லை; இழிவுபடுத்தப்பட்டு, வதைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டார்‌. அடிப்பதற்கு இழுத்துச்‌ செல்லப்பட்ட ஆட்டுக்குட்டியைப்‌ போல தம்‌ வாயைத்‌ திறவாதிருந்தார்‌” என்று எழுதியுள்ளார்‌. இயேசு சிலுவை சுமந்து வந்ததையும்‌, அறையுண்டு தொங்கியதையும்‌ பார்த்தபோது இந்த வரிகள்‌ தான்‌ என்‌ நினைவில்‌ தோன்றின.

மார்த்தா: உண்மை தான்‌. இன்னொன்று கவனித்தாயா, இலாசர்‌? நமது மாலைநேர மன்றாட்டில்‌, “ஆண்டவரே, உம்மிடம்‌ நான்‌ அடைக்கலம்‌ புகுந்துள்ளேன்‌*” எனத்‌ தொடங்கும்‌ தாவீதின்‌ பாடலில்‌ “உமது கையில்‌ என்‌ உயிரை ஒப்படைகின்றேன்‌” என்னும்‌ வரி ஒன்று வரும்‌.. “தந்தையே” என்று கடவுளைக்‌ கூப்பிட்டு, இந்த வரிகளை சொல்லிவிட்டுத் தான்‌, இயேசு தன்‌ உயிரைத்‌ துறந்தார்‌.

இலாசர்‌ : ஆம்‌, மார்த்தா... அதே போல, “என்‌ இறைவா, என்‌ இறைவா, ஏன்‌ என்னைக்‌ கைவிட்டீர்‌?” என்று உரத்தக்‌ குரலில்‌ கதறினார்‌ அல்லவா? அதுவும்‌ தாவீது அரசருடைய மற்றொரு பாடலின்‌ ஆரம்ப வரிகள்‌ தான்‌. அந்தப்‌ பாடலில்‌, “என்‌ கைகளையும்‌, கால்களையும்‌ துளைத்தார்கள்‌. என்‌ ஆடைகளைத்‌ தங்களிடையே பங்கிட்டுக்‌ கொள்கின்றனர்‌; என்‌ உடையின்‌ மேல்‌ சீட்டுப்‌ போடுகின்றனர்‌” என்றும்‌ தாவீது அரசர்‌ எழுதி இருக்கிறார்‌. இயேசுவை சிலுவையில்‌ அறைந்த பிறகு, அவருடைய ஆடைகளை உரோமைப்‌ படைவீரர்கள்‌ சீட்டுப்‌ போட்டுத்‌ தங்களுக்குள்‌ பங்கிட்டுக்‌ கொண்டதை நாம்‌ நேரிலே கண்டோமல்லவா?

மரியா: அவர்‌ சிலுவையில்‌ தொங்கியபோது, உச்சிவேளை தொடங்கி ரொம்ப நேரம்‌ சூரியன்‌ மறைந்து, எங்கும்‌ இருள்‌ சூழ்ந்துவிட்டதைக்‌ கண்டு நான்‌ பயந்து போனேன்‌, மார்த்தா. அந்த இருளில்‌ திடீரென நிலநடுக்கமும்‌, சூறைக்காற்றும்‌ அந்த மலையை உலுக்கிவிட்டன. பாறைகள்‌ பிளந்து உருண்ட அதிர்ச்சியில்‌ நான்‌ கீழே விழுந்துவிட்டேன்‌. தொலைவில்‌ நின்றிருந்த பெண்கள்‌ பலர்‌ அச்சத்தோடு, மார்பில்‌ அடித்துக்‌ கொண்டு அலறினார்கள்‌. சகோதரனைப்‌ போல அன்பு காட்டிய போதகர்‌ இயேசு, நம்மைப்‌ போல ஒரு சாதாரண மனிதர்‌ அல்ல என்பதற்கு இவையெல்லாம்‌ அடையாளம்‌ தானே?

மார்த்தா: இந்த நாசரேத்து ரபி அன்போடு பழகியது மட்டுமல்ல... அவருடைய சொந்த தம்பி-தங்கைகளைப்‌ போல உறவோடும்‌, நட்போடும்‌ நம்மை நேசித்தார்‌. சிறுவயதில்‌ எருசலேம்‌ வரும்போதெல்லாம்‌, பெற்றோரோடு நம்‌ விட்டிற்கு வந்து ஓரிரு நாள்‌ தங்கிவிட்டுச்‌ சென்றது எனக்கு நன்றாக நினைவில்‌ இருக்கிறது.

