தேடுதல்

இறைவாக்கினர் நாத்தான், தாவீதின் பாவத்தை எடுத்துரைக்கும் காட்சி இறைவாக்கினர் நாத்தான், தாவீதின் பாவத்தை எடுத்துரைக்கும் காட்சி  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-1, நம் பாவங்கள் கழுவப்படட்டும்!

தவக்காலத்தில் இருக்கும் நாம், தாவீதைப்போல நமது பாவங்களுக்காகக் கதறி அழுவோம். கடவுள் நம் பாவங்களைக் கழுவி நம்மைத் தூய்மைப்படுத்துவார்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-1, நம் பாவங்கள் கழுவப்படட்டும்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'கடவுள் அருளும் மீட்பைக் காண்போம்!' என்ற தலைப்பில் 50-வது திருப்பாடலில் 21 முதல் 23 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டு வந்தோம். இவ்வாரம் 51-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'பாவ மன்னிப்புக்காக மன்றாடல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 19 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. இத்திருப்பாடல் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பது தலைப்பின் கீழேயே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 'பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா. தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது' என்று இத்திருப்பாடலின் நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தாவீது அரசர் இதனை ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எழுதியிருந்தாலும், இது மற்ற திருப்பாடல்களைப் போலவே பொதுவான பயன்பாட்டில் உள்ளது. இது மனந்திரும்ப விரும்பும் ஒரு பாவியின் கவலைகள் மற்றும் ஆசைகளை வெளிப்படுத்தும் விதத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.

குறிப்பாக, இப்போது நாம் தவக்காலத்தில் இருக்கின்றோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் சிலுவைப் பாதையின்போதும், சிறப்பாக புனித வெள்ளியன்றும் நாம் பாடும் மனதை உருகவைக்கும் 'தயைசெய்வாய் நாதா, என் பாவங்களை நீக்கி' என்ற பாடல் இத்திருப்பாடலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டதுதான் என்பதை நம் நினைவில் நிறுத்துவோம். ஒரு மனிதர் உடளவிலும் உள்ளத்தளவிலும் எப்படி மனமாற்றம் பெற்று இறைவனிடம் திரும்ப வேண்டும் என்பதை இத்திருப்பாடல் அழகுற எடுத்துக்காட்டுகின்றது. தான் இஸ்ரயேல் மக்களின் அரசர், தனக்கு எதையும் செய்வதற்கு அதிகாரம் உண்டு என்றெல்லாம் தாவீது அரசர் ஆணவம் கொள்ளாமல் உரியாவின் மனைவி பத்சேபாவுடன் புரிந்த பாவத்திற்காக மனமுடைந்து அழுது, கண்ணீர் சிந்தி, கடவுளிடம் மன்னிப்புக் கேட்கின்றார். அவரிடம் விளங்கிய எளிமை, மனத்தாழ்மை, பணிவு, இறைநம்பிக்கை ஆகிய உயர்ந்த படிப்பினைகளை இத்திருப்பாடல் நமக்குக் கற்றுத்தருகிறது. இத்திருப்பாடலில் தாவீது அரசரின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும், நம் பாவங்களுக்காகவும் மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேராவலை நம் உள்ளத்தில் தூண்டி எழுப்புகின்றது. இப்போது இத்திருப்பாடலின் முதல் மூன்று இறைவார்த்தைகளைக் குறித்துத் தியானிப்போம். இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிப்போம்.  "கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது" (வச 01-03)

கடவுளின் பேரன்பும் அளவற்ற இரக்கமும்

முதலாவதாக,  "கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்" என்கின்றார் தாவீது அரசர். கடவுளின் பேரன்பு அளவிட முடியாதது. அது நிபந்தனையற்றது, எந்த நிலையிலும் மன்னித்து ஏற்கும் தன்மைகொண்டது, தான் செய்யும் காரியத்திற்கு எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காதது, அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போன்றது. பெறுவதைவிட கொடுப்பதில் இன்பம் காணும். கோபத்தைவிட இரக்கத்தை வெளிப்படுத்தக் கூடியது. இத்தகைய சிறப்புகளைக் கொண்டதனால்தான், “கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்” என்கின்றார் தாவீது அரசர். மேலும் 103-வது திருப்பாடலில் "ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை" (காண்க. திபா 103:8-10) என்றும் எடுத்துக்காட்டுகின்றார்.

இயேசு கூறும் 'காணாமற்போன மகன்'  உவமையில் கடவுளின் பேரன்பு வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். தன்னைவிட்டுப் பிரிந்துபோன மகனுக்காக வழிமேல் விழிவைத்துத் காத்திருக்கும் ஒரு தந்தையின் (கடவுளின்) பேரன்பையும், அம்மகன் திரும்பிவந்தபோது எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்ட அவரின் அளவற்ற இரக்கத்தையும் காண்கின்றோம். அப்பகுதியை இப்போது வாசிப்போம். 'உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில், என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார் (காண்க லூக் 15:20-24). இங்கே தாவீது அரசர், "உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்" என்று கூறுகின்றார். அதாவது, எனது குற்றங்களை மன்னித்தருளும், அவற்றை முற்றிலும் நீக்கிவிடும், அகற்றிவிடும், போக்கிவிடும், அவற்றை மறந்துவிடும், அவற்றை நினைவில் கொள்ளாதேயும் என்ற அர்த்தத்தில்தான், 'என் குற்றங்களைத் துடைத்தருளும்' என்கின்றார் தாவீது.

