விவிலியத் தேடல் : திருப்பாடல் 51-2, கடவுளின் தீர்ப்பில் நீதி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'நம் பாவங்கள் கழுவப்படட்டும்!' என்ற தலைப்பில் 51-வது திருப்பாடலில் 1 முதல் 3 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். தாவீது பெத்சேபாவுடன் புரிந்த பாவம், அதன் விளைவாக என்றுமுள்ள ஆண்டவரிடம் அவர் கண்ணீர்சிந்தி தனது பாவங்களுக்காக மனம் வருந்தியது குறித்துத் தியானித்தோம். குறிப்பாக, தான் இஸ்ரயேல் மக்களின் மாபெரும் அரசன் என்பதை விடுத்து, தாழ்மையான மனதுடன் கடவுளிடம் பணிந்து தன் பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டியதைக் குறித்தும் சிந்தித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 4 முதல் 5 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது இறைபிரசன்னதில் அவ்வார்த்தைகளை பக்திநிறைந்த மனதுடன் வாசிப்போம். “உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். (வச 4-5)
முதலாவதாக, “உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்" என்கின்றார் தாவீது. இன்றைய உலகில் பல பாவச் செயல்கள் மனசாட்சியற்ற நிலையில்தான் நிகழ்கின்றன. பொய்ச் சொல்லுதல், புறம்கூறுத்தல், குறிப்பாக, கொலைவெறிச் செயல்கள் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். நாம் செய்யும் இந்த அநியாயச் செயலோ அல்லது பாவச் செயலோ யாருக்குத் தெரிந்துவிடப் போகிறது, இதையெல்லாம் கடவுள் வந்து பார்க்கப்போகிறாரா என்ற அறியாமையாலும் ஆணவத்தாலும் இது நிகழ்கின்றது. ஆனால் அதேவேளையில், 'நீ செய்யும் இந்தப் பாவத்தை மனிதர் வேண்டுமானால் பார்க்காமல் போகலாம், ஆனால் கடவுள் எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். உனக்கு அதற்குத் தக்க தண்டனை தராமல் விடமாட்டார்' என்று அநீதிகள் இழைக்கப்படும் ஏழை எளிய மக்கள் புலம்புவதைப் பார்த்திருக்கின்றோம். ஆக, நாம் பாவத்திலிருந்து விடுபட வேண்டுமாயின் முதலில் இறையச்சம் நமக்கு வேண்டும். இந்த இறையச்சம்தான், ‘நான் போகும் பாதை தவறு, நான் செய்யும் செயல் கடவுளுக்கு உகந்ததல்ல, இதைக் அவர் பொறுத்துக்கொள்ளமாட்டார், இது மிகப்பெரும் பாவச் செயல், இது நம் வாழ்வை பாழ்ப்படுத்திவிடும்’ என்று கடவுள் வாழும் நமது மனசாட்சியைத் தட்டியெழுப்பி அறிவுறுத்துகின்றது. அப்படியென்றால், கடவுளுக்கு எதிரான ஒரு பாவச் செயலை செய்ய முற்படும்போதே அது அவரது பார்வையில் தீயதாக மாறிவிடுகிறது. அதாவது, தான் பத்சேபாவுடன் செய்த பாவச் செயல் கடவுளின் பார்வைக்கு மறைவாக இருக்கவில்லை என்பதையும், அவருக்கு எல்லாம் தெரியும் என்பதையும் நன்கு உணர்கிறார் தாவீது. மேலும் அரசனாக இருந்தாலும், அது ஆண்டியாக இருந்தாலும் பாவம் செய்யும் யாரும் கடவுளின் பார்வையிலிருந்து தப்ப முடியாது என்பதை ஆழமாக அறிந்தவராக, “உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்" என்கின்றார் தாவீது அரசர். இங்கே அவரிடம் அதிகாரத் திமிரையோ அல்லது ஆணவத் திமிரையோ நாம் காண முடியவில்லை. இன்றைய உலகின் தலைவர்கள் அல்லது தங்களைக் கடவுளுக்கும் மேலாகக் காட்டிக்கொள்பவர்கள் அனைவரும், எத்தனையோ அநியாயச் செயல்களையும் பாவச் செயல்களையும் அடுக்கடுக்காய் அரங்கேற்றிவிட்டு மமதையோடு சுற்றித் திரிகின்றனர். ஆனால் நமது தாவீது அரசர், இறையச்சம் கொண்டவராக, தான் ஓர் அரசர் என்பதைக் காட்டிலும், ஒரு சாதாரண கடவுளின் பணியாள் என்ற தாழ்மையான மனதுடன் தனது பாவங்களை ஏற்றுக்கொள்கின்றார். இது இன்றைய உலகத் தலைவர்களும் மன்னர்களும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டி மிகச்சிறந்ததொரு பாடம்.