மரியா: சிறுவயதில்‌ மட்டுமல்ல, அக்கா! அவர்‌ நாடெங்கும்‌ போதித்து வந்தபோது, பெத்தானியாவுக்கு அருகில்‌ வரும்போதெல்லாம்‌ நம்‌ வீட்டிற்கு பல தடவை வந்திருக்கிறாரே?

மார்த்தா: உண்மைதான்‌, மரியா. ஒருமுறை ரபி நம்‌ விட்டிற்கு வந்தபோது, என்னைத்‌ தனியாக வேலை செய்ய விட்டுவிட்டு, நீ அவருடைய காலடியில்‌ அமர்ந்து கொண்டாய்‌. நானும்‌ கோபத்தோடு ரபியிடம்‌ வந்து, “நான்‌ மட்டும்‌ தான்‌ வேலை செய்யவேண்டுமா? மரியாவையும்‌ எனக்கு உதவி செய்ய வரச்‌ சொல்லுங்கள்‌” என்று முறையிட்டேன்‌. அதற்கு அவர்‌, “மரியா செய்வது தான்‌ சரியானது, தேவையானது” என்று சொன்னார்‌.

மரியா: அதோ பார்‌! போதகரின்‌ அம்மாவும்‌, யோவானும்‌ கல்லறையின்‌ முன்னால்‌ பாறையில்‌ உட்கார்ந்திருக்கிறார்கள்‌. அவர்கள்‌ அருகில்‌ மகதலா மரியாவும்‌, சலோமியும்‌, குளோப்பாவின்‌ மனைவியும்‌ நிற்கிறார்கள்‌. அண்ணா, போதகரின்‌ அம்மா இப்போது எங்கே போவார்‌?

இலாசர்‌: இயேசு உயிர்விடுவதற்கு முன்‌, யோவானைத்‌ தன்‌ தாயாரின்‌ மகன்‌' என்றும்‌, *தன்‌ தாயாரை யோவானின்‌ அம்மா' என்றும்‌ சொன்னதை நீ கேட்கவில்லையா, மரியா? போதகரின்‌ அம்மா இனிமேல்‌ யோவானோடு தான்‌ இருப்பார்‌. ஆனால்‌, ரபி அப்படி சொன்னபோது, தன்‌ அன்னையை யோவானுக்கு மட்டும்‌ தாயாராகத்‌ தரவில்லை... நமக்கும்‌, ரபியை பின்பற்றுகின்ற எல்லாருக்குமே தன்‌ தாயை அம்மாவாக விட்டுச்‌ சென்றார்‌ என்றே நினைக்கிறேன்‌. .

மரியா: போதகருடைய அம்மா நமக்கெல்லாம்‌ அம்மா என்றால்‌, அது பெரும்‌ பாக்கியம்‌ தானே, அண்ணா! ஒரு தடவை போதிக்கும்போது, "உங்கள்‌ பகைவரையும்‌ அன்பு செய்யுங்கள்‌; உங்களைத்‌ துன்புறுத்துவோருக்காக இறைவனிடம்‌ வேண்டுங்கள்‌" என்று இயேசு சொன்னதை நான்‌ கேட்டேன்‌. அன்று சொன்னதை இந்த மலையில்‌ இன்று செய்தும்‌ காட்டிவிட்டார்‌. . தாங்க முடியாத வேதனையோடு சிலுவையில்‌ தொங்கும்போது கூட, “தந்தையே, இவர்களை மன்னியும்‌. ஏனெனில்‌, தாங்கள்‌ செய்வது என்னவென்று இவர்களுக்குத்‌ தெரியவில்லை” என்று சொல்லி, தன்னை கொலை செய்தவர்களுக்காக கடவுளிடம்‌ வேண்டிக்கொண்டார்‌.

