பல மாதங்களாகக் கல்வாரி அனுபவங்களைப் பெறுகின்றோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில் தொடர்ந்து நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆனாலும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவில் தளராத நம்பிக்கையும் எதிர்நோக்கும் கொண்டுள்ளனர் என்றும் கடந்த பல மாதங்களாக மக்கள் கல்வாரி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் Gabriel Romanelli.
SIR எனப்படும் இத்தாலிய கத்தோலிக்கச் செய்தி அமைப்பு ஒன்றிற்கு வழங்கியுள்ள நேர்காணலில் இவ்வாறு உரைத்துள்ள காசாவின் திருக்குடும்ப பங்குத்தளத்தின் பங்குத் தந்தை அருள்பணியாளர் Romanelli அவர்கள், அங்கு அமைதிக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாதச் சூழலில் மக்கள் எந்தளவுக்கு மனமுடைந்து போயிருக்கிறார்கள் என்பதைக் குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார்.
இந்தக் கொடூரமான மோதலில் ஏற்கனவே 32,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களில் 12,000 பேர் குழந்தைகள் என்றும் அந்நேர்காணலில் தனது பெரும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் அருள்பணியாளர் Romanelli.
காசா நகரத்தில் உள்ள இப்பங்குத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், இடிபாடுகள், குப்பைகள் மற்றும் பொதுச் சாக்கடை வெடிப்புக்கள் யாவும் மலைபோல குவிந்து கிடக்கின்றன என்று அதன் சூழலை விளக்கியுள்ளார் அருள்பணியாளர் Romanelli.
மேலும் அங்குத் தொடர்ந்து பெய்யும் மழை ஒருபுறம் ஆசீர்வாதமாக இருந்தாலும், மறுபுறம் அது அதிகமான ஈரப்பதத்தை ஏற்படுத்துவதால் சுகாதாரமற்ற சூழலை ஏற்படுத்துகிறது என்றும், அதேவேளை, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருக்கும் சிதைந்த உடல்களின் நாற்றத்தை அது அதிகப்படுத்துகிறது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
அருள்பணியாளர் Romanelli, கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று போர் தொடங்கியதிலிருந்து காசா நகரத்திற்குத் திரும்ப முடியாமல் எருசலேமில் தங்கியுள்ள வேளை, அப்பங்கிலுள்ள உதவிப் பங்குத்தந்தை அருள்பணியாளர் Youssef Asaad அவரிடமிருந்தும் மக்களிடமிருந்தும் பெறும் தகவல்களின் அடிப்படையில் SIR செய்திகளுக்கு இந்த நேர்காணலை வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்