தேடுதல்

பாடுகளின் குருத்து ஞாயிறு பாடுகளின் குருத்து ஞாயிறு  

பாடுகளின் குருத்து ஞாயிறு : வேள்வித் தீயில் தியாக மரணமேற்போம்!

சமுதாய நலனுக்காக, சமத்துவத்திற்காகப் போராடிய புரட்சியாளர்கள் அனைவரும் சர்வாதிகாரத்தால் கொல்லப்பட்டிருக்கலாம், ஆனாலும் அவர்கள் விதைக்கப்பட்டியிருக்கிறார்கள்.
பாடுகளின் குருத்து ஞாயிறு : வேள்வித் தீயில் தியாக மரணமேற்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. எசா 50:4-7     II.  பிலி 2:6-11     III. மாற் 14:1-15:47)

இன்று நாம் ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். தவக்காலத்தின் இறுதிக்கட்டமான புனித வாரத்திற்குள் நுழைகின்றோம். வேள்வித்தீயில் இயேசு ஏற்றுக்கொண்ட தியாக மரணத்தை இன்று நாம் போற்றுகின்றோம். இந்த  உலகில் எத்தனையோ பேர் பிறக்கின்றனர், எத்தனையோ பேர் மரணிக்கின்றனர். ஆனால் எல்லோருடைய வாழ்வும் மனித வரலாற்றில் பதிவு செய்யப்படுவதில்லை. யாரெல்லாம் சமுதாய மாற்றத்திற்காக, முழுமனித விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையே கையளித்தார்களோ அவர்கள்தான் இன்றும் நினைவுகூரப்படுகின்றனர். இதனைத்தான் கவிஞர் கண்ணதாசன் "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்" என்று எழுதினார். மனிதர்களில் மூன்றுவகையினர் உள்ளதாக உளவியல் ஆய்வு கூறுகிறது. முதல் வகையினர் ‘கீழ்த்தரமான மனிதர்கள்.’ இவர்கள் எப்போதும் பிறரைப் பற்றி குறைகூறிக்கொண்டே இருப்பவர்கள். எல்லாவற்றையும் குறையாகப் பார்ப்பவர்கள். இவர்கள் சமூகத்தைப் பிளவுபடுத்தக் கூடியவர்கள். இவர்களால் யாருக்கும்  பயனில்லை. இரண்டாம் வகையினர் ‘சாதாரண மனிதர்கள்.’ இவர்கள் எப்போதும் நிகழ்ச்சிகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். அதாவது, அந்தக்காலத்தில் ‘எங்கள் தாத்தா இதைச் செய்தார். அதன்பிறகு எங்கள் அப்பா இதை செய்தார். இப்போது நாங்கள் இதை செய்கிறோம்’ என்று அவர்கள் குடும்பத்தார் செய்ததையெல்லாம் பேசி தம்பட்டம் அடித்துக்கொள்வர். இவர்களாலும் யாருக்கும் பயனில்லை. மூன்றாம் வகையினர் ‘உயர்ந்த மனிதர்கள்.’ இவர்கள் எப்போதும் இந்தச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கான, விடுதலைக்கான காரியங்களைக் குறித்துச் சிந்திப்பவர்கள், அவற்றைச் செயல்படுத்துவர்கள். அதற்காகத் தங்கள் இன்னுயிரையும் கையளிக்க முன்வருபவர்கள். இவர்கள்தான் இம்மண்ணகத்தை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் நீடித்து நிலைத்து வாழ்பவர்கள்.

