தேடுதல்

பேராயர் Raphael Thattil பேராயர் Raphael Thattil  

யானைத் தாக்குதல்கள் குறித்து இந்தியத் தலத்திருஅவை கவலை!

தெற்கு கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு மட்டுமே 14 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர் : சீரோ மலபார் வழிபாட்டு முறை பேராயர் Raphael Thattil

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் கேராளாவில் யானைத் தாக்குதல்கள் அதிகரித்துவரும் வேளை, சிலர் மனிதர்களை விட காட்டு விலங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று பேராயர் Raphael Thattil அவர்கள் கருத்துத் தெரிவித்ததாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.

மார்ச் 24, இஞ்ஞாயிறன்று, கேரளாவின் வயநாடு மாவட்டத்தை உள்ளடக்கிய மானந்தவாடி மறைமாவட்டத்தில் நடைபெற்ற குருத்து ஞாயிறு திருப்பலிக்குத் தலைமை தாங்கிய சீரோ மலபார் வழிபாட்டு முறை பேராயர் Raphael Thattil அவர்கள் இவ்வாறு கூறியதாக அச்செய்தி நிறுவனம் உரைத்துள்ளது.

மேலும் புலம்பெயர்ந்த குடும்பத்தினர் யாவரும் வன வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள பேராயர் Thattil அவர்கள், அம்மக்கள் கடினமாக உழைத்து உணவை உற்பத்தி செய்பவர்கள் என்றும், அவர்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டதாக எடுத்துரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

வனவிலங்குகளைப் பாதுகாக்க நம்மிடையே கடுமையான சட்டங்கள் உள்ளன, ஆனாலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே மோதல் எழும் சூழலில், ​​​​மனிதர்கள் குறைந்தளவே பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார் பேராயர் Thattil என்றும் குறிப்பிடுகிறது அச்செய்தி.  

மேலும் மிருகங்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதையடுத்து, காடுகளை ஒட்டிய மலைகளின் சுற்றுப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க, கம்யூனிஸ்ட் தலைமையிலான மாநில அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, தலத்திருஅவைத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

பிப்ரவரியில் தொடங்கி நான்கு மாதங்கள் நீடிக்கும் கோடை காலத்தில், வன வளங்கள் வறண்டு போவதால், வன விலங்குகள், அதிலும் குறிப்பாக, யானைகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதால் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதாக அறிக்கைகள் கூறுகின்றன என்றும் அச்செய்திக் குறிப்பு எடுத்துக்காட்டுகிறது.

இந்த வடக்கு மாவட்டத்திலுள்ள 10 இலட்சம் மக்களில் ஏறத்தாழ 22 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்றும், இவர்கள் பெரும்பாலும் கிழக்கு வழிபாட்டு முறையான சீரோ-மலபார் தலத்திருஅவையின் உறுப்பினர்கள் என்றும் கூறும் அச்செய்திக் குறிப்பு, அவர்கள் மத்திய கேரளாவிலிருந்து 70 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் என்றும் எடுத்துக்காட்டுகிறது.

2022-23-ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஒன்றில் கேரள மாநிலத்தில் 8,873 காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்றும், இதில் 98 கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறும் அச்செய்திக் குறிப்பு, இந்த 98 பேரில் யானைகள் தாக்கிக் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 27 பேர் என்றும் சுட்டிக்காட்டுகிறது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2024, 14:09