மார்த்தா: அடக்கம்‌ செய்வதற்காக போதகரின்‌ உடலின்‌ மேல்‌ நறுமணத்‌ தைலத்தையும்‌, வாசனை திரவியங்களையும்‌ பூசும்போது, இலாசரும்‌, நானும்‌ அங்கே இருந்தோம்‌... யோவானும்‌, மற்றப்‌ பெண்களும்‌ கூட இருந்தார்கள்‌. உன்னைக்‌ காணவில்லையே, மரியா? நீ ஏன்‌ அங்கே வரவில்லை?

மரியா: ரபியின்‌ உயிரற்ற உடலை பார்க்க எனக்கு தைரியம்‌ இல்லை, அக்கா. ஆனால்‌, பரிமளம்‌ கலந்த இலாமிச்சை தைலத்தை நான்‌ ஏற்கனவே அவர்‌ உடலில்‌ பூசிவிட்டேன்‌! இலாசர்‌: என்ன சொல்கிறாய்‌, மரியா? நீ எப்போது தைலம்‌ பூசினாய்‌? ரபியின்‌ உடல்‌ அருகில்‌ நீ வரவே இல்லையே?

மரியா: அண்ணா! பெத்தானியாவில்‌ நமது வீட்டிற்கு போன வாரம்‌ போதகர்‌ வந்திருந்தார்‌ அல்லவா? அக்கா உணவு சமைக்கும்போது, நான்‌ இலாமிச்சை தைலத்தை இயேசுவின்‌ பாதங்களில்‌ பூசி, என்‌ கூந்தலால்‌ துடைத்தேன்‌. அப்போது சிலர்‌ “இந்த விலையுயர்ந்த தைலத்தை விற்று, ஏழைகளுக்கு நல்லது செய்யலாமே” என்று சொல்லி, என்னை தடுக்க வந்தபோது, போதகர்‌ என்ன சொன்னார்‌ தெரியுமா? (அழுகை) “இவளைத்‌ தடுக்காதீர்கள்‌. என்‌ அடக்க நாளை முன்னிட்டு இவள்‌ இதைச்‌ செய்யட்டும்‌. ஏழைகள்‌ உங்களோடு என்றும்‌ இருக்கிறார்கள்‌. ஆனால்‌, நான்‌ உங்களோடு என்றும்‌ இருக்கப்‌ போவதில்லை” என்று சொன்னார்‌. (அழுகை) “நான்‌ உங்களோடு என்றும்‌ இருக்கமாட்டேன்‌” என்று அவர்‌ சொன்னது சரியாயிற்று! இன்று அவர்‌ நம்மைவிட்டுப் போய்விட்டார்‌.

மார்த்தா: ரபியின்‌ உடலை அடக்கம்‌ செய்யும்‌ போது கூடவே இருந்து இரண்டு பெரியவர்கள்‌ உதவி செய்தார்களே, இலாசர்‌. அவர்கள்‌ இருவரும்‌ யார்‌? இயேசுவின்‌ சீடர்களோடு அவர்களை நான்‌ பார்த்ததே இல்லை.

இலாசர்‌: நமது குல முறைப்படி அடக்கம்‌ செய்வதற்கு வெள்ளைப்‌ போளமும்‌, சந்தனத்‌ தாளும்‌, மற்ற வாசனை பொருள்களும்‌ வாங்கி வந்தவர்‌, நிக்கதேம்‌. அவர்‌ பரிசேயர்‌. பெரும்‌ செல்வந்தர்‌. உடலை சேர்த்துக்‌ கட்டுவதற்கு மெல்லியத்‌ துணியைக்‌ கொண்டு வந்தவர்‌ அரிமத்தியா ஊரைச்‌ சேர்ந்த யோசேப்பு. இருவருமே தலைமைச்‌ சங்கத்தின்‌ உறுப்பினர்கள்‌ தான்‌. இயேசுவின்‌ போதனைகளால்‌ ஈர்க்கப்பட்டு, அவர்‌ மேல்‌ நம்பிக்கை வைத்திருந்தார்கள்‌. அவருடைய பணிக்கு பண உதவியும்‌ செய்தார்கள்‌. இருவரும்‌ போதகருக்கு எதிராக இருந்த கூட்டத்துக்கு பயந்து, இரகசியமாக இயேசுவை பின்பற்றி வந்தார்கள்‌.