இயேசு என்னும் மீட்பர் ஆன்மிக மற்றும் சமூதாய விடுதலைக்காகப் போராடியப் புரட்சியாளர் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வு, அவரது ஆன்மிகப் புரட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஓய்வுநாளைக் காட்டிலும் மனிதரே முக்கியம் என்று கூறி ஓய்வுநாள்களில் நோயாளரைக் குணப்படுத்தியது அவரது சமுதாய விடுதலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இயேசு மனுவுருவெடுத்தலின் நோக்கமே பாவத்தில் வாழ்ந்த அனைவரையும் மீட்டு, கடவுளின் பிள்ளைகளாக்க வேண்டும் என்பதுதான். "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!" (காண்க யோவா 17:21) என்றும், "இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்" (காண்க லூக் 13:29) என்று கூறும் இயேசுவின் வார்த்தைகளில் ஆன்மிக மற்றும் சமத்துவ சமுதாயத்திற்கான விடுதலைக் கனவு ஒலிப்பதைப் பார்க்கின்றோம். யூதச் சமுதாயத்தில் 'தூய்மை-தீட்டு' என்ற இரண்டு வேறுபாடுகள் மட்டுமே நிலவின. வேற்றினத்தவருடன் கலக்காத யூதர்கள் 'தூய்மையானவர்கள்' என்றும், அப்படி கலந்து வாழ்ந்தவர்களை 'தீட்டானவர்கள்' அதாவது, சமாரியர்கள் என்றும் அழைத்தனர் யூதர்கள். இதனை யோவான் நற்செய்தியாளர் மிகத் தெளிவாகப் பதிவு செய்கின்றார். இயேசு “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கேட்டார். அச்சமாரியப் பெண் அவரிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். ஏனெனில், யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை (காண்க யோவா 4:9) என்று வாசிக்கின்றோம்.

இயேசுவின் இலட்சிய மரணத்திற்குப் பல காரணங்கள் இருப்பினும், அவற்றில் மூன்று மிகவும் முக்கியமானவை. முதலாவது, அவர் எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தியது. இது யூத குருத்துவத்திற்கு மிகப்பெரும் சவாலாக அமைந்ததுடன், யூதப் பொருளாதாரத்தையும் கேள்விக்குட்படுத்தியது. இரண்டாவது, ஓய்வுநாள் சட்டத்தை மீறியது. காரணம், யூதர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மிகமிகக் கடுமையாகக் கடைபிடித்தனர். "ஓய்வுநாளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். அதன் தூய்மையைக் கெடுப்பவன் கொல்லப்படவே வேண்டும். அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்." (காண்க விப 31:14) என்ற மோசேயின் சட்டத்தைக் கண்மூடித்தனமாகக் கடைபிடித்தனர் யூதர்கள். இதன் உள்ளார்ந்த அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் இயேசு அதன் நடைமுறை சிக்கலை புரிந்துகொள்ள அவர்களை அழைக்கின்றார். அவர் அவர்களிடம், “உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே, ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை” (காண்க 12:11). மூன்றாவது, இயேசு நோயாளர், வரிதண்டுபவர், சமாரியர், மற்றும் விலைமகளிருடன் மேற்கொண்ட மேசை உறவு. இதுமட்டுமன்றி, இயேசுவின் நற்செயல்களால் எல்லாரும் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டனர். இதுவும் யூதர்களுக்குப் பயத்தைக் கொடுத்தது. அதனால்தான், 'தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, “இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்? இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்து விடுவார்களே!” என்று பேசிக் கொண்டனர்' (காண்க. யோவா 11:47-48) என்று வாசிக்கின்றோம். ஆகவே, இந்த மூன்றும் யூதர்களுக்கு மிகப்பெரும் அளவில் கோபத்தை ஏற்படுத்தியது மட்டுமன்றி, அவரது இலட்சிய மரணத்திற்கும் காரணங்களாக அமைந்தன. ஆனாலும், மூன்றாவது காரணமான, ‘இயேசுவின் மேசை உறவே’ (Table Fellowship) அவரது சாவுக்கு உடனடிக் காரணமாக (immediate reason) அமைந்தது என்று விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர்.

உலகப்போரின்போது நாசிச ஜெர்மனி நாட்டில் ஹிட்லர் முதியவர்கள், நோயுற்றவர்கள், கைகால் இழந்தவர்கள், பேச்சற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டோர் அனைவரையும் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டாராம். காரணம், 'இவர்களால் நமக்கு ஒரு பயணும் இல்லை' என்பது ஹிட்லரின் வாதம். யூதர்களைப் பொறுத்தளவில் இயேசு அவர்களுக்குத் தேவை இல்லாத ஒரு நபராகவே கருதப்பட்டார். காரணம் அவர்களுடைய சமத்துவமற்ற, அநீதிகள் நிறைந்த கொள்கைகளுக்கு எதிராக இயேசு செயல்பட்டார். அவர்களால் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவரை உடனடியாகத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அன்று மட்டுமல்ல, இன்றும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடி சமத்துவ சமுதாயம் படைக்க விரும்பும் அனைவருக்குமே இயேசுவுக்கு நேர்ந்த அதே கதிதான் நடக்கிறது.

இரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny)  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். இந்தச் செய்தி உலகத் தலைவர்களையும், குறிப்பாக நீதியையும், நேர்மையையும், சமத்துவத்தையும் உலகெங்கினும் வலியுறுத்திப் போராடும் பலரையும்  பெரும் வேதனையில் ஆழ்த்தியது. அதற்குக் காரணம், இது இயற்கையான மரணமல்ல, படுகொலை என்பதுதான். 47 வயது நிரம்பிய நவல்னி, இரஷ்ய அதிபர் புதினை கடுமையாக எதிர்த்தவர் என்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே, நவல்னியின் இறப்புக்குக் காரணம் விளாதிமிர் புதின் தான் என உலகத் தலைவர்கள் பலர் குற்றம்சாட்டினர். அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், “இதனை படுகொலை என்றே நம்புவதாகவும், நவல்னிக்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவரது மரணம் புதின் மற்றும் அவரது சகாக்களின் விளைவு என்பதில் சந்தேகமில்லை” எனவும் குறிப்பிட்டார். மேலும் “இது ஒரு படுகொலை என்றே நம்புவதாகவும், பல முறை நவல்னியை கொல்ல புதின் முயன்றுள்ளார் என்றும், இரஷ்ய மக்கள் விரும்பும் சுதந்திரத்தை நவல்னி பெற்றுத்தருவார்” என்ற அச்சமே இதற்குக் காரணம் என்றும் பிரித்தானிய அரசும் சுட்டிக்காட்டியது. குறிப்பாக, இரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் அரசுத் தலைவர் ஜெலென்ஸ்கி, "நாட்டின் எதிர்கட்சித் தலைவராய் இருக்கட்டும், அல்லது அவருக்கு இலக்காகத் தோன்றும் வேறு யாராக இருந்தாலும், யாரை வேண்டுமானாலும் புதின் கொன்றுவிடுவார்" என்று சாடியிருந்தார். சர்வாதிகாரத்தை எதிர்த்து யார் போராடினாலும் மரணம் மட்டுமே பரிசாகக் கிடைக்கும் என்பது உலகத்தலைவர்கள் மற்றும் புரட்சியாளர்கள் பலரின் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அதன் பட்டியலில் தற்போது நவல்னியும் இணைந்திருக்கின்றார் என்பதே நிதர்சனமான உண்மை.

மோசடி, நீதிமன்ற அவமதிப்பு, அறக்கட்டளை மூலமாக முறைகேடாக பணம் பெற்றது, தீவிரவாதத்தைத் தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாசிக் கொள்கைகளுக்குப் புத்துயிர் கொடுத்தல் மற்றும் ஆபத்தான செயல்களுக்குக் குழந்தைகளைத் தூண்டுதல் எனப் பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் நவல்னி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியாக 19 ஆண்டுகள் அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, இரஷ்யாவின் கார்ப் நகரத்தில் உள்ள ஆர்க்டிக் சிறையில் நவல்னி அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிறையில் வெள்ளிக்கிழமை உடற்பயிற்சி சென்ற நவல்னி திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததாகவும், இதன்பின் மருத்துவர்கள் அளித்த முதலுதவிக்குப் பின் அவரச ஊர்தியில் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், எனினும் சிகிச்சை பலனளிக்காததால் மரணமடைந்தாகவும் இரஷ்ய சிறைத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