இரண்டாவதாக, "உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்" என்று உரைக்கின்றார் தாவீது. ‘நெற்றிக்கண் பட்டாலும் குற்றம் குற்றமே’ என்று கூறுவதுபோல, அது அரசனே ஆனாலும் தவறு தவறுதான் என்ற அர்த்தத்தில் இங்கே இந்த வார்த்தைகள் பொருள்கொள்ளப்படுகின்றன. தாவீது அரசர் பத்சேபாவுடன் பாவம் புரிந்த பிறகு, கடவுள் இறைவாக்கினர் நாத்தானை அவரிடம் அனுப்பி அவரது குற்றத்தை எடுத்துரைக்கச் செய்கின்றார். அப்போது நாத்தான் ஆட்டுக்குட்டி கதையைக் கூறி தாவீதின் பாவத்தை எடுத்துக்காட்டுகின்றார். 'நீயே அந்தப் பாவத்தைச் செய்தவன் என்றும், 'நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தாய்' என்றும் தாவீதிடம் கடுமைக் காட்டுகின்றார் நாத்தான். மேலும் “இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இரையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்! குறிப்பாக, "இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது; ஏனெனில், நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்.’ இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வர வழைப்பேன்" என்ற கடவுளின் வார்த்தையை நாத்தான் எடுத்துரைத்தபோதுதான், கடவுள் நீதிவழுவாதவர், அவரது நீதித் தீர்ப்பிலிருந்து அரசனே ஆனாலும் தப்பமுடியாது என்பதை உணர்கின்றார் தாவீது. மேலும் ஒரு பணக்காரன் ஓர் ஏழைக்கு இழைக்கும் அநீதியை கடவுள் வெறுமனே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்க மாட்டார் என்பதையும், அதற்கான தண்டனையை அவர் வழங்கியே தீருவார் என்பதையும் ஆழமாக அறிந்துணர்த்துக்கொள்கின்றார். அதனால்தான், தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். அப்போது நாத்தான் தாவீதிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். ஆயினும், ஆண்டவரின் எதிரிகள் அவரை இழிவாக எண்ணும்படி நீ இவ்வாறு செய்ததால் உனக்குப் பிறக்கும் மகன் உறுதியாகவே சாவான்” என்று சொன்னார். இதையெல்லாம் மனதில் கொண்டவராகத்தான், "உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்" என்று கூறுகின்றார் தாவீது அரசர். புனித பவுலடியாரும் தனது பாவ நிலைகுறித்து கூறும்போது, ‘பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்’. — இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. — அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்கவேண்டும் என்பதற்காக முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார்" (காண்க. 1 திமோ 1:15-16) என்று உரைக்கின்றார். ஆக, நாம் எந்த நிலையில் இருந்தாலும் முழுமனத்தாழ்மையுடன் நாம் பாவங்களை ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுகின்றோம்.
மூன்றாவதாக, "இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்" என்கின்றார் தாவீது அரசர். இங்கே, கடவுளுக்கு எதிராக இழைத்த பாவத்தின் விளைவாக, தனது வாழ்வின் தொடக்கமே பாவத்தால் பாழ்ப்பட்டுப்போனதாகப் புலம்புகின்றார் தாவீது. பாவத்தின் குற்ற உணர்வால் இங்கே அவர் புழுபோல துடிக்கின்றார். தனது பாவத்தால் எல்லா நற்குணங்களும் தன்னைவிட்டு அகன்றுபோய்விட்டதாக எண்ணிக் கதறுகின்றார். தான் தொடங்கும் ஒவ்வொரு செயலிலும் இந்தப் பாவத்தின் விளைவு வெளிப்படுவதாக எண்ணுவதாலேயே, "இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்" என்று விம்மி வெடிக்கின்றார். அதற்கடுத்து, "பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்" என்று தாவீது கூறும் வார்த்தைகள், கடவுளுக்கு எதிராகத் தான் இழைக்கப்போகும் பாவத்தின் விளைவு தனது தாயின் கருவில் உருவானபோதே தொற்றிக்கொண்டுவிட்டது என்ற அர்த்தத்தில் இவ்வாறு கூறுவதாக நாம் பொருள்கொள்ளலாம். அதுமட்டுமன்றி, இன்று தான் புரிந்த பாவத்தின் விளைவு அன்றே தனது தாயின் கற்பின் புனிதத்தை மாசுபடுத்திவிட்டது என்று கூட தாவீது கருதியிருக்கலாம்.
