தவக் காலம் 4-ஆம் ஞாயிறு : இருளகற்றி ஒளியின் மக்களாக வாழ்வோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. 2 குறி 36:14-16,19-23 II. எபே 2:4-10 III. யோவா 3:14-21)
அதுவொரு பழமையான பங்கு. அப்பங்கில் ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியில் மூன்றாவது வாசகமான நற்செய்தியை பங்குத்தந்தை வாசித்தார். அன்றைய நற்செய்தி வாசகம் யோவான் நற்செய்தியிலிருந்து (யோவா 3:14-21) வாசிக்கப்பட்டது. பங்குத்தந்தை மறையுரையைத் தொடங்கப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அப்போது பங்குத்தந்தை, இன்று எனக்குப் பதிலாக பல ஆண்டுகளாக நற்செய்திப் பணியாற்றி வரும் ஒருவர் உங்களுக்கு மறையுரையாற்றுவார் என்று கூறி அமர்ந்தார். அம்மனிதருக்கு 75 வயதிருக்கும். ‘பங்குத்தந்தை ஏன் இவ்வாறு செய்கிறார், இது புது பழக்கமாக இருக்கிறதே’ என்று வியந்தனர் அப்பங்கு மக்கள். அந்த முதியவர் பீடத்திற்கு வந்து தனது மறையுரையைத் தொடங்கினார். "கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இன்றைய நற்செய்தியில் நாம் கேட்ட, “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்" என்ற இயேசுவின் வார்த்தையை நமது தியானச் சிந்தனைகளுக்கு எடுத்துக்கொள்வோம். நமது இறைத்தந்தை எந்தளவுக்கு நம்மீது அன்பும் பரிவிரக்கம் கொண்டவர் என்பதை இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இதனை விளக்கும் விதமாக நிகழ்ந்த உண்மை நிகழ்வொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அந்த நிகழ்வு இதுதான். ஒரு அழகான கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு தந்தை தனது ஒரே மகனுடன் வாழ்ந்து வந்தார். இந்தப் பையன் பிறந்த மூன்றே மாதங்களில் அவரின் மனைவி இறந்துபோனார். ஆனாலும், அவர் மறுமணம் செய்துகொள்ளாமல் இந்தக் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார். அவன் வளர்ந்து 8-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவனது அப்பா அவ்வூரிலிருந்த ஆற்றில் பரிசல் ஓட்டுபவர். ஒருநாள் அந்தப் பயன், "அப்பா நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள். ஆகவே, எனது நண்பனைக் கூட்டி வருகின்றேன் எங்கள் இருவரையும் உங்கள் பரிசலில் அழைத்துச் செல்லுங்கள். அவன் எனக்கு மிகவும் பிரியமான சிநேகிதன். நாங்க இரண்டுபேரும் ஒன்றாக சேர்ந்து போக ஆசைப்படுகிறோம்" என்றான். அப்பாவும், "சரி நாளை அழைத்து வா" என்றார். அடுத்த நாள் மூவரும் அந்த ஆற்றில் பரிசலில் சென்றுகொண்டிருந்தனர். அவ்விருவரும் பரிசலில் இருந்தபடியே ஆற்றின் அழகை இரசித்துக்கொண்டிருந்தனர். பரிசல் நடு ஆற்றைக் கடந்துகொண்டிருந்தபோது திடீர் வெள்ளம் ஏற்பட்டு அது ஒரு சுழற்சியில் சிக்கித் தவித்தது. தொடர்ந்து வந்த பெருவெள்ளத்தில் அப்பரிசல் கவிழ்ந்து விட்டது. அந்தத் தந்தை அவர்கள் இருவரையும் கரங்களில் பிடித்துக்கொண்டு எப்படியாவது கரையில் சேர்த்துவிடவேண்டுமென போராடிக்கொண்டிருந்தார். ஆனால் அது முடியாத காரியமாகிப்போனது. இப்போது அவர்களில் யாரையாவது ஒருவனைத்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ‘மகனா அல்லது மகனின் நண்பனா’ என்ற நிலை ஏற்பட்டபோது, அந்தத் தந்தை சிறிதும் தயங்காமல் ஆனால் உள்ளத்தில் பெருத்த வலியுடன் தனது