தேடுதல்

கர்தினால் Charles Bo கர்தினால் Charles Bo 

கர்தினால் போ: அமைதிக்காக திருத்தந்தையுடன் இணைந்து செபிப்போம்

நம் தொடர் செபங்களில் அப்பாவி மக்களின் அழுகுரல்களையும், ஒடுக்கப்பட்டோரின் கண்ணீரையும், மக்களின் சிதறியக் கனவுகளையும் கண்டும் காணாமல் சென்றுவிட முடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அமைதிக்கான திருத்தந்தையின் ஆழமான அழைப்பில் நாமும் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டில் முழந்தாள்படியிட்டு, நம்பிக்கை மற்றும் இணக்க வாழ்விற்காக இறைவேண்டல் செய்வோம் என மியான்மார் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் சார்ல்ஸ் முவாங் போ.

வரவிருக்கும் இயேசு உயிர்ப்பு திருவிழாவுக்கு தயரிப்புச் செய்தி ஒன்றை, ‘அமைதியின் விடியலை அணைத்துக்கொள்வோம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள மியான்மார் ஆயர்பேரவைத் தலைவர் கர்தினால் முவாங் போ அவர்கள், 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே கடந்த மூன்றாண்டுகளாக உள்நாட்டு மோதல்களால் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களை தன் செய்தியில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

நம் தொடர் செபங்களில் அப்பாவி மக்களின் அழுகுரல்களையும், ஒடுக்கப்பட்டோரின் கண்ணீரையும், மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் சிதறியக் கனவுகளையும் கண்டும் காணாமல் நாம் சென்றுவிட முடியாது என தன் செய்தியில் கூறும் கர்தினால், இளையோர் குறித்து அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார்.

தாழ்ச்சியுடன்கூடிய பணிகளின் வழியாக தன் உண்மையான அதிகாரத்தை நமக்கு எடுத்துக்காட்டாக வழங்கிய இயேசு கிறிஸ்து, அதிகாரம் என்பது மற்றவரை அடக்கி ஆள்வதில் அல்ல, மாறாக, தன்னலமின்றி மற்றவர்களுக்கு வழங்குவதில் உள்ளது என நமக்குச் சொல்லித் தருகிறார் என மேலும் தன் செய்தியில் கூறியுள்ளார் கர்தினால் போ.

அமைதியை நோக்கியப் பயணத்தில் உரையாடலும் ஒப்புரவும்  அடித்தளமாகச் செயல்படவேண்டும் என அழைப்புவிடுக்கும் திருத்தந்தையின் குரலுக்கு நாம் செவிமடுத்துச் செயல்படவேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்துள்ளார் மியான்மார் கர்தினால் போ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2024, 15:39