நல்வினை தீவினை

இரண்டாவதாக, "என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்" என்கின்றார் தாவீது. தீவினை என்பதற்கு கொடுஞ்செயல்; தீய வினை, பாவம், என்று அர்த்தப்படுகிறது. நல்வினை தீவினை என வினைகள் இரண்டு வகைப்படுகின்றன. இவற்றில் தீவினை 9 வகைகளைக் கொண்டுள்ளது. கொலை, களவு, காமம் ஆகிய தீய விருப்பம் மூன்றும் உடலிலே தோன்றுவன. பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல் என்று நால்வகைக் குற்றங்களும் சொல்லிலே தோன்றுவன. வெஃகுதல் (விரும்புதல்), வெகுளுதல், மயக்கம் இம்மூன்றும் உள்ளத்தில் தோன்றுவன. இவற்றில் உடலில் தோன்றும் தீவினைகளான கொலையும் காமமும் தாவீது புரிந்த பாவத்துடன் தொடர்புடையவை.

தாவீதிடம் வெளிப்பட்ட காமம்

தாவீது அரசர் தன்னிடம் விளங்கிய காமவேட்கையின் மிகுதியால் இத்தகையதொரு பாவத்தைச் செய்கிறார். அவரிடம் காமவேட்கை எப்படி வெளிப்பட்டது என்பதை  சாமுவேலின் இரண்டாம் புத்தகம் தெளிவாகக் கூறுகின்றது. அப்பகுதியை இப்போது வாசிப்போம். ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை தாவீது மாடியிலிருந்து கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள். தாவீது அவள் யாரென்று கேட்க, ஆளனுப்பினார். “அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா” என்று கூறினர். தாவீது தூதரை அனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாத விலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தன் இல்லம் சென்றாள். அப்பெண் கருவுற்றுத் தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள் (காண்க 2 சாமு 11:2-5). இங்கே தாவீது தன்னிலை உணராதவராக இருக்கின்றார் என்பதைப் பார்க்கின்றோம். அதாவது, தான் ஓர் அரசர், அதுவும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு இறைவாக்கினர் சாமுவேலால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் என்பதையெல்லாம் மறந்துவிடுகிறார். காமம் அவரது கண்களை மறைத்துவிட்டது என்றே நாம் சொல்ல வேண்டும். இதில் இன்னொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, அப்பெண் இன்னொருவரின் மனைவி என்பதை அறிந்திருந்தும் கூட தாவீது இப்பாவத்தை செய்யத் துணிகின்றார்.

கொலைக்கு இட்டுச்சென்ற காமம்

பெத்சேபா தாவீதிடம் ஆளனுப்பி தான் கருவுற்றிருப்பதாகத் தெரிவித்ததும், அதனை மறைப்பதற்காக பலவழிகளில் முயற்சி செய்கின்றார் தாவீது. அவளது கணவர் உரியாவை அழைத்து, அவருக்குப் போதை ஊட்டி, அவரை வீட்டிற்கு அனுப்பி பெத்சேபாவுடன் உறவுகொள்ள செய்து, அவள் கருவுற்றிப்பதற்குத் தான் காரணம் அல்ல என்பதையெல்லாம் செய்வதற்குத் தொடர்ந்து முயன்று பார்க்கின்றார் தாவீது.  ஆனால் அது கைகூடாமல் போனதால், இறுதியில், தாவீது உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தக் கூறி, அவர் வெட்டுண்டு மடிவதற்குக் காரணமாகிறார் (வச.14-17). இத்தகையதொரு செயல் அன்றைய அரச வாழ்கைகையில் மட்டுமல்ல, இன்றைய நமது அரச வாழ்விலும் நிகழ்ந்து வருவதைக் காண்கின்றோம்.

தாவீதிடம் விளங்கிய தாழ்ச்சி

இவ்வேளையில் நாம் தாவீதிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்று உண்டு. அதுதான் இறையச்சம். இதுதான் அவரை அரச நிலையிலிருந்து சாதாரண மனித நிலைக்குத் தாழ்த்துகிறது. இஸ்ரயேல் மக்களை ஆளும் மாபெரும் அரசராகிய தனக்கு எதையும் செய்ய உரிமையுண்டு என்று மமதை கொள்ளாமல், தன்னையே முழுவதுமாகத் தாழ்த்திக்கொண்டு, கடவுளின் பார்வையில் இது மாபெரும் பாவம் என்பதை அவர் உணர்ந்தார். அவர் செய்த பாவம் அவரது மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. இது அவரது காமத்தின் அகோரத்தையும், அதனால் விளைந்த கொலையையும் பாவத்தையும் அவரது கண்முன்னே அடிக்கடி கொண்டுவந்து நிறுத்தியது. அதனால்தான், "என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது" என்று கடவுள் முன் கதறி அழுகின்றார் தாவீது. ஆகவே, தவக்காலத்தில் இருக்கும் நாம், தாவீதைப்போல நமது பாவங்களுக்காகக் கதறி அழுவோம். பேரன்பும் பேரிரக்கமும் கொண்ட நம் கடவுள் நமது குற்றங்களையும் பாவங்களையும் கழுவி நம்மைத் தூய்மைப்படுத்துவார். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2024, 12:59