ஆப்பிரிக்காவில் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கரின் (SECAM) ஆயர் பேரவை ஏற்பாடு செய்த சிந்தனைகருத்தங்கம் ஒன்றில் உரையாற்றியவர்கள் இயற்கைவள சுரண்டலுக்கும் அங்கு நிகழும் மோதல்களுக்கும் இடையே உள்ள தொடர்பை எடுத்துக்காட்டி, ஆப்பிரிக்காவில் கனிம மற்றும் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதை நிறுத்துமாறு அனைத்துலகச் சமூகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மார்ச் 8 முதல் 10-ஆம் தேதிவரை ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் தலைநகர் அக்ராவில் “இயற்கை மற்றும் கனிம வளங்களைச் சுரண்டுவதன் பின்னணியில் ஆப்பிரிக்காவின் மோதல்கள்" என்ற மையப்பொருளில் நிகழ்ந்த கருத்தரங்கம் ஒன்றில் இவ்வாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர் அதன் சொற்பொழிவாளர்கள்.
பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகளால் இயற்கை வளங்கள் ஈவிரக்கமின்றி அழிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று அழைப்புவிடுத்த இக்கருத்தரங்கின் பங்கேற்பாளர்கள், இயற்கை வள சுரண்டல் என்பது, மோதல்கள் மற்றும் கட்டாய இடப்பெயர்வுகள் உட்பட ஆப்பிரிக்க மக்களுக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காங்கோ நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது சூளுரைத்த, ‘ஆப்பிரிக்காவை விட்டு விடுங்கள்! அதன் மூச்சைத் திணறடிக்காதீர்கள், இது பறிக்கப்பட வேண்டிய சுரங்கமோ அல்லது சூறையாடப்பட வேண்டிய நிலப்பரப்போ அல்ல என்றும், ஆப்பிரிக்கா, அதன் சொந்த வாழ்விடத்தின் கதாநாயகனாக இருக்கட்டும்’ என்றும் கூறிய வார்த்தைகளையே இக்கருத்தரங்கின் பேச்சாளர்களும் பிரதிபலித்தனர்.
ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான திருப்பீடத் துறை மற்றும் அமெரிக்க கத்தோலிக்க நிவாரணப் பணி மற்றும் ஜெர்மனியை தளமாகக் கொண்ட Misereor என்ற பிறரன்பு பணியமைப்பு உட்பட பல கத்தோலிக்க அமைப்புகளுடன் இணைந்து இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்