சொந்த மகனை ஆற்றில் விட்டுவிட்டு தனது மகனின் நண்பனான அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார்" என்று அந்த நிகழ்வைக் கூறி முடித்தார் அந்தப் பெரியவர். அப்போது அங்கிருந்த ஒரு கல்லூரி மாணவன், "ஐய்யா, இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது ஆனால், நடைமுறைக்கு சாத்தியம் இல்லை" என்றான். அதற்கு அந்தப் பெரியவர், "ஏன் அப்படிக் கூறுகிறாய்" என்று கேட்டார். "ஆமாம் ஐய்யா, எந்தவொரு தந்தையும் அப்படி செய்யவே முடியாது. அப்படி செய்யவும் முன்வர மாட்டார். அது மிகவும் கடினம்" என்றான். அப்போது அந்தப் பெரியவர், "கண்டிப்பாக முடியும். ஏனென்றால் அந்தத் தந்தை வேறுயாருமல்ல அது நான்தான்” என்றார். அப்போது கோவிலில் இருந்த அனைவரும் கண்ணீரமல்க அவரை வியப்புடன் பார்த்தனர். மேலும் தொடர்ந்து பேசிய அந்தப் பெரியவர், "அன்று நான் காப்பாற்றிய என் மகனின் நண்பன் யாரு தெரியுமா, அவர்தான் உங்கள் பங்குத் தந்தை" என்றார். அப்போது ஆலயத்தில் இருந்த அனைவரும் இன்னும் வியப்புக்குள்ளாகி கடவுளைப் போற்றிப்புகழ்ந்தனர். அவர்கள் எழுப்பிய கரவொலி அடங்க நீண்ட நேரமாயிற்று.
இன்று நாம் தவக் காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமைக்குள் அடியெடுத்து வைக்கின்றோம். இன்றைய வாசகங்கள், இருளான உலகத்திலிருந்து கடந்து சென்று ஒளியான உலகத்திற்குள் நுழைய நமக்கு அழைப்புவிடுகின்றன. இன்றைய நற்செய்தியில் இறைத்தந்தையின் தியாகமிக்க பேரன்பை எடுத்துக்காட்டும் நமதாண்டவர் இயேசு, ஒளியின் மக்களாக உண்மைக்கேற்ப வாழ்வதற்கு நமக்கு அழைப்பு விடுக்கிறார். “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்" என்று இயேசு நிக்கதேமிடம் கூறும் வார்த்தைகளில் அவரின் மனுவுருவெடுத்தல், மரணம், உயிர்ப்பு ஆகிய மூன்றும் அடங்கியுள்ளன. அதாவது, யோவானின் மொத்த நற்செய்தியும் இயேசு கூறிய இந்த ஒற்றை வார்த்தையில் அடங்கியுள்ளது. அதனால்தான் மார்ட்டின் லூத்தர், இவ்வார்த்தையை 'The Gospel in Miniature' என்று வரையறை செய்தார். பொதுவாக ஒத்தமை நற்செய்திகளைவிட யோவான் நற்செய்தியை புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கும். காரணம், அது அதிதீவிரமான இறையியல் கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. சிறப்பாக, இது உரையாடல் மொழியை கொண்டுள்ளது. இயேசுவும் நிக்கதேமும், சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும், பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல் ஆகிய பகுதிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்த நற்செய்தி எழுதப்பட்டதன் நோக்கமே, ‘இயேசுவே உண்மையான மெசியா’ என்பதை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டும் என்பதுதான். இதனை நற்செய்தியின் இறுதியில் எடுத்துரைக்கின்றார் யோவான் நற்செய்தியாளர். "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன" (காண்க. யோவா 20:31)
இருவேறு உலகங்கள்
