தேடுதல்

கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா 

காசாவில் போர் நிறுத்தம் இயலக்கூடியதே, ஆனால் விருப்பார்வமில்லை

காசாவில் வான்குடைகளின் வழி உணவு உதவிகளை வழங்குவது நிரந்தரத் தீர்வாகாது என்பதால், ஒன்றிணைந்த தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

காசா பகுதியில் போரிடும் இரு தரப்புகளும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உடனடி போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்க வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் யெருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா.

காசாவில் போர் நிறுத்தத்திற்கான தேவை எக்காலத்தையும்விட தற்போது அதிகம் அதிகமாகத் தேவைப்படுவதாக உரைத்த கர்தினால், போர் நிறுத்தம் என்பது இயலக்கூடியதே, ஆனால், அதற்கான விருப்பார்வம்தான் இங்கு குறைவுபடுகிறது என எடுத்துரைத்தார்.

காசா பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் மிகப்பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும், போரிடும் துருப்புக்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க தலத்திருஅவை எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார் கர்தினால் பிட்சபாலா.

மனிதாபிமான உதவிகளைப் பெற வரிசையில் நின்ற மக்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட முதுபெரும்தந்தை, உணவு உதவிகளும் போதிய சமையல் எரிவாயுக்களும், சுத்தக் குடிநீரும் இல்லா நிலையில், அதனோடு நோய்களும் பரவி மக்களை வாட்டி வருகின்றன என்ற ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

வான்குடைகளின் வழி மக்களுக்கு உணவு உதவிகளை வழங்குவது நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியாது என்பதால், ஒன்றிணைந்த தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதையும் வலியுறுத்தினார் கர்தினால்.

போர் நிறுத்தத்தை உடனடியாகக் கைக்கொள்ள அவசரத்தேவை உள்ளது என்பதை வலியுறுத்திய யெருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை,  எந்த ஒரு தீர்வும் நிலையான தன்மையையும், விடுதலையையும், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் மாண்பையும் உறுதிச்செய்வதாக இருக்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2024, 14:54