மார்த்தா: உண்மையாகவா? தலைமைச்‌ சங்கத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ ரபிக்கு இத்தனை நெருக்கமாக இருந்தது ஆச்சரியம்‌ தான்‌. ஆனால்‌, ரபியின்‌ உடலை அடக்கம்‌ செய்வதற்கு இந்தக்‌ கல்லறை எப்படி கிடைத்தது, இலாசர்‌?

இலாசர்‌: அந்தக்‌ கல்லறை அரிமத்தியா யோசேப்புவுக்கு சொந்தமானதாம்‌. இதுவரை யாரும்‌ அடக்கம்‌ செய்யப்படாத புதுக்‌ கல்லறை என்று சொன்னார்கள்‌. இந்த யோசேப்பு தான்‌ துணிச்சலோடு ஆளுநரிடம்‌ சென்று, யூத முறைப்படி அடக்கம்‌ செய்ய போதகரின்‌ உடலை தரவேண்டும்‌ என்று வாங்கி வந்தாராம்‌. கொல்கொதா குன்றுக்கு அருகிலே இந்தக்‌ கல்லறை இருந்ததால்‌, சீக்கிரமாக அடக்கம்‌ செய்ய முடிந்தது.

மார்த்தா: ஒன்றை கவனித்தாயா, இலாசர்‌? கலிலேயாவில்‌ தொழுகைக்கூடத்‌ தலைவரின்‌ மகள்‌ இறந்த சிறிது நேரத்தில்‌, போதகர்‌ அவளை உயிரோடு எழுப்பினார்‌. நயீன்‌ நகரத்தில்‌ ஒரு கைம்பெண்ணின்‌ மகனுடைய உடலை அடக்கம்‌ செய்வதற்காக நகர வாயிலைக்‌ கடந்து வந்தபோது, இயேசு அவனுக்கு உயிர்‌ கொடுத்தார்‌. ஆனால்‌, இலாசர்‌, உன்‌ நிலை அப்படி அல்ல! இறந்து கல்லறையில்‌ அடக்கம்‌ செய்யப்பட்ட நான்கு நாள்களுக்கு பிறகு, இயேசு உன்னை உயிரோடு வெளியே வரச்‌ செய்தார்‌. இவ்வளவு வல்லமையோடும்‌, அதிகாரத்தோடும்‌ பல அருஞ்செயல்களை செய்த ரபி, இத்தனை அவமானங்களையும்‌, கொடுமைகளையும்‌ ஏற்றுக்கொண்டு இறந்து போனதை என்னால்‌ தாங்கமுடியவில்லை. (அழுகை) இந்த சின்ன வயதில்‌ ரபியின்‌ வாழ்க்கை முடிந்துவிட்டதே!

மரியா: அக்கா! இந்த கொல்கொதா மலையில்‌ இன்று நடந்ததை எல்லாம்‌ நீ பார்த்தாய்‌ அல்லவா? ரபியின்‌ விலாவை ஈட்டியால்‌ குத்திய உரோமை படைவீரன்‌, “உண்மையாகவே இவர்‌ இறைமகன்‌ தான்‌” என்று உரக்கச்‌ சொன்னதை நாம்‌ கேட்டோமே! இலாசர்‌ அடக்கம்‌ செய்யப்பட்டு நான்கு நாள்‌ கழித்து பெத்தானியாவுக்கு வந்த போதகரை வழியில்‌ நீ சந்தித்து அழுதபோது, “உயிர்த்தெழுதலும்‌ வாழ்வும்‌ நானே. என்னிடம்‌ நம்பிக்கை கொள்பவர்‌ இறப்பினும்‌ வாழ்வார்‌. இதை நீ நம்புகிறாயா?” என்று உன்னைக்‌ கேட்டார்‌. அப்போது நீ என்ன சொன்னாய்‌, நினைவிருக்கிறதா அக்கா?

மார்த்தா: அதை நான்‌ மறக்கமுடியுமா, மரியா? “நீ நம்புகிறாயா?” என்று ரபி கேட்டபோது, “ஆம்‌ ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்‌” என்று சொன்னேன்‌. இலாசரின்‌ கல்லறைக்கு அருகே வந்த ரபி உள்ளம்‌ கலங்கி கண்ணீர்‌ விட்டு அழுதார்‌. ஆனால்‌, இலாசரை அவர்‌ உயிரோடு எழுப்புவார்‌ என்று நான்‌ எதிர்பார்க்கவே இல்லை.

