தேடுதல்

இறைவேண்டலில் இந்தியக் கிறிஸ்தவர்கள் இறைவேண்டலில் இந்தியக் கிறிஸ்தவர்கள்   (ANSA)

இந்தியப் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஒருநாள் உண்ணாநோன்பு!

இந்திய நாட்டில் காணப்படும் பிளவுபடுத்தும் மனப்பான்மை, வெறுப்பு பேச்சு மற்றும் அடிப்படைவாத இயக்கங்கள், நமது நாட்டையும் அதன் பன்மைத்துவ நெறிமுறைகளையும் அழித்து வருகின்றன என்ற அச்சம் உள்ளது : இந்திய ஆயர் பேரவை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் மற்றும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் துன்புறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, வரும் 22-ஆம் தேதி, வெள்ளிக்கிழமையை இறைவேண்டல் மற்றும் உண்ணாநோன்பு நாளாகக் கடைபிடிக்குமாறு நாட்டின் அனைத்துக் கத்தோலிக்கரையும்  இந்திய ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது ஆசிய செய்தி நிறுவனம்.

தில்லியின் பேராயரும், இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலாளருமான Anil Couto அவர்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், நம் நாட்டிற்காக, குறிப்பாக, இந்த ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்காக, 12 மணிநேரம் தொடர்ந்து இறைவேண்டலில் ஒன்றிணைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் அச்செய்தி நிறுவனம் மேலும் கூறுகிறது

இந்த நாளில் சிறப்புத் திருப்பலி, நற்கருணை ஆராதனை, செபமாலை மற்றும் பிற வழிபாட்டுச் செயல்களில் முழு ஈடுபாட்டுடன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் பங்குபெற வேண்டுமென விண்ணப்பித்துள்ள ஆயர்கள், இந்த நாள் முழுவதும், கடவுளின் இரக்கத்தில் நம்பிக்கைவைத்து இந்தியத் திருஅவைக்காகவும், நாட்டு மக்களின் அனைத்து நலன்களுக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடுகிறது அச்செய்திக் குறிப்பு.

கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ஆயர் பேரவையின் இறுதிக் கூட்டத்தில் இந்நாள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது என்றும், அப்போது கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், இந்திய நாட்டில், சமூக நல்லிணக்கம் மிகுந்த பாதிப்புக்குளாகி உள்ளதுடன், மக்களாட்சியும் பெரும் ஆபத்தில் உள்ளதாகத் தெரிவித்ததாகவும் அச்செய்திக் குறிப்புத் குறிப்பிடுகின்றது.

மேலும் பிளவுபடுத்தும் மனப்பான்மை, வெறுப்பு பேச்சு மற்றும் அடிப்படைவாத இயக்கங்கள் நமது நாட்டையும் அதன் அரசியலமைப்பையும், எப்பொழுதும் சிறப்பித்துக் கொண்டிருக்கும் அதன் பன்மைத்துவ நெறிமுறைகளை அழிக்கின்றன என்ற அச்சம் உள்ளது என்றும்,  அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் ஒருபோதும் ஆபத்தான சூழ்நிலைக்குச் சென்றுவிடக்கூடாது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் விளக்குகிறது அச்செய்திக் குறிப்பு.

வரும் ஏப்ரல் மாதம் 19 முதல் ஜூன் மாதம் 1 வரை நாட்டின் பாராளுமன்றத்திற்கான 543 தொகுதிகளுக்கும் பல்வேறு கட்டங்களாகத் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2024, 15:05