கர்தினால் சாக்கோ : இயேசு நமக்கு அதிகம் அதிகமாகத் தேவைப்படுகிறார்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஒழுக்கநெறிக் கோட்பாடுகளைவிட தனி மனித இலாபங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டும், தடைச்செய்யப்பட்டவைகள் நியாயப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டும், இலஞ்சஊழல் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டும் வரும் இன்றைய காலக்கட்டத்தில் இயேசுவின் இருப்பு அதிகம் அதிகமாக நமக்குத் தேவைப்படுகிறது என்றார் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ.
ஒழுக்கரீதிக் கோட்பாடுகள் மதிப்பிழந்துவரும் இன்றையக் காலத்தில் நம்மை உண்மை, அன்பு, நல்லெண்ணம், மாண்பு மற்றும் அருளை நோக்கி வழிநடத்திச் செல்ல இயேசு நமக்கு அதிகம் அதிகமாகத் தேவைப்படுகிறார் என, புனித வாரத்தையொட்டிய செய்தியில் அழைப்புவிடுத்துள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், நம் மனங்களையும் இதயங்களையும் புனிதப்படுத்த வேண்டிய காலமிது என மேலும் கூறியுள்ளார்.
உடன்பிறந்த உணர்வு, ஒன்றிப்பு, மற்றும் அமைதியின் பாலமாக இருக்கவேண்டிய கல்தேய வழிபாட்டுமுறை திருஅவை தற்போது பல்வேறு சூழல்களின் மத்தியில் சிலுவைப் பாதையின் வழியேச் சென்றுகொண்டிருக்கிறது என தன் செய்தியில் கூறியுள்ள கர்தினால், நான் உலக முடிவுவரை உங்களோடு இருப்பேன் என்ற இயேசுவின் வார்த்தைகளையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு என்னும் மீட்பு மறையுண்மைகள் குறித்தும் தன் செய்தியில் குறிப்பிடும் கர்தினால் சாக்கோ, எத்தகைய சவாலான நேரங்களிலும் துன்ப வேளைகளிலும் இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை மனதில்கொண்டு செயல்படுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்