பல்சுவை - செபம், தவம், தானத்தை உள்ளடக்கிய தவக்காலம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தவக்காலம் அருளின் காலம், மனமாற்றாத்தின் காலம் என்று நாம் பலவாறாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். செபம் தவம் தானம் என்னும் மூன்று நிலைகளில் நாம் சிறக்க அழைப்பு விடுக்கும் இந்த தவக்காலத்தின் நான்காம் வாரமாகிய இன்று செபம் தவம் தானம் என்னும் கிறிஸ்துவின் பண்புகளில் நாம் சிறக்க தேவையான கருத்துக்களைப் பற்றி இன்றைய நம் பல்சுவையில் காணலாம்.
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்கா தெனின்.என்பார் திருவள்ளுவர். தானமு தவமும் இவ்வுலகில் நிலைத்து நிற்க மழை வேண்டும் என்பதை உணர்த்துகிறது இக்குறள். தானமும் தவமும் இல்லாவிடில் இத்தவக்காலம் சிறப்பு பெறாது என்கிறது நம் கத்தோலிக்க திருச்சபை. தானம் என்பது முன் பின் தெரியாத ஒருவருக்கு செய்யப்படும் ஒரு உதவி. இதைத்தான் தெரிந்து செய்தால் அது தர்மம் தெரியாமல் செய்தால் தானம் என்பார்கள். ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதார நிலை அடைப்படையில் பிறருக்கு தானம் செய்ய வேண்டும். சாரிட்டி என்று அழைக்கப்படும் ஆங்கில வார்த்தியயின் மூலப்பொருள் கரித்தா என்பதாகும். இதயம் அல்லது இதயத்திலிருந்து புறப்படும் ஒரு நற்செயல். முழுமையான அன்பும் அக்கறையும் கொண்டு செய்யப்படும் ஒரு செயல். தொடக்க திருச்சபை கிறிஸ்தவர்களின் வாழ்வே தானத்திலும் தர்மத்திலும் தான் நிலைத்திருந்தது. தங்களிடம் இருந்த அனைத்தையும் பொதுவில் போட்டு அவரவர்க்கு தேவையானதை பகிர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்தனர். எதிலும் குறைவு படாமல் நிறைவாக வாழ்ந்தனர்.
இயேசுவின் வாழ்வே தானம் தான் . தன்னுடைய வாழ்வையே நமக்கு தானமாக கொடுத்தவர் அவர். ஐந்து அப்பம் இரண்டு மீனை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்ததும் இந்த தானத்தின் அடிப்படையிலேயே. தங்களிடம் இருந்ததை அனைவரும் அனைவரோடும் பகிரும்படி பணித்தார். அவர் தொடங்கிய அன்ன தானம் ஒருவர் பின் ஒருவராக அங்கு கூடியிருந்த அனைவரையும் செய்ய வைத்தது. மனிதன் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பது உணவு. எனவே தான் தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்கின்றனர். பொன் பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி அடைவதில்லை. ஆனால் ஒருவன் வேண்டும் என்று கேட்ட வாயால் போதும் என்று சொல்லி மனம் வயிறு நிறைந்து எழுவது உணவில் மட்டும்தான். அன்னதானம் இறையருளின் நிறைவு தரும். மஞ்சள் தானம் மங்களம் தரும். ஆடை தானம் பூரண மகிழ்வு தரும். நீர் தானம் நிம்மதி தரும். இப்படி நாம் செய்யும் தானங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன் தரும். வாழ்க்கையில் நாம் நடக்க வேண்டும் என்று விரும்பும் அனைத்து செயல்களையும் நடத்திக் காட்டும் சக்தி தானத்திற்கு உண்டு. பசுமையான காய்கறிகள் பழங்கள் வாங்கி ஒருவேளை உணவு கூட உண்ண முடியாமல் தவிக்கும் மக்களுக்கு தானம் செய்யும் போது வாழ்க்கையின் உயர்விற்கு நாம் முன்னேறிச்செல்கின்றோம். இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டதை இல்லாதவரோடு பகிர்கின்றோம். பகிரும் போது அது பாதியானாலும் பகிரப்பட்ட பின் அதன் பலன் இரண்டு மடங்காகிறது. தானத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் செய்த தானத்தை எண்ணிக்கை வைக்ககூடாது. செய்ததை பிறரிடம் சொல்லவும் கூடாது. பணம் உணவோ உடையோ எது அதிகம் இருந்தாலும் அதை இல்லாதவரோடு பகிரும் குணத்தில் வளர்வோம்.
செபம், தவம், தானம் ஆகிய மூன்று பண்புகளைக் கடைப்பிடித்தல் மட்டும் தவக்காலம் அல்ல. மாறாக, இந்த மூன்று பண்புகளின் வழியாக அதிமான பாஸ்கா மகிழ்ச்சிக்கு நாம் மனம் திறப்பதே தவகாலம். 'தவம்' என்ற வார்த்தை 'தபஸ்ய' என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வருகிறது. 'தபஸ்' என்றால் 'வெப்பம், தணல், தீ' என்று பொருள். நம் உடலில் வெப்பம் உள்ளவரைதான் நாம் உயிரோடு இருக்கிறோம். ஆக, தவம் என்பது நம் உடலின் வெப்பத்தை சீர் செய்வது அல்லது வெப்பத்தை உணர்வது.
எனவே இன்றைய நாளில் தவக்காலத்தின் கருப்பொருள்களான செபம் தவம் தானம் பற்றிய தனது கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்முனைவர் அ. கிறிஸ்டோபர் HGN. நற்செய்தியின் தூதுவர் சபையைச் (Heralds of Good News) சார்ந்த அருள்முனைவர் கிறிஸ்டோபர் அவர்கள் ஊடகக்கல்வியில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது தமிழகத்தின் சேலம் மறைமாவட்டத்தில் உள்ள கூட்டாத்துப்பட்டி, புனித செபஸ்தியார் பங்குத்தளாத்தில் பங்கு தந்தையாகப் பணிபுரிந்து வருகின்றார் தந்தை அவர்களை தவக்காலம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இத்தவக்காலத்தில் இருப்பதை இல்லாதவரோடு பகிர்வோம். தானங்கள் பல செய்து தரணி சிறக்க வாழ்வோம். அன்னதானம் புண்ணியம் சேர்க்கும். ரத்த தானம் உயிர் காக்கும். கல்வி தானம் தலைமுறை காக்கும் நிதானம் உன்னை காக்கும். தியானம் செய்தால் கூட கிடைக்காத மன நிம்மதி தானம் செய்யும் போது கிடைத்து விடுகிறது. தன்னிலை உணர்ந்து தன்னை திருத்துதலே தபம். பசித்திருப்பவரும் தனித்திருப்பவருமே தன்னை யார் என்று உணர்கின்றார். செல்வராக இருந்தும் தன்னை வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்ட இயேசுவை அரணாக் கொள்வோம். ஆகட்டும் என்று தன்னையே துறந்த அன்னை மரியை அடிச்சுவடாக கொண்டு தப நிலையின் மேன்மையினை உணர்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்