அண்மைய ஆண்டுகளில் உலகெங்கும் அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர்தான் நவல்னி. ‘எதிர்கால இரஷ்யா’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் மற்றும் வழக்கறிஞர். ஊழலை - அதிலும் இரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் செய்து வருவதாக நம்பப்படும் ஊழலை தீவிரமாக எதிர்த்தவர். எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான இவர், இரஷ்ய நிர்வாகத்தைச் சீர்திருத்த வேண்டும், ஊழல் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர். இரஷ்யாவில் மக்களுக்கிடையே இவருக்கு வளர்ந்துவரும் செல்வாக்குக் காரணமாக, புதினின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டில் ஊழலுக்கு எதிராகப் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்ததால் உலக அளவில் பேசப்பட்டவர் நவல்னி.  இவருக்கு youtube-பில் 60 இலட்சத்துக்கு மேற்பட்டும் twitter-இல் 20 லட்சத்துக்கு மேற்பட்டும் ஆதரவாளர்கள் இருப்பது மக்களிடையே அவருக்கிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. இவ்விரு சமூக ஊடகங்களைப் பயன்படுத்திதான் இரஷ்ய அரசின் ஊழல்கள் தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் அவர் வெளிப்படுத்தினார். இதைப் புதினால் தாங்கிக்கொள்ள முடியாததால் அவரைச் சிறையில் அடைத்தார் என்றே கூறப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது நவல்னி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நஞ்சு  வைக்கப்பட்டிருப்பதை ஜெர்மனி அரசு உறுதிப்படுத்தியது. நரம்புகளைப் பாதித்து செயலிழக்கச் செய்யும் நோவிசோக் என்ற கொடிய நஞ்சு அவரது உடலில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். தன்னைக் கொல்ல நடந்த முயற்சிக்குப் புதின்தான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.

2021-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நவல்னி மீண்டும் இரஷ்யாவுக்குத் திரும்பினார். உடனே, பரோல் விதிமுறைகளை மீறிவிட்டார் என்று குற்றம்சாட்டி, அவரை மீண்டும் சிறையில் அடைந்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து, மக்கள் மீண்டும் நாடு முழுக்கப் புதினுக்கு எதிராகப் பெருந்திரளாக அணிவகுத்துப் போராட்டம் நடத்தினர். இதனால் சிறையிலிருந்து வெளியே வந்தார். இதையடுத்து, அதே ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி, ஏற்கெனவே ஒரு வழக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டனைத் தீர்ப்புக்கு உயிர் கொடுத்து, அவரை மீண்டும் சிறையில் அடைத்தது அரசு. விளாதிமிர் ஒப்ளாஸ்ட் என்ற இடத்தில் இரண்டரை ஆண்டு கட்டாய உடலுழைப்புச் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் கொடுமைப்படுத்தப்பட்டார். இதனால் நவல்னியைக் கைது செய்ததைக் கண்டித்து அந்நாட்டில் மாபெரும் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. மக்களாட்சியை மீட்கவும், ஊழலை ஒழிக்கவும், தொடர்ந்து பாடுபடும் அவரை மக்களாட்சியை விரும்புவோர் ஆதரித்தனர். மறுபுறம் புதினுக்கு அவர் பெரும் தலைவலியாக இருந்தார். புதின் செய்ததாகக் கூறப்படும் ஊழலை மட்டுமல்ல, சர்வாதிகாரப் போக்கையும் அவர் எதிர்த்தார். இந்நிலையில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறைச் சிறப்பிக்கும் நமக்கு நவல்னியின் தியாக மரணம் மிகவும் பொருத்தமுடையதாக இருக்கின்றது. "நான் சாகடிக்கப்படலாம், ஆனாலும் தோற்கடிக்கப்படமாட்டேன்" என்றார் புரட்சியாளர் சேகுவேரா. சமுதாய நலனுக்காக, சமத்துவத்திற்காகப் போராடிய புரட்சியாளர்கள் அனைவரும் சர்வாதிகாரத்தால் கொல்லப்பட்டிருக்கலாம், ஆனாலும் அவர்கள் விதைக்கப்பட்டியிருக்கிறார்கள். ஆகவே, நாமும் இயேசுவின் வழியில் தியாக மரணமேற்கத் தயாராவோம். இவ்வருளுக்காக இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2024, 16:00