யோபுவும் இதேமாதிரியான கருத்தொன்றை வெளிப்படுத்துகிறார். தான் அனுபவிக்கும் துன்பதுயரங்களைத் தாங்க முடியாத அவர் இவ்வாறு தனது வாழ்வை சபிக்கின்றார். இது தாவீது அரசரின் வார்த்தைகளோடு ஒப்புநோக்கத்தக்கன. ஆனாலும், யோபு ஒரு நீதிமான். எவ்விதத்திலும் பாவத்தால் தன்னைக் கறைபடுத்திக்கொள்ளாத ஓர் உத்தமர் அவர். அவரே இவ்வாறு துயருற்று அழுகிறார் என்றால், பாவத்தில் வீழ்ந்த தாவீதின் கதறல்களும், புலம்பல்களும், மன்னிப்பு வேண்டல்களும் எத்துணை மிகுதியாய் இருந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்ப்போம. அப்பகுதியை இப்போது வாசிப்போம். “ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே! அந்த நாள் இருளாகட்டும்; மேலிருந்து கடவுள் அதை நோக்காதிருக்கட்டும்; ஒளியும் அதன்மேல் வீசாதிருக்கட்டும்" என்றும், "கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா?" என்றும் கூறுகின்றார். (காண்க. யோபு 3:1-4,11). மேலும் மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரயேல் மக்கள், வாக்களிப்பட்ட நாடான கானான் நாட்டை வந்தடைவதற்கு முன்பாக, கடவுளுக்கும் மோசேக்கும் எதிராக முணுமுணுத்து பாவம் புரிந்தபோதெல்லாம், "கடவுளே உமக்கு எதிராக நாங்கள் பாவம் செய்தோம். எங்களை மன்னியும்" என்று புலம்பி அழுவதைப் பார்க்கின்றோம். கடவுளும் அவர்கள்மீது மனமிரங்கி அவர்களை மன்னித்து ஏற்கின்றார்.
துறவி ஒருவரிடம் ஆசி பெற வந்த ஒருவர், "சாமி தாங்கள் யாருடனும் கோபம் கொள்வது இல்லை, சண்டை போடுவதும் இல்லை. எப்போதும் அன்பும் அமைதியும் குடிகொண்டவராக இருக்கின்றீர்கள். எப்படித் தங்களால் மட்டும் பாவமின்றி வாழ முடிகிறது? ஏன் எங்களால் மட்டும் அப்படி இருக்க முடியவில்லை" என்று கேட்டார். அதற்கு அந்தத் துறவி, "என் கதை இருக்கட்டும். இன்னும் ஏழு நாள்களில் நீ இறந்து விடப்போகிறாய்" என்றார். அத்துறவி முற்றும் அறிந்தவர் என்பதைத் தெரிந்திருந்த அந்த மனிதர், "கடவுளே என் தலைவிதி இப்படியா ஆக வேண்டும்" என்று அழுது புலம்பிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார். தன் மனைவி மக்களை அழைத்து, தான் இன்னும் ஒரு வாரத்திற்குள் இறந்துவிடுவேன் என்றும், தனக்குப் பிறகு சொத்தினை அவர்கள் எப்படிப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் அந்நேரமுதல், தன் உறவுகளோடும், மற்ற அனைவருடனும் நல்லுறவைப் பேணினார். தான் செய்த பாவங்களை எல்லாம் நினைத்து நினைத்து அழுதார். ஆறுநாள் கடந்து ஏழாம் நாள் வந்தபோது, துறவியே அவர் வீட்டிற்கு வந்தார். "அன்பரே, நீ இந்த ஏழு நாட்களில் யார் யாரிடம் சண்டை போட்டாய், என்னென்ன பாவங்கள் செய்தாய், சொல்" என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "சாவு என் கண் முன்னால் நிற்கும்போது பாவம் செய்ய எனக்கு ஏது சாமி நேரம்" என்று பதில் சொன்னார். உடனே துறவி, "மரணம் எப்பொழுதும் என் கண் முன்னால் நின்று கொண்டிருப்பதாக நினைப்பதால்தான் நான் பாவங்கள் செய்வதில்லை. அதற்கான காரணம் உனக்கு இப்பொழுது புரிகிறதா? உனக்கு இதை விளங்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்னும் ஏழு நாட்களில் உனக்கு மரணம் என்று பொய் சொன்னேன். கவலைப்படாதே. இதேபோன்று நல்லவனாக, நிம்மதியாக இரு," என்று சொன்னார். ஆக, பாவமின்றி நாம் வாழ வேண்டுமென்றால், பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை எப்போதும் நம் கண்முன்னே நிறுத்திக்கொள்ள வேண்டும். மரணமில்லா பெருவாழ்வு பெற்று கடவுளோடு நாம் நிறைவாழ்வில் வாழ வேண்டுமென்றால், பாவத்தை விட்டொழிக்க இன்றே உறுதியேற்போம். அதற்கு இந்தத் தவக்காலம் நமக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையட்டும். ஆகவே, தவத்தின் வழியில் நொறுங்கிய உள்ளமுடன் இறைவனை நோக்கித் திரும்புவோம். பாவத்தைப் போக்கி நம்மைப் புதுப்பித்துக்கொள்வோம். அதற்கான இறையருளுக்காக இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்