யோவான் நற்செய்தியாளர் இருவேறுவிதமான உலகத்தை இந்நற்செய்தி முழுதும் வெளிப்படுத்துகிறார். முதலாவது, இருளான உலகம் (பொய்யான). இரண்டாவது, ஒளிநிறைந்த உலகம் (உண்மையான). இருளான உலகம் சாத்தானுக்கு உரிய மதிப்பீடுகளைக் கொண்டதாகவும், ஒளிநிறைந்த உலகம் இறையாட்சிக்குரிய, அதாவது, மெசியாவுக்குரிய மதிப்பீடுகளைக் கொண்டதாகவும் காட்டுகின்றார். இதே கருத்தைத்தான் தனது திருமடல்களிலும் வெளிப்படுத்துகின்றார் யோவான். இன்னும் குறிப்பிட்டுக் கூறவேண்டுமெனில், மெசியாவை ஏற்காதோர் இருளான உலகத்தைச் சேர்ந்தவர்களாகவும், இயேசுதான் உண்மையான மெசியா என ஏற்போர் ஒளிநிறைந்த உலகத்தைச் சார்ந்தவர்களாகவும் எடுத்துக்காட்டுகின்றார். குறிப்பாக, இந்நற்செய்தியின் தொடக்கத்திலேயே, “அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” (1:4) என்று வார்த்தையான கடவுள் மனுவுருவெடுத்தல் பற்றி கூறும்போது சுட்டிக்காட்டுகின்றார் யோவான்.
ஒளிநிறைந்த உலகம்
இன்றைய நற்செய்தியில் இயேசு நிக்கதேமிடம் இந்த இருவேறு உலகம் குறித்து தெளிவுபட விளக்குகின்றார். "ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால், அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்" என்கின்றார் இயேசு. மேலும் “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (8:12) என்றும் கூறுகின்றார்.
அதுமட்டுமன்றி, மக்கள் கூட்டத்தினர் அவரைப் பார்த்து, “மெசியா என்றும் நிலைத்திருப்பார் எனத் திருச்சட்ட நூலில் கூறியுள்ளதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அப்படியிருக்க, மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும் என நீர் எப்படிச் சொல்லலாம்? யார் இந்த மானிடமகன்?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “இன்னும் சிறிது காலமே ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்கள்மேல் வெற்றி கொள்ளாதவாறு ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்து செல்லுங்கள். இருளில் நடப்பவர் எங்கே செல்கிறார் என்பது அவருக்குத் தெரியாது. ஒளி உங்களோடு இருக்கும்போதே ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள்” என்றார். (காண்க. யோவா 12:34-36). இந்த வார்த்தைகள் வழியாக, இருளான இவ்வுலகத்தை ஒளிர்விக்க வந்த உண்மையான மெசியா தானே என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டுகின்றார். இன்று நாம் காணும் பரிசேயரான நிக்கதேம் கூட ஓர் இரவு வேளையில்தான் இயேசுவைச் சந்திக்க வருவதாக யோவான் பதிவு செய்கின்றார் (3:2). அப்படியென்றால், அவர் யூதத் தலைவர்களில் ஒருவராக இருந்தும் கூட, தான் இயேசுவை சந்திப்பது யாருக்காவது தெரிந்துவிட்டால், மற்றவர்கள் தன்னைத் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தால் அவர் இரவு நேரத்தில் இயேசுவைச் சந்திக்க வருகின்றார் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்வோம்.
இருளான உலகம்
உண்மையான மெசியாவாகிய தன்னை ஏற்காத யூதர்களை இருளான உலகத்தைச் சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் சாத்தானுக்கு உரியவர்கள் என்றும் கடுமையாகச் சாடுகின்றார் இயேசு. “கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார். நான் சொல்வதற்குச் செவி சாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை. சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில், அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம். நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை. (8:42-45) என்கின்றார்.