மரியா: இறந்தவரை உயிர்த்தெழச்‌ செய்வது கடவுளால்‌ மட்டுமே சாத்தியம்‌, அக்கா. மேலும்‌, ரபியின்‌ போதனைகளில்‌ வெளிப்பட்ட தெளிவான ஞானமும்‌, அவர்‌ ஆற்றிய வல்ல செயல்களும்‌ கடவுளிடமிருந்து வந்தவரால்‌ மட்டுமே செய்யமுடியும்‌. “நீரே மெசியா! நீரே இறைமகன்‌” என்று நீ போதகரைப்‌ பார்த்துச்‌ சொன்னது உண்மைதான்‌. இன்று நம்‌ கண்முன்னே இறந்து அடக்கம்‌ செய்யப்பட்டாலும்‌, நாசரேத்து ரபி இன்னும்‌ நம்‌ கூடவே இருப்பதைப்‌ போலத்‌ தான்‌ எனக்குத்‌ தெரிகிறது.

இலாசர்‌: உண்மை தான் மரியா. இயேசு தன்னைக்‌ குறிப்பிடும்‌ போதெல்லாம்‌ “மானிட மகன்‌” என்றே சொல்லுவார்‌. சில நாள்களுக்கு முன்னர்‌ எருசலேமுக்கு வந்துகொண்டிருக்கும்‌ போது, “மானிட மகன்‌ தலைமைக்‌ குருக்களிடமும்‌, மறைநூல்‌ அறிஞர்களிடமும்‌ ஒப்புவிக்கப்படுவார்‌. அவர்கள்‌ அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள்‌. அவரை ஏளனம்‌ செய்து, சாட்டையால்‌ அடித்து, சிலுவையில்‌ அறைந்து கொலை செய்வார்கள்‌. ஆனால்‌, அவர்‌ மூன்றாம்‌ நாள்‌ உயிருடன்‌ எழுப்பப்படுவார்‌” என்று கூறினார்‌.

மார்த்தா : என்ன? தன்னை சிலுவையில்‌ அறைந்து கொலை செய்வார்கள்‌ என்று அவரே சொன்னாரா?

இலாசர்‌: ஆம்‌. இன்னொன்றும்‌ சொன்னார்‌. "கோதுமைமணி மண்ணில்‌ விழுந்து மடியாவிட்டால்‌ அது அப்படியே இருக்கும்‌. அது மடிந்தால்தான்‌ மிகுந்த விளைச்சலை அளிக்கும்‌" என்றும்‌ இயேசு சொன்னார்‌. இன்று போதகரின்‌ உயிரற்ற உடல்‌ கல்லறையில்‌ புதைக்கப்பட்டதை நாம்‌ நேரிலே பார்த்தோம்‌.

மரியா: அப்படியென்றால்‌? கோதுமைமணி மண்ணில்‌ புதைக்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறாயா, அண்ணா?

இலாசர்‌: ஆம்‌, மரியா. ஆனால்‌, இதோடு அவருடைய ஜீவனும்‌, ஆற்றலும்‌ முடிவுற்று, அவர்‌ நம்மை பிரிந்து போய்விட்டதாக நான்‌ நினைக்கவில்லை. “கோதுமைமணி மண்ணில்‌ மடிந்தால்தான்‌ மிகுந்த விளைச்சலை அளிக்கும்‌” என்று அவர்‌ சொன்னதில்‌ ஒருபாதி நடந்துவிட்டது. மீதியும்‌ நிச்சயம்‌ நிறைவேறும்‌ என்றே தோன்றுகிறது. ரபியின்‌ மரணம்‌ ஒரு முடிவு அல்ல. மிகுந்த விளைச்சலைத்‌ தரப்‌ போகின்ற புதிய வாழ்வின்‌ தொடக்கமாக இருக்கலாம்‌. போதகர்‌ இயேசு என்றும்‌ நம்மோடு இருப்பார்‌. அவர்‌ கூறியபடி மூன்று நாள்கள்‌  நம்பிக்கையோடு காத்திருப்போம்‌.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2024, 09:54