இறைநம்பிக்கை ஒளிநிறைந்த வாழ்வைத் தரும்
இன்றைய முதல் வாசகத்தில், ஒளியாகிய கடவுளை வெறுத்து இருளான வாழ்வுக்குரிய பாவ வாழ்வில் விழுகின்றனர் இஸ்ரயேல் மக்கள். ஆண்டவராகிய கடவுள் தனக்காக உருவாக்கி இருந்த எருசலேம் திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தும் அளவிற்கு அவர்களின் தீச்செயல்கள் அமைகின்றன என்பதைப் பார்க்கின்றோம். அதுமட்டுமன்றி, கடவுளின் தூதர்களை ஏளனப்படுத்தி, அவர் அனுப்பிய இறைவாக்கினர்களின் வார்த்தைகளைப் புறக்கணிக்கும் அளவிற்குப் பாவம் செய்கின்றனர். ஆனால் அதற்குப் பரிசாக அவர்களுக்குக் கிடைத்ததோ அடிமை வாழ்வு. இருந்தபோதிலும் அவர் தம் மக்கள்மீது அன்பும் பேரிரக்கமும் கொண்டு பாரசீக மன்னர் சைரசு வழியாக அவர்களை மீண்டும் புதிய வாழ்விற்கு அழைத்து வருகிறார். அவ்வாறே, இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கும் மோசேவுக்கும் எதிராக வெகுண்டெழுந்து பாவம் செய்தபோது கொள்ளி வாய்ப் பாம்புகளால் கடிபட்டு இறந்துபோயினர். ஆனால் அவர்கள் தங்களின் தீச்செயல்களுக்காக மனம் வருந்தியதால் கடவுளின் கட்டளைப்படி மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார் (காண்க எண் 21:9) என்று வாசிக்கின்றோம். அதாவது, இருள்நிறைந்த உலகத்திலிருந்து விடுதலை தரும் ஒளிநிறைந்த வாழ்விற்கு இட்டுச் செல்வதன் அடையாளமாக இந்த வெண்கலப் பாம்பு விளங்கியது. இதனைக் குறித்தும் நிக்கதேமிடம் எடுத்துக்காட்டும் இயேசு, "பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்" என்கின்றார். அதாவது, தன்னை உண்மை மெசியாவாக ஏற்றுக்கொண்டு தன்னில் நம்பிக்கை கொள்வோர் அனைவரும் ஒளிநிறைந்த நிலைவாழ்வுக்குத் தங்களைக் காப்பாற்றிக்கொள்வர் என்று நிக்கதேமிடம் விளக்குகிறார் இயேசு. இதன் அடிப்படையில்தான், "நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார் புனித பவுலடியார்.
நாம் நமது பலவீனங்களால் அடிக்கடி பாவத்தில் வீழ்ந்துவிடுகிறோம். ஆகவே, பாவ காரியங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கும்போதெல்லாம் நாம் இருளில் நடப்பவர்களாக, இருளில் வாழ்பவர்களாக, இருளுக்குரிய செயல்களைப் பரப்புரை செய்பவர்களாக மாறுகின்றோம், ஆனால் உண்மை மெசியாவாகிய இயேசுவின்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு அவரை நோக்கித் திரும்பி வரும்போது இருளான உலகத்திலிருந்து கடந்து சென்று ஒளிநிறைந்த வாழ்விற்குள் நுழைகிறோம் என்று அர்த்தப்படுகிறது. ஆக, ‘பாஸ்கா’ என்ற ‘கடத்தல்’ என்பது அடிமைத்தளையிலிருந்து விடுதலைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், சாவிலிருந்து வாழ்விற்கும் கடந்து செல்லும் ஒரு பயணம் என்பதை இக்கணம் உணர்வோம். தவக் காலத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நாம், இருள் நிறைந்த வாழ்விலிருந்து (சாத்தானிலிருந்து) கடந்து ஒளிநிறைந்த வாழ்விற்குள் (இயேசுவுக்குள்) செல்வோம். இருளுக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு ஒளிக்குரிய செயல்களை அணிந்துகொள்வோம். இருளகற்றி ஒளியின் மக்களாக வாழ்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்